Published:Updated:

மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றம் - உன்னாவ் சிறுமி வழக்கு... ஒரு அப்டேட்!

இந்தியாவையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது லாரி விபத்து காரணமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது வாக்குமூலத்தை, எய்ம்ஸ் மருத்துவமனை சென்று நீதிபதி தர்மேஷ் ஷர்மா பெற்றுள்ளார்.

Kuldeep Singh Sengar
Kuldeep Singh Sengar ( ANI )

ஜூலை 28, 2019. மதியம் 1 மணி. மழை பெய்துகொண்டிருந்தது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரிலிருந்து, ரேபரேலி சிறைக்குச் சென்றுகொண்டிருந்தது, அந்த ஸ்விஃப்ட் டிசையர் கார். உன்னாவ் தொகுதியின் பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி, தன் சித்திகள் இருவருடனும், வழக்கறிஞருடனும் அந்த காரில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கார் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில், அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று மோதியது. லாரி ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டு, தப்பி ஓடினார்.

Unnao victim accident
Unnao victim accident

உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரின் வழக்கறிஞரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டனர். காரில் பயணித்த அவரது இரண்டு சித்திகளும், விபத்தில் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த இருவரும் உடனடியாக, லக்னோ கே.ஜி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நுரையீரலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், செயற்கைச் சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர். மேலும், அவரது உடலின் வலது பக்கத்தின் பல எலும்புகள் முறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. லாரியின் நம்பர் பிளேட்டில் கறுப்பு மை பூசப்பட்டிருந்தது, சந்தேகத்தை வலுப்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி, "நடந்தது விபத்து அல்ல, சதி!" எனக் கூறினார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். லாரியின் தவணைத்தொகை கட்டாததால், நம்பர் பிளேட்டில் மை பூசியுள்ளதாக, காவல் துறையிடம் தெரிவித்தார்.

Unnao victim accident - truck
Unnao victim accident - truck
NDTV

பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாதுகாப்பாக இரண்டு பெண் காவலர்களும், ஓர் ஆண் காவலரும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் விபத்து நடந்தபோது, அவருடன் யாரும் இல்லை. இது சந்தேகத்தை வலுப்படுத்தியது. அன்று பணியில் இருந்திருக்க வேண்டிய காவலர் சுரேஷ் குமார், காரில் இடமில்லாததால் செல்லவில்லை என்றும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்குப் பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறியதாகவும் விளக்கம் கொடுத்தார்.

ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் என இந்தியாவின் முன்னணித் தலைவர்கள் பலர் தங்கள் கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.

விபத்து நிகழ்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வேலை வாங்கித் தருவதாகக் கூறப்பட்டுச் சென்ற இந்தச் சிறுமி, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய்யப்பட்டார். பல கட்ட முயற்சி செய்தும், அரசியல் அழுத்தங்களால் குற்றவாளியின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் குற்றவாளி குல்தீப் சிங் செங்கரின் பெயரை, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடுமாறு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

Kuldeep Singh Sengar
Kuldeep Singh Sengar
PTI

ஒரு மாதம் கழித்து, எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் தம்பி அதுல் சிங், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தினார். சிறுமியின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி, காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையை மீட்பதற்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு, சிறுமி தன் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றார். இந்த விவகாரம் தேசிய அளவில் வெளிப்பட்டது.

நீதிமன்றக் காவலில் இருந்த சிறுமியின் தந்தை, சிறையில் உயிரிழந்தார். சிறுமியின் தந்தையைத் தாக்கியதற்காக அதுல் சிங் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர். சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கும், அவரின் தந்தை கொலை வழக்கும் தனித்தனி வழக்குகளாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டன.

சிறுமிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்திய அவரின் சித்தப்பா, 19 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலை மிரட்டல் குற்றத்துக்காக, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, ரேபரேலி சிறையில் அடைக்கப்பட்டார்.

Unnao case - protests
Unnao case - protests

அதுல் சிங் உட்பட ஐவர் மீது சிறுமியின் தந்தையைக் கொலை செய்ததாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிறுமியின் தந்தையைப் பொய் வழக்கில் கைதுசெய்ததற்காக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் உட்பட 9 பேர் மீதும், காவல் துறையினர் நால்வர் மீதும் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ரேபரேலி சிறையிலுள்ள தன் சித்தப்பாவைச் சந்திக்கச் சென்ற சிறுமியின் கார் மீது லாரி மோதியது. அந்தச் சமயத்தில் குற்றவாளி குல்தீப் சிங் செங்கர் சிறையில் இருந்தார்.

லாரி விபத்துக்குப் பின், பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். விபத்து நடப்பதற்கு, 10 நாள்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது குடும்பமும் தங்கள் பாதுகாப்பு குறித்தும், குல்தீப் சிங் செங்கரின் ஆள்களால் தொடரும் அச்சுறுத்தல் குறித்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அது நீதிபதிக்குச் சென்று சேரவில்லை. இந்த விபத்துக்குப்பின், அந்தக் கடிதம் நீதிபதிக்கு வர, "இந்தக் கடிதத்தை என்னிடம் சமர்ப்பிக்க இரண்டு வாரகால அவகாசம் எடுத்துக்கொண்டது ஏன்?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார். அதற்காக ஒரு விசாரணையும் அமைக்கச் சொன்னார்.

Unnao case - protests
Unnao case - protests
பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது வழக்கறிஞரும் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். வழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து, டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. வழக்கு விசாரணை தினமும் நடைபெற வேண்டும். பாலியல் வன்கொடுமை வழக்கும், விபத்து வழக்கும் 45 நாள்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றம்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக உத்தரப்பிரதேச மாநில அரசு 25 லட்ச ரூபாய் பணம் வழங்கியது. மேலும், ரேபரேலி சிறையில் இருந்த சிறுமியின் சித்தப்பா, பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், குல்தீப் சிங் செங்கரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

Unnao case - Inhouse proceeding
Unnao case - Inhouse proceeding

பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது வழக்கறிஞரும் லக்னோவில் இருந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். வழக்கு விசாரணைக்காக, எய்ம்ஸ் மருத்துவமனையில், தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2 அன்று, சி.பி.ஐ பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றது. கடந்த செப்டம்பர் 12 அன்று, மாவட்ட நீதிபதி தர்மேஷ் ஷர்மா, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றார்.

சிறுமியின் பார்வையில் தெரியாதவாறு, குற்றவாளி குல்தீப் சிங் செங்கர் திரைக்கு அப்பால் அமரவைக்கப்பட்டு, சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்பதற்காக அனுமதிக்கப்பட்டார். சிறுமியுடன் அவரின் அக்காவும், செவிலியர் ஒருவரும் இருந்தனர். மருத்துவமனை வளாகத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நடைபெற்றதால், விசாரணை நடந்த இடங்களில் சிசிடிவி கேமரா நிறுத்திவைக்கப்பட உத்தரவிடப்பட்டிருந்தது.

Yogi Adityanath
Yogi Adityanath

சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற நீதிபதி தர்மேஷ் ஷர்மா, உத்தரப்பிரதேச மாநில அரசுத் தலைமைச் செயலாளருக்கு, சிறுமியையும், அவரது குடும்பத்தையும் மாநிலத்துக்கு வெளியே, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் பாதுகாப்பு பற்றி, சி.பி.ஐ விசாரணையில், அவருக்கு `உச்சபட்ச அச்சுறுத்தல்' இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே! - உன்னாவ் பெண்ணின் ஓயாத துயரம்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உன்னாவ் வழக்கு பற்றிப் பேசியுள்ளார்.

உன்னாவ் போன்ற வழக்குகள் மக்களின் தவறான மனநிலையைக் காட்டுகிறது. இவை நடக்காமல் இருக்க, மக்களுக்கு நல்லவற்றை போதிக்க வேண்டும். உன்னாவ் வழக்கில், காவல் துறையும், மருத்துவர்களும் சிறப்பாகச் செயல்பட்டனர். விபத்து வழக்கில், சி.பி.ஐ விசாரணை முடிந்தால்தான் அது விபத்தா, சதியா என்று தெரியும்.
யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேச முதல்வர்.