Published:Updated:

சாத்தான்குளம்: 17, 13 இடங்களில் கடுமையான காயங்கள்! அதிரவைத்த உடற்கூராய்வு அறிக்கை

சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்
சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்

`ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

`தந்தை ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், மகன் பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் காயங்கள் இருந்தன' என்று சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்
சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ்

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் தலையீட்டால் முதலில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து தற்போது சி.பி.ஐ விசாரித்துவருகிறது. இந்தச் சம்பவம் நடைபெற்றவுடன் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போதே அந்த அறிக்கையில், ``இருவரையும் சாத்தான்குளம் காவல்துறையினர் விடிய விடிய அடித்திருப்பதை அங்கு பணியிலிருந்த பெண் காவலர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார். அங்கிருந்த டேபிள், லத்தியில் ரத்தக்கறைகள் படிந்துள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி எஸ்.எஸ்.ஐ பால்துரை கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.

உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை
உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை

இந்த நிலையில் தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ், ஃபிரான்சிஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

`சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு கரும்புள்ளி!’ - நல்லுறவுக் கூட்டத்தில் எஸ்.பி

இவர்களின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ``சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களின் மரணத்துக்கு உடலில் இருந்த கடுமையான காயங்களே காரணம். ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும் கடுமையான காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி 60 பேரையும், சி.பி.ஐ 35 பேரையும் இதுவரை விசாரித்திருக்கின்றன. சி.பி.ஐ-யின் விசாரணை இன்னும் முடியவில்லை. அதனால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை

அதைத் தொடர்ந்து, `சி.பி.ஐ தரப்பில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பிறகு ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்படும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு