Published:Updated:

`43 வீடியோக்கள், 20 பக்க புகார், கொலை மிரட்டல்..!’ - பாலியல் வழக்கில் கைதான சுவாமி சின்மயானந்த்

Chinmayanand
Chinmayanand

சட்டக்கல்லூரி மாணவிமீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் குறித்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் சட்டக்கல்லூரி. இதன் நிறுவனத் தலைவராக இருக்கிறார் சுவாமி சின்மயானந்த். சந்நியாசியாக இருந்தாலும் அந்தப் பகுதியின் பிரபல அரசியல்வாதி. மூன்று முறை நாடாளுமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்வான இவர், வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் 23 -ம் தேதி சின்மயானந்த்தின் கல்லூரியில் சட்டம் படிக்கும் மாணவி ஒருவர், முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த வீடியோ பதிவில், ``நான் ஷாஜகான்பூர் மாவட்டத்திலிருந்து வருகிறேன். எஸ்.எஸ் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து வருகிறேன். புனிதமான சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கு பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்துள்ளார்.

Chinmayanand
Chinmayanand

அவர் தற்போது என்னைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர்தான் எனக்கு உதவ வேண்டும். அவர் என் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். பிரதமர் மோடி, தயவுசெய்து எனக்கு உதவுங்கள். இதைச் செய்பவர் ஒரு சந்நியாசி. அவர், `காவல்துறை, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட பலரும் எனக்குப் பழக்கம். அவர்கள் அனைவரும் எனக்காகத்தான் நிற்பார்கள். அவர்கள் யாரும் எனக்கு எதிராகச் செயல்படமாட்டார்கள்' என மிரட்டுகிறார்” எனக் கூறியிருந்தார்.

`பயிற்சியாளரின் பாலியல் தொல்லை!’ - வீடியோ மூலம் காட்டிக்கொடுத்த 15 வயதுச் சிறுமி

இந்த வீடியோவில் சின்மயானந்த் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் வீடியோவை வெளியிட்ட மறுநாளே அந்தப் பெண்ணைக் காணவில்லை. பின்னர் `தன் மகள் காணாமல் போனதற்குக் காரணம் சின்மயானந்த்' என மாணவியின் தந்தை புகார் அளிக்கவே, விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. முதல்கட்டமாக மாணவி கடத்தப்பட்டுள்ளதாகக் கூறி போலீஸார் சின்மயானந்த் மீது வழக்குப்பதிவு செய்து மாணவியைத் தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே, சுமார் 13 நாள்களுக்குப் பிறகு ராஜஸ்தானில் மாணவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஷாஜகான்பூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

SS Law college
SS Law college

``ஒருவருடமாக சின்மயானந்த்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் பல பெண்களும் அவரால் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள்'' என நீதிபதிகள் முன்பு 4 மணிநேர வாக்குமூலம் கொடுத்ததுடன் 20 பக்க புகாரையும் கொடுத்தார். இதன்பின் இந்த வழக்கை விசாரணை செய்ய ஸ்பெஷல் டீம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த டீம் விசாரணை செய்தாலும், சின்மயானந்த் மீது பாலியல் குற்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படாமல் இருந்தது.

``முதலில் மாணவி குளிப்பதை வீடியோவாக எடுத்து அதை வைத்து மிரட்டி ஒருவருடமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள். சின்மயானந்த்தின் கொடுமைதாங்க முடியாமல் அவரின் செயல்களை ரகசிய கேமரா மூலம் வீடியோவாக மாணவி எடுத்த பிறகுதான் இந்த விவகாரத்தில் ஆதாரத்துடன் போராட முடிந்தது.

`பல பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளார்!’ - முன்னாள் அமைச்சரை கதிகலக்கும் மாணவியின் வீடியோ

இப்போதும் அந்த வீடியோவை அழிக்க முயற்சி செய்கிறார்கள்" என மாணவியின் தரப்பினரும் அவரின் தந்தையும் கூறுகின்றனர்.

``என் மகளை தவறாக வீடியோ எடுத்துவைத்து மிரட்டி கொடுமைப்படுத்தியுள்ளார். பின்னர்தான் சின்மயானந்த்துக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முயற்சியாகவே என் மகள் வீடியோ எடுத்துள்ளார். தோழியின் உதவியுடன் சின்மயானந்த்தின் முகத்திரையைக் கிழிக்கவே இப்படி வீடியோக்களை எடுத்துள்ளார். முதலில் இதுபற்றி எனக்குத் தெரியாது. போலீஸாரால் அழைத்துவரப்பட்டபிறகுதான் இதுகுறித்து தெரியும். வீடியோ ஆதாரங்கள் மகளின் ஹாஸ்டல் அறையில் இருந்தது.

victim
victim

ஆனால், அதை எடுக்க சின்மயானந்த் தரப்பில் முயற்சி நடந்துவருகிறது. அரசு தரப்பும் அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது" எனப் புகார் கூறும் மாணவியின் தந்தை மகளின் தோழி மூலமாக சம்பந்தப்பட்ட பென்டிரைவ்வை மீட்டுள்ளார்.

அந்த பென்டிரைவ்வில் சின்மயானந்த்துக்கு எதிராக 43 வீடியோக்கள் இருந்துள்ளன. இவை அனைத்தும் சின்மயானந்த் செய்த பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் எனக் கூறப்படுகிறது. இதில் சில வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையாகின. பின்னர் மாணவி தரப்பிலிருந்து இந்த வீடியோக்களை போலீஸாரிடம் கொடுத்தபிறகுதான் அவர்மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

காதல்...கமிஷன்...வீடியோ ஷூட்!
- ஐ.பி.எஸ் அதிகாரிகளை கொதிக்க வைத்த போலீஸ்காரர்

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுக்கும் சின்மயானந்த் தரப்பு வழக்கறிஞர் ஓம் சிங்கோ, ``அவர்கள் கொடுத்த வீடியோவில் காட்டப்படும் தேதி ஜனவரி 31, 2014. சம்பந்தப்பட்ட மாணவி கடந்த ஒருவருடமாகத்தான் ஹாஸ்டலில் தங்கியுள்ளார். இதிலிருந்தே தெரிய வேண்டாமா அது போலி வீடியோதான் என்று. சின்மயானந்த்துக்குக் கடந்த 22-ம் தேதி ஒரு மெசேஜ் வந்தது. அதில் `உங்கள் நற்பெயரை தரைமட்டமாக்கும் வீடியோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அதை வெளியிடக் கூடாது என்றால் 5 கோடி ரூபாய் வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி ஜியின் நற்பெயரைக் கெடுப்பதற்காக இப்படிச் செய்து வருகின்றனர். இது தொடர்பாக முறையிட்டுள்ளோம். ஸ்பெஷல் டீம் இதுகுறித்தும் விசாரிக்கும்” என்றார்.

Chinmayanand
Chinmayanand

முன்னதாக 2011-ம் ஆண்டு சின்மயானந்த் ஆசிரமத்தில் நீண்டகாலமாகத் தங்கியிருந்த பெண் ஒருவர், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடுத்தார். அதில் அவர், என்னை நீண்டகாலமாக அடைத்து வைத்ததுடன் தன்னைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு 2018-ம் ஆண்டில் அரசு தரப்பிலிருந்து திரும்பப்பெறப்படுவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், தற்போது சின்மயானந்த் மீது தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வழக்கு உத்தரபிரதேசத்தில் புயலை கிளப்பி வருகிறது.

மாணவிகளை மிரட்டி வீடியோ எடுத்து விற்ற தம்பதி! 
- போலீஸ் அதிகாரிகளை உறைய வைத்த வாக்குமூலம்
அடுத்த கட்டுரைக்கு