Published:Updated:

`மேலூர் சாலை; ராமேஸ்வரம் தங்கும் விடுதி!' - ஜெயக்குமார், ஓம்காந்தனிடம் நேரில் விசாரணை #TNPSC

சி.பி.சி.ஐ.டி விசாரணை
சி.பி.சி.ஐ.டி விசாரணை ( உ.பாண்டி )

விடைத்தாள்களை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புரோக்கர் ஜெயக்குமார் தேர்வு நாளுக்கு முன்னதாகவே ராமேஸ்வரத்தில் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகளான ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ராமேஸ்வரத்திற்கு நேரில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை
சி.பி.சி.ஐ.டி விசாரணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 40 பேர் இந்த இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். இதனால் தேர்வில் முறைகேடு நடந்ததாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் முறைகேடுகள் நடந்தது உண்மையென தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இது தொடர்பாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் புகாரினைக் கையில் எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், விசாரணையில் இறங்கினர்.

`கணினி சென்டர் டு  காட்ஃபாதர் ஜெயக்குமார்!' -டிஎன்பிஎஸ்சி மோசடியின் மையப்புள்ளி மிஸ்டர் `என்' யார்?

இந்த விசாரணையில், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வாணையப் பணியாளர் ஓம்காந்தன், சென்னையைச் சேர்ந்த புரோக்கர் ஜெயக்குமார், தேர்வில் முறைகேடாக வெற்றிபெற உதவிய காவலர் சித்தாண்டி மற்றும் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற பல்வேறு நபர்கள் எனப் பலரையும் கைது செய்து வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை
சி.பி.சி.ஐ.டி விசாரணை

குரூப்-4 தேர்வில் பங்கேற்றவர்களின் விடைத்தாளை சென்னைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஓம்காந்தனின் உதவியுடன் புரோக்கர் ஜெயக்குமார் மாற்றியதாகத் தெரியவந்தது. மேலும், தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், விரைவாக அழிந்து விடும் மையைக் கொண்ட பேனாவைப் பயன்படுத்தியதும், இந்த பேனாக்களை ஜெயக்குமார் அந்தத் தேர்வர்களுக்கு வழங்கியதும் தெரியவந்தது. விடைத்தாள்களை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புரோக்கர் ஜெயக்குமார் தேர்வு நாளுக்கு முன்னதாகவே ராமேஸ்வரத்தில் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் ஜெயக்குமாரை இரண்டாவது முறையாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று காலை மேலூருக்கு அழைத்து வரப்பட்ட ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தன் ஆகியோர், விடைத்தாள்களை எங்கு வைத்து மாற்றினார்கள் என்பது குறித்து நடித்துக்காட்டச் செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த டெமோவினைத் தொடர்ந்து ஜெயக்குமாரை ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து வந்தனர்.

ராமேஸ்வரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை
ராமேஸ்வரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை

அங்கு ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்தன் ஆகியோரிடம் சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பி சிவானு பாண்டியன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் கூறியவற்றை கேமராவில் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் உள்ள தேர்வு மையச் சாலையினையும் பதிவு செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு