Published:Updated:

`மனைவி வைத்த செய்வினைதான் காரணம்!' -அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த போதை இளைஞர்

`அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன், இன்னும் சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும்' என மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தி.மு.க-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு நேற்றிரவு போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்தனர். இதனால் அண்ணா அறிவாலயம் பரபரப்பானது. `இங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது' என்றுகூறி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணா அறிவாலய ஊழியர்கள், அங்கிருந்து வெளியேறினர். சோதனை முடிவில் எந்த ஒரு வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை.

அண்ணா அறிவாலயத்தில் சோதனை
அண்ணா அறிவாலயத்தில் சோதனை

இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று தேனாம்பேட்டை போலீஸார் விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர். அப்போது அது, தி.நகர் எஸ்.பி கார்டன் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசனின் நம்பர் எனத் தெரியவந்தது. நள்ளிரவில் கணேசனின் வீட்டுக்குப் போலீஸார் சென்றனர். அங்கு அவர் போதையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

`எனக்கு கிடைச்ச பையில 8 கோடி ரூபாய் இருந்தது!'-போதையில் உளறிய நபருக்கு எஸ்.ஐ மகனால் நேர்ந்த கொடூரம்

உடனே, அவரைப் பிடித்து காவல்நிலையத்துக்குப் போலீஸார் அழைத்து வந்தனர். கணேசன், போதையில் இருந்ததால் உடனடியாக அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதனால் கணேசனின் போதையைத் தெளியவைத்த போலீஸார் அதன்பிறகு விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவர், `என்னை ஏன் இங்கு அழைத்து வந்திருக்கிறீர்கள், நான் எந்தத் தப்பும் செய்யவில்லை' என்று கூறியுள்ளார். அதற்கு கணேசனின் செல்போனிலிருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் அழைப்பு சென்ற விவரத்தைப் போலீஸார் கூறியுள்ளனர்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அதைக்கேட்டு, `நானா போன் செய்தேன்?' என்று கணேசன் தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார். அப்போது போலீஸார் தங்கள் பாணியில் அவரிடம் விசாரித்தனர். அதற்கு, கணேசன், `இதற்கெல்லாம் காரணம் என் மனைவிதான். நான் ஒர் அன்றாடங்காய்ச்சி, தினமும் குப்பைகளைப் பொறுக்கி, கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்ந்துவருகிறேன். என் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை. இதில் அவள் எனக்கு செய்வினை வைத்துவிட்டாள். இதனால் நான் மதுபோதைக்கு அடிமையாகிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகப் பேசியது குறித்துக் கேட்டதற்கு, `நான் சாப்பிடவில்லை என்றாலும் தினமும் ஒரு குவார்ட்டராவது குடித்துவிடுவேன். அதைப்போலதான் நேற்றிரவு மது அருந்தினேன். அப்போது செல்போனை பார்த்துக் கொண்டிருந்தேன். போதை தலைக்கேறியதும் 100 என்ற நம்பரை டயல் செய்தேன். எதிர்முனையில் பேசியவரிடம் அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு போன் இணைப்பைத் துண்டித்துவிட்டேன். அதன் பிறகு வழக்கம்போல படுத்துத் தூங்கிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

கணேசன்
கணேசன்

தொடர்ந்து கணேசனிடம் போலீஸார் விசாரித்தபோது `சார், வெடிகுண்டு எப்படி இருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாது என்னை விட்டுவிடுங்கள் தெரியாமல் போன் செய்து மிரட்டிவிட்டேன்’ என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால், கணேசனின் செல்போன் நம்பரிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் அழைப்பு, அவர் பேசிய ஆடியோ ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.