Published:Updated:

`புல்லட் புரூப் கார் வாங்கியதில் மோசடி?!'- கேரள டி.ஜி.பி-யைச் சுற்றும் சர்ச்சை

கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா
கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா

புல்லட் புரூப் கார் வாங்குவதற்கு ஓப்பன் டெண்டர் விடவில்லை என்பதும், அரசு அனுமதி இல்லாமல் 33 லட்சம் ரூபாய் வழங்கியது தவறு என்பதுதான் டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீது சி.ஏ.ஜி முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள்.

கேரள மாநிலத்தில் வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பிற்காகவும், இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பவர்களுக்காகவும் இரண்டு புல்லட் புரூப் கார்கள் வாங்குவதற்காக 2016-2017 காலகட்டத்தில் அரசு 1.26 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. 2017-ல் இதற்காக அரசு அனுமதியும் வழங்கப்பட்டது. ஸ்டோர் பர்ச்சேஸ் மேனுவலுக்கு இணங்க திறந்த டெண்டர் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஓப்பன் டெண்டர் முறையை டி.ஜி.பி லோக்நாத் பெகரா கடைப்பிடிக்கவில்லை என்று சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பி.டி.தாமஸ்
பி.டி.தாமஸ்

புல்லட் புரூப் கார்கள் வாங்குவதற்காக டி.ஜி.பி லோக்நாத் பெகரா ஒரு வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளார். அந்தக் குழுவின் தீர்மானத்தின்படி ரூ.55.02 லட்சம் மதிப்புள்ள இரண்டு புல்லட் புரூப் கார்களுக்கான வாகன கம்பெனியில் சப்ளை ஆர்டர் வழங்கியுள்ளார். சப்ளை ஆர்டர் வாங்கப்பட்ட அன்றே வாகனம் வாங்குவதற்கான அனுமதி வேண்டி அரசுக்குக் கடிதமும் அளித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓப்பன் டெண்டர் விடப்படவில்லை என்று அப்போது அரசுக்குத் தெரிவித்திருக்கிறார். அத்துடன் நிற்காமல் புல்லட் புரூப் கார் சப்ளை செய்வதற்காக 33 லட்சம் ரூபாய் முன் பணமும் வழங்கியுள்ளார். புல்லட் புரூப் கார் வாங்குவதற்கு ஓப்பன் டெண்டர் விடவில்லை என்பதும், அரசு அனுமதி இல்லாமல் 33 லட்சம் ரூபாய் வழங்கியது தவறு என்பதுதான் டி.ஜி.பி லோக்நாத் பெகரா மீது சி.ஏ.ஜி முன்வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டுகள்.

காவல் துறையை மேம்படுத்துவதற்கான நிதியில் புல்லட்புரூப் கார்கள் வாங்க உத்தேசித்தது குறித்து சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது புல்லட் புரூப் கார்களை முதலிலேயே முடிவு செய்து வைத்திருப்பதாகத் தெரிகிறது எனவும் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து டி.ஜி.பி மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வழி இருப்பதாகவும் இதைக் காரணம்காட்டி ஊழல் தடுப்புத்துறை மூலம் வழக்கு எடுக்கவும் வழிவகை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா
கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெகரா

இந்த நிலையில் டி.ஜி.பி லோக்நாத் பெகராவிற்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.டி.தாமஸ் சட்டசபையில் பேசும்போது, ``காவல்துறையை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பணம் எங்கு செல்கிறது என்று அரசு விசாரணை நடத்த வேண்டும். மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தண்டர்பேர்டு டீம் உள்ளிட்ட காவலர்களுக்குக் குடியிருப்புகள் கட்டியதில் டி.ஜி.பி பணம் கையாடல் செய்திருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்றார். டி.ஜி.பி மீதான புகார் கேரளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பின் செல்ல