கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கூடுதல் புலன்விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. தற்போது சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தொடங்கிய இந்த விசாரணை படிப்படியாக முன்னேறி வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நபர்களில் சிலர் நீலகிரி மாவட்டம், கூடலூர் வழியாக வாகனத்தில் சென்று போலீஸாரிடம் சிக்கினர். பின்னர் சிலரின் சிபாரிசால் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவமே இந்த வழக்கின் மிக முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், கொலை கொள்ளை நடந்த அன்று கூடலூரில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீஸாரிடமிருந்து விடுவிக்க உதவிய நபர்களிடம் இன்று காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியிருக்கிறது.

கூடலூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து முக்கிய தகவல்களை வாக்குமூலங்களாக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு இந்த விசாரணை முக்கிய இடம்பெறும் என்பதாகவும் தெரிகிறது. அடுத்தக்கட்ட தொடர் விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் களமிறங்க இருக்கின்றனர்.