Published:Updated:

செங்கல்பட்டு: அரை மணி நேரத்தில் இரட்டைக் கொலை! - 2 ரெளடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

என்கவுன்ட்டர்
News
என்கவுன்ட்டர்

செங்கல்பட்டில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த மொய்தீன், தினேஷ் ஆகியோர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செங்கல்பட்டு கே.தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்பு கார்த்திக். இவர் நேற்று இரவு டீக்கடைக்கு வந்தார். அப்போது பைக்கில் மூன்று பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். அதனால் டீக்கடையிலிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்தச் சமயத்தில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்த கும்பல், கார்த்திக்கை சரமாரியாக வெட்டியது. பின்னர் அடையாளம் தெரியாமலிருக்க கார்த்திக்கின் முகத்தைச் சிதைத்தனர். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

இதையடுத்து செங்கல்பட்டு மேட்டுத்தெருவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சீனுவாசன் என்பவரின் மகன் மகேஷ் (22) என்பவரையும் அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்து அரை மணி நேரத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தால் செங்கல்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்துத் தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர போலீஸார் இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னர் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில் இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்து விசாரித்துவந்தனர். மீதமுள்ள இரண்டு பேரை போலீஸார் தேடிவந்தனர். அப்போது அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் இருவரையும் சரணடையும்படி கூறினர். அப்போது திடீரென இருவரும் போலீஸாரைத் தாக்க விட்டு தப்பிச் செல்ல முயன்றனர். உடனடியாக போலீஸார் தற்காப்புக்காக இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். அதில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருவரும் கீழே விழுந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவர்களைப் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். போலீஸாரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தது மொய்தீன், தினேஷ் எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து செங்கல்பட்டு போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த மொய்தீன், தினேஷ் ஆகியோரைப் பிடிக்க போலீஸார் சென்றபோது திடீரென அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவர்களைச் சரணடையும்படி போலீஸார் எச்சரித்தனர். ஆனால் இருவரும் வெடிகுண்டுகளை வீசித் தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீஸார் தற்காப்புக்காக அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அதில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சம்பவத்தில் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட . தினேஷ், மொய்தீன் மீது கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்ட அப்பு என்கிற கார்த்திக், மகேஷ் ஆகியோருக்கும் என்கவுன்ட்டரில் உயிரிழந்த தினேஷ், மொய்தீன் ஆகியோருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு முதல் முன்விரோதம் இருந்துவந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது" என்றனர்.