Published:Updated:

டேங்கர் லாரியில் ரசாயனக் கழிவுநீர்! - ராணிப்பேட்டை தொழிற்சாலை மீது அதிரடி நடவடிக்கை

மல்லாடி டிரக்ஸ் தொழிற்சாலை
மல்லாடி டிரக்ஸ் தொழிற்சாலை

அபாயகரமான ரசாயனக் கழிவுநீரை டேங்கர் லாரி மூலம் ஆந்திராவுக்குக் கொண்டுச்சென்ற புகாரில், ராணிப்பேட்டை மல்லாடி தொழிற்சாலையின் மின் இணைப்பு அதிரடியாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ராணிப்பேட்டை பகுதியிலுள்ள பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கழிவுகளை நிலத்திலும், நீர்நிலைகளிலும் விடுவதால், ராணிப்பேட்டை நகரமே உருக்குலைந்துவருகிறது. ``சிப்காட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய நிறுவனங்கள்தான் சூழல் மாசுபாட்டுக்கு மிக முக்கியக் காரணம். அந்த நிறுவனங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை வேண்டும்’’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ராணிப்பேட்டை மக்களும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.

ரசாயனக் கழிவுநீருடன் லாரி
ரசாயனக் கழிவுநீருடன் லாரி

இந்தநிலையில், ``சிப்காட்டிலுள்ள மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து மறுசுழற்சி செய்யப்படாத மிகவும் அபாயகரமான மருந்துக் கழிவுகளை, சட்டவிரோதமாக லாரி மூலம் ஆந்திராவுக்குக் கொண்டு செல்கிறார்கள். அந்தக் கழிவுநீரை அங்குள்ள புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள், காடு மற்றும் மலைப் பகுதிகளில் திறந்துவிடுகிறார்கள்’’ என்று பகீர் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்த ரகசியத் தகவலின்பேரில், ராணிப்பேட்டை சப்-கலெக்டர் இளம்பகவத் மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின் சட்டவிரோதச் செயலை ரகசியமாகக் கண்காணித்துவந்தார். நேற்று இரவு மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து 21,000 லிட்டர் ரசாயனக் கழிவுநீரை ஆந்திர மாநில பதிவெண்கொண்ட டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்வதாகத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த்துறையினர் மூலம் அந்த லாரியை சப்-கலெக்டர் இளம்பகவத் மடக்கிப் பிடித்தார். ராணிப்பேட்டை-பொன்னை சாலையிலுள்ள முகுந்தராயபுரம் லாலா ஏரி என்ற பகுதியில் லாரி பிடிபட்டது. லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட நிலையில் லாரியைப் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். லஞ்சம் கொடுத்து லாரியை மீட்பதற்காக வந்த லாரி உரிமையாளர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், மேலும் எட்டு லாரிகளில் சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் ரசாயனக் கழிவுநீர் மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மல்லாடி டிரக்ஸ் தொழிற்சாலை
மல்லாடி டிரக்ஸ் தொழிற்சாலை

சித்தூரிலிருந்து கல்லாறு செல்லும் பாதையிலுள்ள தடுக்கு என்ற பகுதியில் இந்தக் கழிவுநீரைத் திறந்துவிடுவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. நிறுவனம் தரப்பில், ``அந்தக் கழிவுநீர் ஆந்திராவிலுள்ள சிமென்ட் தயாரிக்கும் கம்பெனிக்கும், தெலங்கானாவிலுள்ள ஒரு கம்பெனிக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், `நிறுவனம் கூறியதில் துளியளவும் உண்மையில்லை’ என்பதும் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின் மின் இணைப்பை சப்-கலெக்டர் இளம்பகவத் துண்டித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் அந்த நிறுவனத்தின் உற்பத்தி தடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி, மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்தின்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு