திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள பள்ளிப்பட்டு பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் வாசலில் முதியவர் ஒருவர் நேற்றைய தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள், இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த போலீஸார் முதியவரின் உடலைக் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தற்கொலைசெய்த முதியவர் கீளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி (75) என்பது தெரியவந்தது. திருத்தணி பகுதியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் கொண்டா ரெட்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்குப் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்த விசாரணை கூர்நோக்கு குழுவின் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடியும் இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தியில் முதியவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட பெரியவரின் சட்டைப்பையிலிருந்து ஒரு கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை செய்துவருகிறார்கள். மேலும், இந்த பெரியவர் இதற்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதிச் சான்று தொடர்பான காத்திருப்பு போராட்டத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
முதியவரின் தற்கொலை செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியதை அடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், திருத்தணி மருத்துவமனைக்கு வந்து குவியத்தொடங்கினர். முதியவரின் தற்கொலைக்கு நீதி கேட்டும், அவரின் தற்கொலைக்குக் காரணமான அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.