Published:Updated:

18 லட்சம் பணம், கிலோ கணக்கில் தங்கம்! -பல்லடத்தை அதிரவைத்த வங்கிக் கொள்ளை

கொள்ளைபோன எஸ்.பி.ஐ வங்கி
கொள்ளைபோன எஸ்.பி.ஐ வங்கி

வாடிக்கையாளர்களின் முழு விசாரணை மேற்கொண்டால்தான் கொள்ளை போனவற்றின் முழு மதிப்பும் தெரியவரும்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையம் பகுதியில் எஸ்.பி.ஐ வங்கி இருக்கிறது. இந்தப் பகுதியில் ஏராளமான பனியன் கம்பெனிகள், நூற்பாலைகள் இருப்பதால், அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று காலை வங்கியைத் திறந்த ஊழியர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர்.

வங்கியின் பின்பக்க ஜன்னல்கள் உடைக்கப்பட்டும் வங்கியின் பின்புறமுள்ள கம்பி வேலிகள் அறுக்கப்பட்டும் கிடந்திருக்கின்றன. ஏதோ நடக்கக்கூடாத சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர்வதற்குள் பணம், நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைந்து அலங்கோலமாகக் காட்சியளித்திருக்கின்றன. உடனடியாக ஊழியர்கள் வங்கி மேலாளர் மற்றும் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர்.

வங்கி முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீஸார்
வங்கி முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

உடனே திருப்பூர் எஸ்.பி திஷா மிட்டல், பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டு விசாரணை நடத்தியிருக்கின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டும், தடயங்கள் சேகரிக்கப்பட்டும் குற்றவாளிகள் குறித்து ஆராய்ந்திருக்கின்றனர். வங்கிக் கிளை மேலாளர் சிவராமகிருஷ்ணனிடம் விசாரித்ததில் வங்கி லாக்கரில் இருந்த 18,93,000 ரூபாய் கொள்ளை போயுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் லாக்கர்களில் இருந்த பணம், நகை போன்றவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருக்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தக் கொள்ளை விவகாரம் தெரிந்ததும் வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு குவிய ஆரம்பித்தனர். கொள்ளை போன எங்களுடைய நகைகளையும் பணத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் இன்று காலை வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர்.

வங்கியின் பின் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் முதலில் வங்கியினுள் இருந்த 8 சிசிடிவி கேமராக்களையும் உடைத்திருக்கின்றனர். உள்ளே நுழைந்து நகை, பணங்களை கொள்ளையடித்ததோடு வீடியோ பதிவு செய்த சாதனத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். வங்கியில் இருந்த 116 லாக்கர்களில் சுமார் 30 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. லாக்கர்களில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என வங்கி ஊழியர்கள் மிரண்டு கிடக்கின்றனர்.

வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்
வங்கியை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்

லாக்கர் உரிமையாளர்களை வரவழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் முழு விசாரணை மேற்கொண்டால்தான் கொள்ளை போனவற்றின் முழு மதிப்பும் தெரியவரும். காமநாயக்கன்பாளையம் போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வர, பல்லடம் டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கடந்த அக்டோபர் மாதமே இந்த வங்கியில் ஒரு கொள்ளை முயற்சி அரங்கேறியிருக்கிறது. லாக்கர்களையும் ஏ.டி.எம்மையும் உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் வெறும் கையுடன் ஓடியிருக்கின்றனர். அதன்பின்னர் வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போட்டிருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பாதுகாப்பு விலக்கப்பட, இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. கடந்தமுறை வெறும் கையுடன் ஓடிய கொள்ளையர்களே, இந்தமுறை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.

வங்கி
வங்கி

சம்பவம் நடந்த சனிக்கிழமை இரவு தலைமை வங்கியுடன் இணைக்கப்பட்ட கண்காணிப்புக் கேமராவின் சர்வர் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அப்போதே வங்கி நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தால், சம்பவ இடத்துக்குச் சென்று கொள்ளையர்களை வளைத்துப் பிடித்திருக்கலாம். மேலும், ஏற்கெனவே கொள்ளை முயற்சி நடைபெற்றிருக்க, பாதுகாப்பை வாபஸ் பெற்றது ஏன்..? வங்கி ஊழியர்களின் அஜாக்கிரதையாலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது என வாடிக்கையாளர்கள் கொதித்துக் கிடக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு