Published:Updated:

வேலூர்: திருமணம் தாண்டிய உறவு; வரதட்சணைக் கொடுமை; கொலை மிரட்டல் - திமுக பிரமுகர் மீது மனைவி புகார்!

சுந்தர்
சுந்தர்

காதலியின் வீடடில் பெட் காபி குடித்துக் கொண்டிருந்த தி.மு.க பிரமுகரைப் பிடித்து கன்னத்தில் மனைவி அறையும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், தி.மு.க-வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார். சுந்தரும், நெல்லூர்ப்பேட்டை பச்சையப்பன் நகரைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணும், பத்து ஆண்டுகளாகக் காதலித்து 2014-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தற்போது, இவர்களுக்கு பத்து மாத கைக்குழந்தை உட்பட மூன்று ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணத்தின்போது, வித்யாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த 35 பவுன் நகைகளை அடகு வைத்து ஷு கம்பெனியைத் தொடங்கியிருக்கிறார் சுந்தர்.

சுந்தர்
சுந்தர்

இந்த நிலையில், தொழில் வளர்ச்சிக்கு மேலும் பணம் தேவைப்பட்டுள்ளதால், மாமியார் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி மனைவி வித்யாவை சுந்தர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகராறு முற்றவே, மனைவியிடம் சரிவர பேசுவதை தவிர்த்துள்ளார் சுந்தர். தொடர்ந்து, வீட்டுக்குள்ளேயே இருக்கும் வேறொரு அறையில் கதவைப் பூட்டிக்கொண்டு தனியாக இருப்பது, குழந்தைகளையும் தூக்க மறுப்பது என சுந்தரின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் மாறியிருக்கிறது. திடீரென இரவு நேரத்தில் வெளியில் சென்றுவிடும் சுந்தர், மறுநாள் பொழுது விடிந்தப் பின்னரே வீட்டுக்கு வருவார் என்கிறார் வித்யா.

பெண்கள் சிலருடன் சுந்தர் தவறான தொடர்பு வைத்திருந்தததையும், தனி அறைக்குள் கதவைப் பூட்டிக்கொண்டு பெண்கள் சிலருடன் போனில் ஆபாசமாக கொஞ்சி பேசுவதை கேட்டும் அதிர்ந்து போயிருக்கிறார் மனைவி வித்யா. இரவில் வெளியில் செல்லும் பழக்கத்தையும் விட்டுவிடுமாறு மனைவி வற்புறுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம், தன்னை அடித்துவிட்டுச் சென்றதாகவும் கூறுகிறார் வித்யா.

சுந்தரின் மனைவி வித்யா
சுந்தரின் மனைவி வித்யா

இதையடுத்து, தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் வித்யா. பெற்றோரும் மகளின் எதிர்கால நலன்கருதி, மருமகனுக்கு மேலும் பணம் உதவிச் செய்வதற்காக தங்கள் வீட்டுப் பத்திரத்தையும் கொடுத்துள்ளனர். அந்தப் பத்திரத்தையும் பெற்றுக்கொண்ட சுந்தர், அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். ஆனால், தொழில் வளர்ச்சிக்கான எந்த முன்னேற்றத்தையும் அவர் எடுக்கவில்லை. பெண்கள் சிலருடனான தவறான தொடர்பினையும் அவர் கைவிடவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாமியார் வீட்டிலிருந்து மேலும் பணம் வாங்கி வந்தால்தான் சேர்ந்து வாழ்வேன் என்றுகூறி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி மனைவியை வீட்டிலிருந்து அடித்து துரத்திவிட்டாராம் சுந்தர்.

மூன்று குழந்தைகளுடனும் மூன்று மாதங்களாகத் தாய் வீட்டிலிருந்த வித்யாவைப் பார்க்கக்கூட வராமல் இருந்திருக்கிறார் சுந்தர். இந்த நிலையில், செட்டிக்குப்பம் என்ற பகுதியிலுள்ள பெண் ஒருவருடன் சுந்தருக்குத் தவறான தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மனைவி வித்யாவுக்குத் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி இரவு 10 மணியளவில், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சுந்தர். இதையறிந்த வித்யாவும், அவரின் உறவினர்களும் அங்குச் சென்றுள்ளனர். அந்த வயதான பெண்ணுடன் சுந்தர் ஓர் அறையில் பெட் காபி குடித்து கொண்டிருந்தாகவும் கூறப்படுகிறது. அதனைப் பார்த்து, வித்யா அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

காதலி வீட்டுக்குள் சிக்கிய காட்சி
காதலி வீட்டுக்குள் சிக்கிய காட்சி

அந்த வீட்டுக்குள் புகுந்து கணவன் சுந்தரைக் கன்னம் பழுக்க அறைந்திருக்கிறார் வித்யா. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதையடுத்து, `இனிமேல் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன்’ என மன்னிப்புக் கேட்டு மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாகக் கூறியிருக்கிறார் சுந்தர். ‘தனிக்குடித்தனம் சென்றால் மட்டுமே உடன் சேர்ந்து வாழ்வேன்’ என வித்யா சொல்லியிருக்கிறார். அதற்கு நேரம் கேட்ட சுந்தரோ, பின்னாளில் மனைவிக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம்சாட்டுகிறார் வித்யா.

``நான் தி.மு.க-காரன். நாங்கள்தான் ஆளும் கட்சியாகவும் இருக்கிறோம். நீ, எடுத்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு. என் பதவிக்கு ஏதாவது பிரச்னை ஆச்சுன்னா, நீ உட்பட உன் குடும்பத்தில் இருக்க ஒவ்வொருத்தரா லாரி ஏத்தி கொன்னுடுவேன்’’ என்று மனைவியிடம் சுந்தர் போனில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கணவன் சுந்தரிடமிருந்து தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரியும், தங்களிடமிருந்து பெறப்பட்ட 35 பவுன் நகைகள், வீட்டுப் பத்திரத்தை திருப்பி பெற்றுத் தரக்கோரியும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் வித்யா.

எஃப்.ஐ.ஆர் நகல்
எஃப்.ஐ.ஆர் நகல்

பெண்ணுடன் தனிமையில் இருந்த வீடியோக்களையும் ஆதாரங்களாக காவல்துறையினரிடம் காட்டியிருக்கிறார் வித்யா. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், சுந்தரைப் போனில் தொடர்புகொண்டு விசாரணைக்காக அழைத்துள்ளனர். சுந்தரோ, ``எனக்கு வேலை இருக்கிறது. ஆளும் கட்சிக்காரனையே ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறீங்களா?’’ என்று மிரட்டல் விடும் தொனியில் பேசியதாகக் காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இதையடுத்து, மனைவியிடம் வரதட்சணைக் கேட்ட குற்றம், கொலை மிரட்டல் ஆகியவைத் தொடர்பாக தி.மு.க நிர்வாகி சுந்தர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு