Published:Updated:

`இந்தி தெரியாது; ஆனால், இந்தியில் தேர்வு எழுதினார்!' -நீட் தேர்வு மோசடியில் சிக்கிய சென்னை மாணவர்

நீட் தேர்வு முறைகேடு
நீட் தேர்வு முறைகேடு

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவன் தனுஷ்குமார் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் தமிழகக் காவல்துறைக்குக் கிடைத்தது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா, அவரின் தந்தை வெங்கடேசன், பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவர் ராகுல், அவரின் தந்தை டேவிஸ், சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா, அவரின் தாய் மைனாவதி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான், அவரின் தந்தை முகமது சஃபி, எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீன், அவரின் தந்தை சரவணன் என அடுத்தடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு முறைகேடு
நீட் தேர்வு முறைகேடு
அதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா? #DoubtOfCommonMan  

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் டிஜிபி ஜாபர்சேட் உத்தரவின்பேரில் ஐஜி சங்கர் மேற்பார்வையில் சிபிசிஐடி போலீஸார் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்திவருகிறார்கள். 2019-20ம் கல்வி ஆண்டு போல 2018-19-வது கல்வி ஆண்டிலும் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது குறித்து சிபிசிஐடி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாருக்குத் தற்போது தமிழக மருத்துவக்கல்லூரிகளில் 2-ம் ஆண்டு படித்துவரும் 10 மாணவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. அவர்கள் குறித்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்தனர்.

போலீஸாரின் வளையத்திலிருப்பவர்கள் குறித்த விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் நிர்வாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதுதொடர்பாக அந்தந்த கல்லூரியின் முதல்வர்கள் விசாரணை நடத்தினர். 2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த தனுஷ்குமார் என்ற 2-ஆண்டு மாணவன் மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது.

சிபிசிஐடி போலீஸார் வெளியிட்ட  மாணவர்களின் புகைப்படங்கள்
சிபிசிஐடி போலீஸார் வெளியிட்ட மாணவர்களின் புகைப்படங்கள்

அதனால், தனுஷ்குமார் மீது சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்திலிருந்து சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் பூக்கடை போலீஸார் முதற்கட்ட விசாரணையை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதனால் 2018-19ம் கல்வியாண்டில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மேலும் ஒரு வழக்கைப்பதிவு செய்தனர். புகாரளிக்கப்பட்டதும் சென்னை மருத்துவக்கல்லூரி மாணவன் தனுஷ்குமார், குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டார். தனுஷ்குமார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், ``ஏற்கெனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 10 பேரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தோம். தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் தனுஷ்குமார், அவரின் தந்தை ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் தனுஷ்குமார், பீகாரில் இந்தி மொழியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் நடந்த கவுன்சலிங்கில் சென்னை மருத்துவக்கல்லூரியை அவர் தேர்வு செய்துள்ளார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம்
நீட் தேர்வு ஆள்மாறாட்டம்
Representational Image

பீகாரில் தேர்வு எழுதியதாக தனுஷ்குமார் தாக்கல் செய்த ஆவணங்கள் குறித்து விசாரித்தபோதுதான் ஆள்மாறாட்டம் நடந்த தகவல் தெரியவந்தது. தனுஷ்குமார் என்ற பெயரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு எழுதியிருப்பதைக் கண்டறிந்தோம். தனுஷ்குமார், நீட் தேர்வை இந்தியில் எழுதியதாக மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காகக் கொடுத்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது. அதனால்தான் அவர் எங்களிடம் சிக்கிக் கொண்டார். தனுஷ்குமாரின் அப்பா தேவேந்திரன் தொழிலதிபர். இவர்கள், பல லட்சம் ரூபாயைக் கொடுத்து நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இதையடுத்து, சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவன் தனுஷ்குமார், அவரின் தந்தை தேவேந்திரன் ஆகியோரைப் பிடித்துள்ளோம். தனுஷ்குமாருக்காக பீகாரில் தேர்வு எழுதியவர் யாரென்று விசாரித்துவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு