Published:Updated:

புதுச்சேரி: `குற்றப் பின்னணி அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்!’ கண்டித்த உயர் நீதிமன்றம்

புதுச்சேரி
புதுச்சேரி

``புதுச்சேரி மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் பின்புலத்துடன் குற்றவாளிகள் உலாவருகின்றனர்” என்று புதுச்சேரி அரசையும், போலீஸையும் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

அமைதியான யூனியன் பிரதேசமாகத் திகழ்ந்த புதுச்சேரி, கடந்த 15 வருடங்களாக ரவுடிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. ’கொலை, கொள்ளை, வழிப்பறி என ரத்த வெறியுடன் ரவுடிகள் வீதியில் உலாவருகிறார்கள். அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்’ என்ற புதுச்சேரி மக்களின் குற்றச்சாட்டை உறுதி செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி ஜனா (எ) ஜனார்த்தனன். இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி எனப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன,

புதுச்சேரி காவல்துறை
புதுச்சேரி காவல்துறை
Representational Image

2017-ம் ஆண்டு திருபுவனையில் தொழிலதிபர் வேலழகன் கொலை வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்த ரவுடி ஜனாவை, 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. தொடர்ந்து ரவுடி ஜனாவை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் அவரது மனைவி ஜமுனா. அந்த வழக்கு நேற்று முன் தினம் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பரதச்சக்கரவர்த்தி, “மனுதாரரின் கணவரான ஜனா (எ) ஜனார்த்தனன் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி என 19 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதன் காரணமாகவே போலீஸ் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரரின் வழக்கறிஞர், “மனுதாரரின் கணவர் மீது 2009-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரைதான் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. விசாரணை முழுமையாக முடிவடையும் முன்னரே அவரை சிறையில் அடைத்திருக்கின்றனர்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அதுகுறித்த ஆவணங்கள் அனைத்தையும் பார்வையிட்ட நீதிபதிகள், “2009-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் அனைத்தும் தற்போது வரை முதல் தகவல் அறிக்கை அளவிலேயே இருக்கின்றன. அந்த வழக்குகளின் புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் விசாரணை தொடங்கப்படவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக புதுச்சேரி போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? பல குற்றவாளிகள் அரசியல் பின்புலத்துடன் புதுச்சேரியில் உலாவருகிறார்கள். புதுச்சேரி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலைதான் தொடர்கிறது. இந்தக் குற்றப் பின்னணி அரசியல் ஒழிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் 11 ஆண்டுகள் புலன் விசாரணையை முடிக்காமல் போலீஸ் ஏன் இழுத்தடித்து வருகிறது என்று விளக்கமளிக்க டி.ஜி.பி நேரில் ஆஜராக விளக்கமளிக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட நேரிடும். எனவே, இதற்கு விரிவான பதில் மனுவை புதுச்சேரி போலீஸ் உடனே தாக்கல் செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி போலீஸுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.

`பழிக்குப்பழி கொலைகள்; அரசியல் என்ட்ரி!’- புதுச்சேரி பெண் தாதா எழிலரசியின்`திடீர்’ கைது பின்னணி

தொடர்ந்து, ”சென்னை மாநகராட்சியின் எல்லையைவிட குறைந்த எல்லையைக் கொண்ட புதுச்சேரியில் நிர்வாகப் பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பெரிய மாநிலங்களில் இருப்பது போல அங்கு கவர்னர், முதல்வர், எம்.எல்.ஏ-க்கள் என அனைவரும் இருக்கின்றனர். அப்படி இருக்கும்பட்சத்தில் சிறிய பகுதியான புதுச்சேரியில் சிறப்பான நிர்வாகத்தை மேற்கொள்ளலாமே” என்று கடுகடுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு