Published:Updated:

தேசியக்கொடி அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தேனியில் ஒருவர் கைது!

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

தேசியக் கொடியையும் பிரதமர் மோடியையும் அவமதிப்பு செய்ததாகக் கூறி, மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோதிபாசு
ஜோதிபாசு

தேனி மாவட்டம் போடியில், மக்கள் அதிகாரம் அமைப்பின் போடி நகரப் பொறுப்பாளராக இருப்பவர் ஜோதிபாசு (வயது 40). ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதைக் கண்டித்து, பிரதமர் மோடி கழிவறையில் அமர்ந்திருப்பது போலவும் டிஸ்யூ பேப்பர் இருக்கும் இடத்தில் தேசியக் கொடி இருப்பது போலவும் வரையப்பட்ட கார்டூன் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அதை வாட்ஸ்அப் மூலமாகப் பலருக்கும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

கைது
கைது

இதை அறிந்த போடி நகர பா.ஜ.க பொறுப்பாளார் தண்டபாணி, ஜோதிபாசு மீது நடவடிக்கை எடுக்குமாறு போடி நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஜோதிபாசுவை கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐ.பி.சி 504, 505(1B), தேசிய கொடி அவமதிப்புச் சட்டம் - 1971, தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66F ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோதிபாசு மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கார்ட்டூனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.