Election bannerElection banner
Published:Updated:

`நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’ - துரைமுருகன் பங்களாவில் கடுப்பாகி எழுதிய கொள்ளையர்கள்

துரைமுருகன் பங்களா
துரைமுருகன் பங்களா

துரைமுருகன் பங்களாவில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், எதுவுமே சிக்காத கடுப்பில், ‘நூறு ரூபாய்கூட வைக்க மாட்டியா?’ என்று நக்கலாக எழுதிவிட்டுச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்குப் பெரிய சொகுசு பங்களா இருக்கிறது. துரைமுருகன் அடிக்கடி இங்கு வந்து ஓய்வெடுப்பது வழக்கம். ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார், அவரின் மனைவி சங்கீதா இருவரும் பங்களாவில் தங்கி பராமரிப்பு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.

துரைமுருகன் பங்களா
துரைமுருகன் பங்களா

இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் துரைமுருகனின் பங்களாவுக்குள் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு பணம், நகை உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள் ஏதும் சிக்காததால், ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார். இந்த நிலையில், கொள்ளையர்கள் குறித்து ஒருசில தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் எழுதிய வாசகம்
கொள்ளையர்கள் எழுதிய வாசகம்

துரைமுருகன் பங்களா என்றவுடன் பெருத்த ஆசையுடன் உள்ளே புகுந்த கொள்ளையர்களுக்கு எதுவுமே இல்லை என்றதும் கடுப்பாகிவிட்டனர். அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து சுவரில், ‘‘ஒரு நூறு ரூபாய் வெக்க மாட்டியா?’’ என நக்கலாக எழுதியுள்ளனர். அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’’ என எழுதி கண்ணுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இவ்வளவு துணிச்சல் யாருக்கு வந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்கிறது காவல்துறை தரப்பு.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு