Published:Updated:

E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive

Fake E Pass Agent
Fake E Pass Agent

E Pass இருந்தால்தான் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்குச் செல்ல முடியும் என்ற சூழலில் போலி ஆவணங்கள் மூலம் E Pass பெற்றுத் தரும் கும்பல் பற்றிய தகவல் ஜுனியர் விகடனுக்குக் கிடைத்தது. களத்தில் இறங்கியது நமது குழு. காவல்துறையும் கை கொடுக்க பெரிய கும்பல் சிக்கியது.

தமிழகத்தின் தலைநகரை கொரோனா ஆட்டிப் படைக்கிறது. வைரஸ் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இன்றைய நிலையில் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,000-க்கும் அதிகம். இதில், சென்னையில் மட்டும் 44,205 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐந்தாம் கட்ட ஊரடங்கு, ஊரடங்கிற்குள் ஊரடங்கு என்று இதுவரை எடுக்கப்பட்ட அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் ஏதும் பெருமளவு கைகொடுக்கவில்லை. அதிகரிக்கும் எண்ணிக்கை மக்கள் மனதில் ஒருவகை பயத்தை உருவாக்குகிறது. வைரஸ் தாக்கம் ஒருபுறமிருக்க வேலையிழந்து வருமானமில்லாது தவிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது.

Traffic Police checking
Traffic Police checking
Photo: Vikatan

இந்நிலையில், தமிழகத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வருக்கிறது. மருத்துவத் தேவை, திருமணம், இறப்பு மற்றும் தொழில்சார்ந்த பயணங்களுக்கு இணையம் வழியாக அனுமதி பெறும் `இ - பாஸ்' (E Pass) முறை இதற்காக அமலில் இருந்துவருகிறது. தகுந்த ஆவணங்கள் இருந்தால் மட்டுமே E Pass பெற முடியும் என்ற சூழல் உள்ளது.

சென்னையிலிருந்து எப்படியாவது சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்று பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலைச் சாதகமாக்கிக்கொண்ட ஒரு கும்பல் கமிஷனுக்கு E Pass பெற்றுத்தரும் தொழிலைத் தொடங்கியது. மூன்றாவது மற்றும் நான்காவது ஊரடங்கில் பெருமளவு போலியான இ-பாஸ்கள் தயாரித்துக்கொடுத்துவந்துள்ளது. ஐந்தாவது ஊரடங்கில் கெடுபிடி அதிகமானதால் போலி E Pass மூலம் பயணம் செய்யமுடியாத நிலை உருவானது. இதனால் இந்தக் கும்பல் போலியான ஆவணங்களைத் தயாரித்து E Pass பெற்றுத் தந்துள்ளது. இதற்கு இ கவர்னன்ஸ் அலுவலகத்தில் பணியாற்றும் சிலரும் உடந்தையாக இருந்துவந்துள்ளனர்.

Police enquiring Fake E Pass Agent
Police enquiring Fake E Pass Agent
Photo: Vikatan

தவறான முறையில் E Pass பெற்றுத்தரும் செய்தி நமது ஜூனியர் விகடன் குழுவுக்குக் கிடைத்தது. உடனே இறங்கி விசாரித்தோம். கடந்த ஒரு வாரமாக அந்தக் கும்பல் குறித்த செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினோம். போதுமான தகவல்கள் கிடைத்ததும் நேரடியாக களத்தில் இறங்கியது நமது குழு. நமக்குக் கிடைத்த தகவல்களை வைத்து, தனிநபர் ஒருவர் ஊருக்குச் செல்ல விசாரிப்பது போலத் தாம்பரம் கோபி என்பவருக்கு கால் செய்து பேசினோம். அவர் E Pass இல்லாமல் செல்வது கஷ்டம் என்று கூற, ``நாங்கள் E Pass பெற முயற்சி செய்து கிடைக்கவில்லை. நீங்கள் ஏற்பாடு செய்து தருவதாகக் கேள்விப்பட்டுத்தான் உங்களைத் தொடர்பு கொண்டோம்” என்று கூறினோம். அவர், ``சரி... அது செய்துவிடலாம் அதற்கெல்லாம் ஆள் உள்ளது. ஆனால் கட்டணமாக 2,000 ரூபாய் ஆகும்” என்று கூறினார். சரி என்று சொல்லிவிட்டோம். சிறிது நேரத்தில் அழைப்பதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார்.

சிறிது நேரத்தில், கோபி கூறியதாக மனோஜ் என்பவர் நம்மிடம் பேசினார். தன்னிடம் ஏற்கெனவே ஒரு E Pass இருப்பதாகவும் அதில் மதுரைக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் கூறினார். `இல்லை, அதில் பயணம் மேற்கொண்டால் சிக்கல் வரும்; புதியதாக எடுத்துவிடலாம்’ என்று நாம் கூற சரி எடுத்துவிடலாம் என்று சொல்லி பயணிகளின் ஆதார் கார்டு விவரங்களை மட்டும் வாங்கிக்கொண்டார்.

Police enquiring Fake E Pass Agent
Police enquiring Fake E Pass Agent
Photo: Vikatan

சிறிது நேரத்தில், நமது எண்ணுக்கு E Pass விண்ணப்பிக்கப்பட்டதாக ஒரு விண்ணப்ப எண் அவரிடம் இருந்து வந்தது. சிலமணி நேரத்தில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தகவல் அவர் அனுப்பிவைத்தார். முழு ஊரடங்கு காரணமாகவும், சென்னையிலிருந்து செல்ல அதிக கெடுபிடி இருப்பதாலும் E Pass கிடைப்பது சிரமமாக உள்ளது என்று கூறினார்.

நாம், ``வேறு வழியேதும் இல்லையா?" என்று கேட்க, அவரும், ``கொஞ்சம் அதிகமாகச் செலவாகும், நமக்கு உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு பெற முடியும்" என்று கூறினார்.

``எவ்வளவு ஆகும்?" என்று கேட்க, ``இரண்டு மடங்காகும்" என்று கூறினார். ``பணம் பற்றிய கவலையில்லை... ஊருக்குச் சென்றே ஆகவேண்டும்" என்று நாம் கூற, ``சரி, கண்டிப்பாக வாங்கிவிடலாம்" என்று கூறினார்.

சிறிது நேரத்தில் ஜெமினி மணி என்று ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டு ஒரு சில விவரங்களை வாங்கிக்கொண்டார். இரவு நேரம் ஆகிவிட்டது, நாளை கண்டிப்பாக பாஸ் கிடைத்துவிடும் என்று சொல்லி விண்ணப்ப எண்ணை அனுப்பிவைத்தார். அடுத்த நாள் காலை மனோஜை நாம் தொடர்பு கொண்டோம், ``கண்டிப்பா பாஸ் கிடைத்துவிடும் என்றும் கிடைத்ததும் நானே தங்களைத் தொடர்பு கொள்கிறேன்" என்று நமக்கு நம்பிக்கை வார்த்தைகள் தெரிவித்தார். மதியம் நம்மைத் தொடர்பு கொண்ட மனோஜ், ``பாஸ் கிடைத்துவிட்டது" என்று கூறினார். தான் முன்பு வைத்திருந்த பாஸில் ஒருவரை அழைத்துக்கொண்டு மதுரை வந்துள்ளதாகவும், இரவு சென்னை திரும்பிவிடுவேன் என்றும் கூறியதுடன் தனது கணக்கிற்குப் பணம் அனுப்பிவைக்கக் கூறினார். நாமும் தொகையை அவரின் கணக்கிற்கு அனுப்பிவைத்தோம். E Pass காப்பி நமக்கு வந்து சேர்ந்தது, அந்த பாஸில் மருத்துவ அவசரத்திற்காகச் செல்வதாகக் காரணம் கூறி E Pass பெறப்பட்டிருந்தது.

இப்படி எத்தனை நபர்களுக்கு எந்த ஆவணமும் இல்லாது E Pass எடுத்துக்கொடுத்திருப்பார்கள் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்... அவர்களில் எத்தனை நபர்கள் கொரோனாவோடு பல்வேறு ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள்! `மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று பலமுறை அரசு தரப்பில் விளம்பரங்கள்மூலம் கேட்டுக்கொண்டும், இப்படி சிலர் செய்கிற அத்துமீறலால் கொரோனா இன்னும் கட்டுக்கடங்காமல் நாடெங்கும் பரவிவருகிறது.

Police enquiring Fake E Pass Agent
Police enquiring Fake E Pass Agent
Photo: Vikatan

இந்தக் கும்பல் குறித்த தகவல்களை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வைக்குக் ஜூனியர் விகடன் சார்பில் புகாராகக் கொண்டு சென்றோம். அவர் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் சி.ஈஸ்வர மூர்த்தியிடம் விசாரிக்க உத்தரவிட்டார். பின் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. சட்டவிரோதமாக E Pass பெற்றுத்தரும் கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க நமது ஜூனியர் விகடன் குழு, காவல்துறையுடன் கரம் கோத்தது. நாம் சேகரித்து வைத்திருந்த விவரங்களை அவர்களிடத்தில் விரிவாகக் கூறினோம். அவர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வுகள் நடக்கும் பொழுதே காவல்துறை சார்பில் நாம் பேசிய நபர்கள் அனைவரின் விவரங்களும் எடுக்கப்பட்டு இருந்தது. எந்த இடத்தில் மனோஜை வரவைக்கலாம் என்று திட்டமிடப்பட்டது. நாம் மனோஜைக் காலை 11 மணிக்கு வடபழனி முருகன் கோயில் அருகில் வரச்சொல்லிவிட்டோம். அதற்கு முன் காவல்துறையினர் அங்கு வந்துவிட்டனர். சரியாக மனோஜ் அங்கு வர காவல்துறை அவரைச் சுற்றி வளைத்து அந்த இடத்திலேயே விசாரணை மேற்கொண்டது. சிறிது நேரத்தில் அவரை ஆணையர் அலுவலகம் அழைத்துச் சென்றனர்.

Police enquiring Fake E Pass Agent
Police enquiring Fake E Pass Agent
Photo: Vikatan

மனோஜிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கிட்டத்தட்ட 2500 ஓட்டுநர்கள், 30-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் பல அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு பெரிய குழுவே இதற்காக இயங்கியது தெரியவந்துள்ளது. இதில் இன்று அரசு அதிகாரிகள் உட்பட 6 நபர்கள் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

விசாரணை குறித்த முழுத் தகவல்களையும் அடுத்த கட்டுரையில் காணலாம்.

அடுத்த கட்டுரைக்கு