Election bannerElection banner
Published:Updated:

கதவு உடைப்பு; ஹார்டு டிஸ்க் திருட்டு! -துரைமுருகன் பங்களாவில் நள்ளிரவில் கைவரிசை

துரைமுருகன் பங்களா
துரைமுருகன் பங்களா

ஏலகிரி மலையிலுள்ள துரைமுருகனுக்குச் சொந்தமான பங்களாவில் கொள்ளை நடந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது, இந்த பங்களாவில்தான் குடும்பத்துடன் தங்கியிருந்தார் துரைமுருகன்.

துரைமுருகன்
துரைமுருகன்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்துள்ள புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள். இந்தநிலையில், கொள்ளையர்கள் சிலர் நேற்று இரவு துரைமுருகனின் பங்களாவுக்குள் மிகத் துணிச்சலாகப் புகுந்துள்ளனர்.

பங்களாவின் கதவை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் பணம், நகைகள் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர். விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். இன்று காலை தூங்கி எழுந்த பணியாளர்கள் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயினர்.

உடைக்கப்பட்ட கதவு
உடைக்கப்பட்ட கதவு

உடனடியாக துரைமுருகன் தரப்புக்கும், காவல்துறையினருக்கும் தகவல் சென்றது. கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்ற போலீஸார் தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். தேர்தலின்போது பட்டுவாடா செய்ய முடியாத பெரும் தொகையை பங்களாவில் பதுக்கிவைத்திருப்பதாக தவறான தகவல்கள் வெளியில் உலாவிய காரணத்தால், கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பதாக காவல்துறை வட்டாரம் சொல்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு