Election bannerElection banner
Published:Updated:

ராணிப்பேட்டை: மண் கடத்தலுக்கு லஞ்சம்; உயரதிகாரி மனைவி பெயரில் கார்! -19 அலுவலர்கள் மீது வழக்கு

ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை

முறைகேடாக மண் குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்து லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், ஈரோடு ஆவின் பொதுமேலாளர் உட்பட வருவாய்த்துறை, காவல்துறையினர் என மொத்தம் 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை சப் கலெக்டர் இளம்பகவத் 2019-ம் ஆண்டு, மார்ச் 25-ம் தேதி, சோளிங்கர் புலிவலம் கிராமத்திலுள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தியவர்களை மடக்கியிருக்கிறார். கடத்தல் கும்பலுக்குத் தலைவனாகச் செயல்பட்ட சரவணன் என்பவர் தப்பியோடும்போது, அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்கள் கீழே விழுந்தன. இளம்பகவத் அந்த செல்போன்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். பெரும்பாலான அழைப்புகள் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருடன் இருந்திருக்கின்றன. மண் கடத்தல் கும்பலுடன் இரண்டு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் நட்பு பாராட்டியுள்ளனர்.

தற்போதைய சப் கலெக்டர் இளம்பகவத்
தற்போதைய சப் கலெக்டர் இளம்பகவத்

மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்து, அதன் மூலம் பெரும் தொகையைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். வாட்ஸ்அப் சாட்டிங்கிலும் பல பொருள்களின் லிஸ்ட்டுகளை அனுப்பி கேட்டுப் பெற்றிருக்கிறார்கள் அதிகாரிகள். முழுத் தகவல்களையும் திரட்டிய சப் கலெக்டர் இளம்பகவத், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிக்கை அனுப்பினார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களில் 01.08.2018-லிருந்து 25.03.2019 வரையிலான அழைப்புகளை ஆய்வு செய்தபோது, லஞ்ச அதிகாரிகளின் பட்டியல் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பிலிருந்த முருகேசனுடன் மண் கடத்தல் கும்பல் நேரடித் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. முருகேசன் தற்சமயம் ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளராக உயர் பொறுப்பில் இருக்கிறார். முருகேசன் மனைவி அரசானி பெயரில் ரூ.23 லட்சம் மதிப்பில் இன்னோவா காரையும் முழுத் தொகையைச் செலுத்தி வாங்கிக் கொடுத்திருக்கிறார் மண் கடத்தல் கும்பலின் தலைவன் சரவணன். இதற்கான பணப் பரிமாற்ற ஆதாரங்களும், தகவல் பரிமாற்றப் பதிவுகளும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறது, லஞ்ச ஒழிப்புத்துறை.

மண் கடத்தல் (மாதிரி படம்)
மண் கடத்தல் (மாதிரி படம்)

அதேபோல், அப்போதைய வாலாஜா பிர்கா வருவாய் அலுவலராக இருந்து தற்போதைய ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலராக இருக்கும் கன்னியப்பன், பாண்டியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், தற்போதைய அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், முன்னாள் வாலாஜா வட்ட மண்டல துணை வட்டாட்சியர் மதி, சோளிங்கர் இன்ஸ்பெக்டராக இருந்த வெங்கடேசன், சப் இன்ஸ்பெக்டர்களாக இருந்த மகாராஜன், பாஸ்கரன் மற்றும் கொண்டபாளையம் காவல் நிலைய போலீஸ்காரர் விஜயபாஸ்கர், கொண்டபாளையம் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர், சோளிங்கர் ஏட்டுகள் பச்சையப்பன் (தனிப்பிரிவு), விஜயகுமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், பூபதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், காவலர்கள் ராஜ்கமல், சக்திவேல் ஆகியோரும் மண் கடத்தல் கும்பலுடன் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நீண்ட நெடிய விசாரணைக்குப் பின்னர் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், ஈரோடு ஆவின் பொதுமேலாளர் முருகேசன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் மற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நான்கு பேரும், மண் கடத்தல் கும்பலின் முக்கியப் புள்ளியான சரவணன் மற்றும் காவல்துறையினர் 13 பேர் என மொத்தம் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துறைத் தலைமை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரைவில், அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு