Published:Updated:

`டிஎன்பிஎஸ்சி மோசடியில் சிக்கிய பெண் அரசு ஊழியர்!'- முகப்பேர் ஜெயக்குமாரை நெருங்கும் சிபிசிஐடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்

அரசு அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில், முகப்பேர் ஜெயக்குமாரின் கார் டிரைவர் சம்பத்தின் மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 மற்றும் குரூப் - 2ஏ தேர்வில் அரங்கேறியுள்ள மோசடி தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுவரை மோசடியில் ஈடுபட்டதாகத் தலைமைச் செயலக ஊழியர்கள் முதற்கொண்டு, மோசடியாகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரையில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியின் முக்கியப் புள்ளியாக அறியப்படும் ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்

இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்ட ஜெயக்குமாரின் கார் டிரைவரின் மனைவி போலீஸில் சிக்கியிருக்கிறார். ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், `அரசு அலுவலர் பயிற்சி நிலையம்’ செயல்பட்டு வருகிறது. பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின்கீழ் இயங்கும் இந்த மையத்தில், பல்வேறு அரசுத்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது.

`தவறு நடந்தது உண்மைதான், ஆனால்..?' -தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

1974-ல் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி நிலையத்தில் அரசுப் பணியாளர்களுக்கு 60 நாள்கள் பயிற்சி வழங்கப்படும். அந்தவகையில், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளநிலை உதவியாளர் சுதாதேவி என்பவரிடம் நேற்று முன்தினம் இரவு சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சுதாதேவி முன்னுக்குப் பின் முரணாகப் பல்வேறு தகவல்களைக் கூறியிருக்கிறார். அதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் சுதாதேவியைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த விஷயம் உள்ளூர் போலீஸாருக்கே ஒருநாள் கழித்துதான் தெரிய வந்துள்ளது. சுதாதேவி கைது செய்யப்பட்டதால், அந்தப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த அரசு அலுவர்கள் மிரண்டு போயுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம்

டிஎன்பிஎஸ்சி மோசடிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட முகப்பேர் ஜெயக்குமாரின் கார் டிரைவரான சம்பத் என்பவரின் மனைவிதான் இந்த சுதாதேவி. இவர் குரூப் - 2ஏ தேர்வில் முறைகேடாகத் தேர்ச்சி பெற்று, திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்திருக்கிறார் என்னும் தகவலும் வெளியாகியுள்ளது.

மேலும், பலரிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு, அரசுத் தேர்வில் அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க சுதாதேவி இடைத்தரகராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக, சில ஆவணங்களை சுதாதேவியிடமிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைப்பற்றியுள்ளனர். `அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்தால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மோசடியாக அரசு வேலையில் சேர்ந்தவர்கள் சிக்குவார்கள்' என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு