Published:Updated:

`3 கோடி டீலிங்... ரோட்டில் சிதறிய பணப்பெட்டி?' -புதுவை சிபிசிஐடி அதிகாரிகளின் 5 மணிநேர விசாரணை

புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்
புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

3 கோடி ரூபாய் மாயமான விவகாரத்தில் தமிழக டி.எஸ்.பி-க்கும், புதுச்சேரியின் முன்னாள் அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

100 ஏக்கர் நிலம் - 3 கோடி பணம்:

புதுச்சேரியின் முன்னாள் கல்வி அமைச்சரான கல்யாணசுந்தரம், என்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர் காரைக்காலில் 100 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக சென்னையில் ஒருவரிடம் ரூ.4 கோடி கேட்டிருக்கிறார். அவரும் கடந்த 11.05.2020 அன்று சென்னையில் வந்து பணத்தை வாங்கிக்கொள்ளும்படி கூறியிருக்கிறார். அதன்படி சென்னை செல்ல முடிவெடுத்த கல்யாணசுந்தரம், ஊரடங்கு நேரத்தில் அந்தப் பணத்தைப் பாதுகாப்பாக எடுத்து வருவதற்காக திருவள்ளூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக இருந்த (தற்போது மயிலம் காவலர் பயிற்சிப் பள்ளியின் டி.எஸ்.பி) தனது உறவினர் கண்ணபிரானை அழைத்துச் சென்றிருக்கிறார்.

தமிழக டி.எஸ்.பி கண்ணபிரான்
தமிழக டி.எஸ்.பி கண்ணபிரான்

காரில் பயணம் செய்த பணப்பெட்டி:

இவர்களுடன் புதுச்சேரி சியாச்செம் (siachem) கிரிக்கெட் கிளப்பின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரன் என்பவரின் மகன் ரோஹித்தும் சென்றிருக்கிறார். அங்கு பெரிய பெட்டி ஒன்றை இன்ஸ்பெக்டர் கண்ணபிரானின் வண்டியில் ஏற்றியிருக்கிறார்கள். அதில்தான் ரூ.3 கோடி இருந்ததாகக் கூறப்படுகிறது. பணப்பெட்டியுடன் கண்ணபிரான் முன்னே செல்ல, முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், ரோகித்துடன் பின்தொடர்ந்திருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் மீது கொலைமிரட்டல் வழக்கு:

அதன்பிறகு 18.05.2020 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் கல்யாணசுந்தரம் அளித்திருக்கும் புகாரில், ` ரூ. 3 கோடி பணத்தை கண்ணபிரான் தன்னிடம் தராமல் ஏமாற்றிவிட்டார்' என்று கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த 06.06.2020 அன்று புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் டி.எஸ்.பி கண்ணபிரான் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், அவரது மனைவி மற்றும் தந்தை, உதவியாளர் பாஸ்கர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுச்சேரி தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம்
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம்

சாலையில் வீசப்பட்ட பணம்:

இந்த விவகாரத்தில், `போலீஸ் துரத்தியதால் 3 கோடி ரூபாய் இருந்த பணப்பெட்டியைக் கீழே தள்ளிவிட்டுவிட்டேன்' என்று கூறிவிட்டு கண்ணபிரான் எனது பணத்தை அபகரித்துவிட்டார். `தூக்கிப் போட்ட இடத்தைக் காட்டுங்கள்' என்று நான் கேட்டபோது சென்னை முழுக்க அலையவைத்தார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் கல்யாணசுந்தரம்.

அதேசமயம், ”அவர் சொல்றது எல்லாமே பொய்க் குற்றச்சாட்டு. நாங்கள் ரெண்டு பேரும் மாமன், மச்சான்தான். இது தொடர்பான வழக்கு ஏற்கெனவே விசாரணையில் இருக்கும்போதே என் வீட்டுக்கு வந்து எனது மனைவி மற்றும் பிள்ளைகளின் தலையை வெட்டிப் போட்டுவிடுவேன்னு நிறைய பேரோட வந்து மிரட்டவே எனக்கு பயம் வந்துடுச்சு. அதனாலதான் புகார் கொடுத்தேன்” என்று கூறினார் டி.எஸ்.பி கண்ணபிரான்.

`100 ஏக்கருக்காகக் கொடுக்கப்பட்ட கோடிகள்!’- வில்லங்கத்தில் முடிந்த முன்னாள் அமைச்சர்- டி.எஸ்.பி உறவு

5 மணிநேர விசாரணை:

இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டதையடுத்து, சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவின் எஸ்.பி ராஜசேகர வல்லாட் மற்றும் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென்று தமிழக டி.எஸ்.பி கண்ணபிரானுக்கு அழைப்பு விடுத்திருந்தது சி.பி.சி.ஐ.டி.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு புதுச்சேரியிலுள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரானார் டி.எஸ்.பி கண்ணபிரான். சுமார் 5 மணிநேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 கோடி ரூபாய் கைமாறியது ஏன், அது எதற்காக எந்த இடத்தில் கைமாறியது, அன்றைய தினம் அரியூரில் உள்ள டி.எஸ்.பியின் வீட்டில் நடைபெற்ற வாக்குவாதங்கள் குறித்து விரிவாகக் கேட்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு