Published:Updated:

ஐ.எஃப்.எஸ் மோசடியில் மத்திய உளவுப்பிரிவு! கிலியில் அரசியல் புள்ளிகள், போலீஸ் அதிகாரிகள்

ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவு அதிகாரிகள், ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, செபி போன்ற மத்திய அரசின் அமைப்புகளையும், தமிழக அரசையும் உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்கக்கூடும் எனத் தெரிகிறது.

ஐ.எஃப்.எஸ் மோசடியில் மத்திய உளவுப்பிரிவு! கிலியில் அரசியல் புள்ளிகள், போலீஸ் அதிகாரிகள்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவு அதிகாரிகள், ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, செபி போன்ற மத்திய அரசின் அமைப்புகளையும், தமிழக அரசையும் உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்கக்கூடும் எனத் தெரிகிறது.

Published:Updated:
ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

சுமார் ரூ.50,000 கோடியுடன் தலைமறைவாகியிருக்கும் ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் தப்பித்து ஓடும் வரை பொறுமையாக இருந்துவிட்டு, தற்சமயம் `தேடுகிறோம்’ என்ற பெயரில் `பாவலா’ காட்டிக்கொண்டிருக்கிறது தமிழக காவல்துறையின் ஓர் அங்கமான பொருளாதாரக் குற்றப்பிரிவு. ஜூனியர் விகடன், நாணயம் விகடன் இதழ்களில் ஜூலை மாத தொடக்கத்திலிருந்தே ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்த கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிபுரியும் உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸார் பலரும் லட்சக்கணக்கில் ஐ.எஃப்.எஸ்ஸில் பணம் முதலீடு செய்திருப்பதால், அது குறித்த தகவல்களை மேலிடத்துக்கு `ரிப்போர்ட்டாக’ கொடுக்காமல் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்
ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் கடந்த மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னரே ஐ.எஃப்.எஸ் விவகாரத்தில் முதலீடு செய்த வேலூர் போலீஸாரை எச்சரித்திருக்கிறார். ஆனால், எஸ்.பி தரப்பிலிருந்தும் மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்படாதது ஏன் என்பதும் அவருக்குத்தான் வெளிச்சம். அதேபோல, விகடன் இதழ்களில் வெளியான `முதல்’ கட்டுரை அன்றே வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியனும் ஐ.எஃப்.எஸ் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்திருக்கிறார். அதன்பிறகு, ஆட்சியரும் மௌனமாகிவிட்டார்.

ஆளும் தரப்பிலிருப்பவர்களின் தலையீட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார மட்டத்திலிருப்பவர்கள் அனைவரும் வாயைமூடி மௌனமாகிவிட்டனர். பின்னர், உயர் நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் பொருளாதாரக் குற்றப்பிரிவு, பெயருக்கு சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸுக்கு உதவியதாகக் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் காத்திருப்போர் பட்டியலுக்குத் தூக்கியடிக்கப்பட்டார். சில தினங்களிலேயே, வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயாவும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸை தப்பிக்க வைக்க ஆனிவிஜயா சுமார் இரண்டரைக் கோடி மாமூல் பெற்றதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

ஜனார்த்தனனுடன்  சேகர்பாபு
ஜனார்த்தனனுடன் சேகர்பாபு

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், ஆளும் தரப்பினரின் ஆதரவு இருந்த காரணத்தால்தான் ஜூலை மாதக் கடைசி வரை ஓடாமலிருந்த லட்சுமி நாராயணன் பிரதர்ஸ், ஆகஸ்ட் முதல் தேதியில் தமிழகத்தை விட்டு தப்பியிருக் கிறார்கள். இவர்கள் இந்தியாவுக்குள் இல்லை. வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. எல்லாம் முடிந்த பின்னரே தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, ஐ.எஃப்.எஸ்ஸில் முதலீடு செய்ய வேண்டாம் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அனைவரும் ஓட்டம் பிடித்த பின்னர் டி.ஜி.பி அறிக்கை விட்டால் என்ன? ஆதங்கப்பட்டால் என்ன? என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருந்தது.

அதேபோல, ஐ.எஃப்.எஸ் சகோதரர்களால் தொடங்கப்பட்ட `மார்க்’ என்ற மற்றொரு மோசடி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் சேகர்பாபு, ராணிப்பேட்டை காந்தி தொடங்கி `நீயா... நானா’ கோபிநாத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட இன்னும் பல திரைப் பிரபலங்களும் பங்கேற்றிருக்கிறார்கள். அந்த படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி, முதலீடு செய்து ஏமாந்த மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. `இவர்களைப் போன்ற பிரபலங்கள் விளம்பரம் செய்வதால்தான் நம்பி நாங்களும் பணத்தை போடுகிறோம். தமிழக முதலமைச்சர், ஐ.எஃப்.எஸ் விவகாரத்தில் ஏன் இன்னும் பேசாமலிருக்கிறார்?’ என்று கேள்விக்குமேல் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள் பணத்தையிழந்த மக்கள். இன்னொருபுறம், மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் இன்னமும் அமைதி காப்பது மக்களை மேலும் கொந்தளிப்படையச் செய்திருக்கின்றன.

மார்க் நிறுவன விழாவில் ரங்கராஜ் பாண்டே
மார்க் நிறுவன விழாவில் ரங்கராஜ் பாண்டே

சென்னையிலிருக்கும் `செபி’ அமைப்பு, முன்கூட்டியே விசாரணை வளையத்துக்குள் ஐ.எஃப்.எஸ் சகோதர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் தப்பியிருக்க மாட்டார்கள். செபியும் கவனக்குறைவாக இருந்திருக்கிறது. தேசிய ஊடகங்களிலும் ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. அதன்பிறகு, மும்பையிலிருக்கும் செபி தலைமையகமாவது, இதுபற்றி சென்னை ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதுவுமில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகள் சுணக்கம் காட்டியதன் விளைவே, ஐ.எஃப்.எஸ் கும்பல் தப்பி ஓடுவதற்கான பாதையை எளிதாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவு அதிகாரிகள் ஐ.எஃப்.எஸ் விவகாரம் குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, செபி போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகள் விசாரணையில் இறங்கக்கூடும். அல்லது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்கும்வரை வேடிக்கை பார்த்தது ஏன்? என்று மத்திய அரசின் அமைப்புகளையும், தமிழக அரசையும் உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்கக்கூடும் எனத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், மக்கள் பணம் மக்களிடமே வந்து சேர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்!