Published:Updated:

`குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் சிக்கும் பெண் ஊழியர்?!' - ராமநாதபுரத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

பதிவாளர் அலுவலகம்-ராமநாதபுரம்
பதிவாளர் அலுவலகம்-ராமநாதபுரம் ( உ.பாண்டி )

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு அரசுப் பணிக்கான தேர்வை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், முறைகேட்டுக்குத் துணை போன அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2ஏ தேர்வில் வெற்றி பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் உதவியாளர் குறித்து ராமநாதபுரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சி.பி.சி.ஐ.டி கைது வேட்டை.
சி.பி.சி.ஐ.டி கைது வேட்டை.
விகடன்

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றியடைந்து தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தவர்களில் 35 பேர் குறிப்பிட்ட இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி நடத்திய விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியானது.

இதையடுத்து, குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு அரசுப் பணிக்கான தேர்வை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. மேலும், முறைகேட்டுக்குத் துணை போன அரசுப் பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்ட சென்னை புதுப்பேட்டை பகுதியில் வசித்துவரும் போலீஸ் எஸ்.ஐ சித்தாண்டி, சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி தேடி வரும் சித்தாண்டி
சி.பி.சி.ஐ.டி தேடி வரும் சித்தாண்டி
விகடன்

இதனிடையே, குரூப் 4 தேர்வு போன்றே குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 42 பேர் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸார் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிவரும் வேல்முருகன், ஜெயராணி, விக்னேஷ், சுதா, ஆனந்தன், ஞானசம்பந்தன், வடிவு மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பலரை தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

பதிவாளர் அலுவலகம்-ராமநாதபுரம்.
பதிவாளர் அலுவலகம்-ராமநாதபுரம்.
உ.பாண்டி

இந்த நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்த்தில் நேற்று (3.2.2020) சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குரூப் 2ஏ தேர்வில் தரவரிசைப் பட்டியலில் 13-வது நபராக இடம் பெற்று பத்திரப்பதிவுத் துறையில் அலுவலக உதவியாளராக பணியாற்றும் பெண் ஒருவரிடம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீஸார் வந்திருந்தனர். தற்போது அந்தப் பெண் உதவியாளர் பணியிடை பயிற்சிக்காக சென்னை சென்றிருப்பதாக போலீஸாரிடம் பதிவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அப்பெண் உதவியாளரை சென்னையில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு