என்.எஸ்.இ-யின் (NSE - National Stock Exchange of India Limited) தலைவராக இருந்தபோது, சித்ரா ராமகிருஷ்ணா செய்த குற்றங்களைப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி தெளிவாக விசாரித்து தகவல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, சித்ரா ராமகிருஷ்ணா தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நேற்று, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்ததையடுத்து, மோசடியில் முக்கிய குற்றவாளிகளாகப் பார்க்கப்படும் சித்ரா ராமகிருஷ்ணா, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் மற்றும் முன்னாள் சி.ஓ.ஓ ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர், விசாரணை முடியும் வரை நாட்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக, `லுக் அவுட்' சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியிட்டு (Initial public offering) நிதித் திரட்ட வேண்டும் என்பது என்.எஸ்.இ-யின் நீண்டகால திட்டம். இதற்கான பணிகளை 2016-ல் தீவிரமாகத் தொடங்கியது இந்நிறுவனம். சில குறிப்பிட்ட இடைத்தரகர்கள் மட்டுமே பலனடையும் வகையில் நடந்த மிகப்பெரிய மோசடியால் அச்சமயத்தில் Co-location முறைகேட்டில் சிக்கியது.
இதுகுறித்து எழுந்த புகாரில் செபி என்.எஸ்.இ-யை விசாரிக்க, முறைகேடு நடந்தது உறுதியானதைத் தொடர்ந்து அபராதமும் விதிக்கப்பட்டது. விசாரணை தொடங்கிய சமயத்தில் சித்ராவும் CEO பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து பதவி விலகினார்.
தற்போது நடைபெற்ற சி.பி.ஐ விசாரணையில் டெல்லியைத் தளமாகக் கொண்ட OPG செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர் மற்றும் விளம்பரதாரர் சஞ்சய் குப்தா மீதும் மத்திய புலனாய்வு நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது, சஞ்சய் குப்தா என்.எஸ்.இ-யின் சர்வர் கட்டமைப்பைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2010 - 2012 காலகட்டத்தில் சஞ்சய் குப்தாவின் தனியார் நிறுவனம், பங்குச் சந்தை தரவுகளை முன்கூட்டியே அறிந்து கொண்டால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற நோக்கத்தில், NSE-ன் அதிகாரிகளுடன் சேர்ந்துள்ளது. பங்குச் சந்தை நிலவரங்கள் வருவதற்கு முன்னமே, இவர்களுக்கு குறுக்கு வழியில் தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பங்குச் சந்தையின் எக்ஸ்சேஞ்ச் சர்வரில், சந்தையில் உள்ள வேறு எந்தத் தரகருக்கு முன்பாகவே முதலில் இந்த நிறுவனம் உள்நுழைந்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிபிஐ, எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டியுள்ளது.