Published:Updated:

தேசிய பங்குச் சந்தை ஊழல்; சித்ரா ராமகிருஷ்ணா கைது... `இமயமலை யோகி'யின் மர்மம் வெளிவருமா?!

சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக அதன் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணாவை சி.பி.ஐ கைதுசெய்திருக்கிறது.

தேசிய பங்குச் சந்தை ஊழல்; சித்ரா ராமகிருஷ்ணா கைது... `இமயமலை யோகி'யின் மர்மம் வெளிவருமா?!

தேசிய பங்குச் சந்தை ஊழல் தொடர்பாக அதன் முன்னாள் தலைமை நிர்வாகி சித்ரா ராமகிருஷ்ணாவை சி.பி.ஐ கைதுசெய்திருக்கிறது.

Published:Updated:
சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தார். அந்த காலகட்டத்தில், பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்றுள்ளன. 1991-ம் ஆண்டு தேசத்தையே உலுக்கிய மும்பை பங்குச் சந்தை ஊழலுக்கு இணையாக மிகப்பெரிய ஊழல் தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சித்ரா ராமகிருஷ்ணா, தற்போது சி.பி.ஐ-யால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

தேசிய பங்குச் சந்தை
தேசிய பங்குச் சந்தை

இந்திய தேசிய பங்குச் சந்தை என்பது உலக அளவில் மிகப்பெரிய பங்குச் சந்தைகளில் ஒன்று. மேலும் இது, ஆசியாவில் இரண்டாவது பெரிய பங்குச் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணம் புழங்குகிற இடமான தேசிய பங்குச் சந்தையில்தான், வித்தியாசமான, விநோதமான முறையில் ஊழல்கள் நடைபெற்றுள்ளன.

நிர்வாகம் சார்ந்த மிக முக்கியமான தகவல்களை `இமயமலை யோகி’ என்று சொல்லப்படும் ஒரு நபருக்கு மின்னஞ்சல் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்துவந்துள்ளார். மேலும், தன் விருப்பப்படி ஒருவரை தன் ஆலோசகராக நியமித்து, அந்த நபருக்கு ஆண்டுக்கு 4.6 கோடி ரூபாய் வரை சம்பளமாக அவர் அள்ளிக்கொடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவரின் ஊழல்கள் குறித்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) புகார்கள் சென்ற பிறகு, சித்ரா ராமகிருஷ்ணா 2016-ம் ஆண்டு திடீரென பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு எதிராக வருமான வரித்துறை சோதனை சமீபத்தில் நடைபெற்றது. சி.பி.ஐ-யும் விசாரணை நடத்திவந்தது. இவரின் ஊழல்கள் தொடர்பாக செபி நடத்திய விசாரணையில் அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் வெளிவந்தன.

கடந்த 20 ஆண்டுகளாக தம்மை வழிநடத்திவரும் யோகி இமயமலையில் வசிக்கிறார் என்று கூறிய சித்ரா ராமகிருஷ்ணா, `அந்த யோகி யார்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார். தனக்கும் யோகிக்குமான உறவு ஓர் ஆன்மிக உறவு என்றும், அவருக்கும் தமக்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

பங்குச் சந்தை (Representational Image)
பங்குச் சந்தை (Representational Image)

`இமயமலை யோகி’ வழிகாட்டல்படி சித்ரா ராமகிருஷ்ணா செய்துள்ள முறைகேடுகளும் ஊழல்களும் தேசிய அளவில் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அலசப்பட்டன. தேசிய பங்குச் சந்தையின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வின் தலைமை ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் 2013-ம் ஆண்டு நியமிக்கப்பட்டதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதுவரை ஒரு தனியார் நிறுவனத்தில் ஆண்டுச் சம்பளமாக 15 லட்சம் பெற்றுவந்த ஆனந்த் சுப்பிரமணியனுக்கு, ஆண்டுக்கு 1.6 கோடி ரூபாய் எனச் சம்பளம் நிர்ணயித்து பணியில் அமர்த்தினார் சித்ரா ராமகிருஷ்ணா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சி.இ.ஓ-வின் தலைமை ஆலோசகர் என்கிற பதவி, தேசிய பங்குச் சந்தை நிர்வாகத்தில் உயர்மட்டப் பதவிகளில் ஒன்று. ஆனால், அந்தப் பதவிக்கு தேர்வுசெய்யப்படும் ஒருவரை, சித்ரா ராமகிருஷ்ணா ஒருவர் மட்டுமே நேர்காணல் செய்திருக்கிறார். மேலும், ஆனந்த் சுப்பிரமணியனின் பணி அனுபவங்களுக்கும், இந்த வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது இன்னோர் அதிர்ச்சி. ஆனந்த் சுப்பிரமணியன் பணி நியமனத்தில் ஹெச்.ஆர் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. 2013-ல் 1.6 கோடி ரூபாய் என இருந்த இந்த நபரின் ஆண்டுச் சம்பளம், 2016-ல் 4.6 கோடி ரூபாய் வரை உயர்ந்தது.

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் சித்ரா ராமகிருஷ்ணா
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் சித்ரா ராமகிருஷ்ணா

விமானத்தில் முதல் வகுப்பில் மட்டுமே பயணம் செய்யும் ஆனந்த் சுப்பிரமணியம், `அலுவல்ரீதியாக’ அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். வார இறுதியில் சென்னைக்கு வந்து செல்லும் வழக்கமும் அவருக்கு உண்டு. 4.6 கோடி ரூபாய் ஆண்டுச் சம்பளம் வாங்கிய ஆனந்த் சுப்பிரமணியனுக்கு, வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வந்து செல்கிற பகுதி நேரப் பணியாம். இன்னோர் அதிர்ச்சி என்னவென்றால், தேசிய பங்குச் சந்தை நிர்வாகம் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை இமயமலை யோகிக்கு மின்னஞ்சலில் சித்ரா ராமகிருஷ்ணா அனுப்பிவைத்ததுதான்.

இமயமலையில் அந்த யோகி எங்கே இருக்கிறார் என்று செபி விசாரணையில் கேட்கப்பட்டபோது, இமயமலையில் எங்கு வேண்டுமானாலும் அவர் இருப்பார் என்று சித்ரா ராமகிருஷ்ணா பதிலளித்துள்ளார். ஆனால், அவரின் பதிலை `செபி’ விசாரணைக்குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

1992-ம் ஆண்டு வெளிவந்த மும்பை பங்குச் சந்தை ஊழல் இந்தியாவையே உலுக்கியது. அதற்கு அடுத்தபடியாக, இந்த ஊழல் தேசிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச் சந்தை ஊழல் விவகாரம் வெடித்த பிறகு, இனிமேல் அது போன்ற ஊழல்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான், தேசிய பங்குச் சந்தை. அதிலும் தற்போது மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

தேசிய பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் கடமை `செபி’ அமைப்புக்கு உண்டு. ஆனால், 2013-ல் எந்த அடிப்படையுமின்றி ஒருவர் மிகப்பெரிய பதவியில் நியமிக்கப்பட்டது பற்றி செபிக்கு தெரியவில்லை. அதன் பிறகு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்கள் வெளிநபருக்கு அனுப்பப்படும் விவகாரமும் செபிக்கு தெரியாமலேயே இருந்திருக்கிறது. தேசிய பங்குச் சந்தை நிர்வாகத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவைச் சுற்றிலும் முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள், இந்த ஊழல்களை மறைத்திருக்கிறார்கள்.

சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ரவி நரேன் ஆகியோர் விசாரணை முடியும் வரை நாட்டைவிட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக `லுக்அவுட்' நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

இமயமலை யோகி யார் என்பதைச் சொல்ல சித்ரா ராமகிருஷ்ணா மறுத்தாலும்கூட, ஆனந்த் சுப்பிரமணின்தான் அந்த யோகி என்ற யூகம் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக கடந்த வாரம் ஆனந்த் சுப்பிரமணியன் சென்னையில் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா சி.பி.ஐ-யால் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தேசிய பங்குச் சந்தையின் கணினி சர்வர் கட்டமைப்பை, பங்குச் சந்தைத் தரகர்களுக்கு உதவும் வகையில் தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக 2018-ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தற்போது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பங்குச் சந்தை
பங்குச் சந்தை

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு சி.பி.ஐ தலைமையகத்தில் இருக்கும் சிறைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். தேசப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய பங்குச் சந்தையில் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றுள்ள நிலையில், அது குறித்து ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வராதது ஏன் என்று முதலீட்டாளர்களும், பொருளாதார நிபுணர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism