Published:Updated:

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான மருத்துவக் கல்லூரி முதல்வர்கள்! - சிறையிலடைக்கப்படும் நால்வர்?

நீட் ஆள்மாறாட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி தீவிரமாக விசாரித்துவரும் சூழலில், நேற்று கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இருவர் நேற்று இரவே சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று நால்வர் சிறை செல்கிறார்கள்.

CBCID theni office
CBCID theni office

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நேற்று 6 பேர் அழைத்துவரப்பட்டனர். சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அபிராமி அவரின் தந்தை மாதவன். பாலாஜி மருத்தவக் கல்லுரியைச் சேர்ந்த ராகுல், அவரின் தந்தை டேவிஸ். எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பிரவீன், அவரின் தந்தை சரவணன் ஆகியோர் அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டனர். மாதவனுக்கு உடல்நிலை சரியில்லாததால், சற்று தாமதமாக அழைத்துவரப்பட்டார்.

Theni CBCID Office
Theni CBCID Office

தொடர்ந்து நேற்று இரவு சுமார் 8 மணியளவில், பிரவீன், அவரின் தந்தை சரவணன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். 15 நாள் நீதிமன்றக் காவலில் இருவரையும் தேனி சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. நள்ளிரவு சுமார் 12.50 மணியளவில் இருவரும் தேனி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் உள்ள அபிராமி, அவரின் தந்தை மாதவன், ராகுல், அவரின் தந்தை டேவிஸ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டுவருகிறது. நால்வரும் இன்று சிறை செல்வார்கள் என்கிறது சி.பி.சி.ஐ.டி. இவையெல்லாம் ஒருபுறம் என்றால், அபிராமி, ராகுல், பிரவீன் ஆகியோர் படித்த மருத்துவக்கல்லூரி முதல்வர்களைத் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது சி.பி.சி.ஐ.டி.

 Theni CBCID Office
Theni CBCID Office

அதைத் தொடர்ந்து இதுவரை எஸ்.ஆர்.எம் மற்றும் பாலாஜி மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் ஆஜராகி விளக்கம் கொடுத்தது மட்டுமல்லாமல், மாணவர்களின் ஆவணங்களை சமர்ப்பித்தனர். சத்யசாய் மருத்துவக்கல்லூரி முதல்வர் இனிமேல் ஆஜர் ஆவார் என்கின்றனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், இவை அனைத்திலும் தொடர்புடைய நீட் ஏஜென்டை தேடும் பணி தொடர்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.