Published:Updated:

திருச்சி: மூடியே இருந்த சிறை கதவு; ஜன்னல் கம்பிகளை அறுத்து தப்பிய பல்கேரிய கைதி! - நடந்தது என்ன?

திருச்சி சிறை
திருச்சி சிறை

2018-ம் ஆண்டு நைஜீரியாவை சேர்ந்த கைதி ஒருவர் மரத்தில் ஏறி காம்பவுண்ட் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றார். அதன் பின்னணியில் சில அதிகாரிகள் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேபோல் இவ்வழக்கிலும் இருக்கலாம்.

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர், திருச்சி முகாம் சிறையில் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `கைதிக்கு உதவி செய்தது யார்? எப்படித் தப்பினார்?’ என்று ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

திருச்சி சிறை
திருச்சி சிறை

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், விசா காலம் முடிந்தும் அனுமதியின்றி தங்கியது போன்ற குற்ற வழக்குகளில் சிக்கிய வங்கதேசம், இலங்கைத் தமிழர்கள், நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி ஏர்போர்ட்: சிக்கிய 575 கிராம் தங்கம்; அதிகாரிகளை அதிரவைத்த கடத்தல் சம்பவம்!

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இலியான் ஜிட்ராகர் மார்கோவ் என்பவர் கைது செய்யப்பட்டு, திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கதவுகள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டே இருந்தது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

அதே நேரத்தில் கைதிகள் கணக்கெடுப்பின் போது அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்துச் சிறை கைதி ஒருவர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கிருந்த ஜன்னல் கம்பியை அறுத்து கைதி தப்பிச் சென்றது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`தாக்கியதோடு, தனிமைச் சிறையில் அடைத்தார்கள்!' - திருச்சி சிறை அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு

இதையடுத்து திருச்சி சிறைத்துறை அதிகாரிகள் முகாம்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அறையிலிருந்து குதித்த கைதி, மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள அதிகாரிகள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதர்கள் வழியே தப்பிச் சென்றது தெரியவந்தது.

திருச்சி சிறை
திருச்சி சிறை

இதனையடுத்து முகாம் சிறைக்குச் சென்ற மாநகர போலீஸ் கமிஷனர் அருண், தப்பியோடிய கைதி குறித்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து அனைத்து மாவட்ட காவல் நிலையம், ரயில்வே ஸ்டேசன், விமான நிலையங்களில் கைதி இலியான் ஜிட்ராகர் மார்கோவ்வின் புகைப்படத்தை அனுப்பி வைத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சிறைக்குள் என்ன நடக்கிறது என்று விசாரித்தோம். ``ஒரு முகாமில் உள்ள கைதி தப்பிக்கிறார் என்றால் கண்டிப்பாக அங்குள்ளவர்கள் உதவி இல்லாமல் தப்பித்திருக்க முடியாது. ஜன்னல் கம்பிகளை அறுத்து மரத்தின் மீது ஏறித் தப்பிச் சென்றாரா? இல்லை, சிறைச் சாலைக்குள் தண்ணீர் கொண்டுவரும் தண்ணீர் லாரியில் தப்பிச் சென்றாரா என்று போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறை
சிறை

அங்குள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் வெளிநாட்டுக் கைதி தப்பித்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு நைஜீரியாவை சேர்ந்த கைதி ஒருவர் மரத்தில் ஏறி காம்பவுண்ட் சுவரைத் தாண்டி தப்பிச் சென்றார். அதன் பின்னணியில் சில அதிகாரிகள் இருந்ததாக சொல்லப்பட்டது. அதேபோல் இவ்வழக்கிலும் இருக்கலாம். கைதிக்கு உதவி செய்தது யார்? எப்படித் தப்பினார் என்று அதிகாரிகளிடம் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்" என்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு