சென்னை துறைமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி பணம் சென்னை கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கியில் கடந்தாண்டு நிரந்தர டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெபாசிட் பணம் அந்த வங்கிக் கணக்கிலிருந்து, போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, நடராஜன் என்பவரின் வங்கிக் கணக்குக்கு நூதன முறையில் மாற்றப்பட்டிருக்கிறது. கணேஷ் தன்னை சென்னை துறைமுக நிதி பிரிவு துணை இயக்குநர் எனக் கூறிக்கொண்டு, போலி ஆவணங்களைத் துறைமுகத்தின் பேரில் தயாரித்து வங்கியில் சமர்ப்பித்து, அதே கோயம்பேடு இந்தியன் வங்கியில் புதிய வங்கிக் கணக்கு ஒன்று தொடங்கியிருக்கிறார்.

போலி ஆவணங்கள் மூலம் தன்னை துறைமுக துணை இயக்குநர் என்று வங்கி அதிகாரிகளை நம்ப வைத்த அவர், துறைமுகத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடியிலிருந்து ரூ.45 கோடியை வேறு வங்கிக் கணக்குக்கு மாற்றியிருக்கிறார். இந்த விவகாரம் வெளியில் கசியத் தொடங்கியதும், அலர்ட்டான துறைமுக நிர்வாகம் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி கணக்கில் மீதமுள்ள ரூ.55 கோடியை முடக்கி துரித நடவடிக்கை மேற்கொண்டது.
அதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து வங்கிக் கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட்ட நடராஜன், வங்கி மேலாளர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கிடையில் அமலாக்கப்பிரிவினரும் இந்த மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இது தொடர்பாகத் தமிழகத்தில் மொத்தம் 15 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில், வழக்கில் தொடர்புடைய நபர்களின் சொத்துகள் முடக்கப்பட்டன. அதேபோல, முன்னதாக சி.பி.ஐ கைது செய்த 11 பேரை, அமலாக்கத்துறையினரும் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்தக் குற்றச் சம்பவத்துக்கு மூளையாக இருந்து செயல்பட்ட சென்னை துறைமுக உதவி கண்காணிப்பாளர் ரகு பெர்னார்டு என்பர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர், துறைமுகத்தின் அசல் ஆவணங்களைத் திருடிக் கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது வரை இந்த வழக்கில், இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட 23 பேர் மீதும் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.