Published:Updated:

`ஆசையைத் தூண்டு; கோடிகளை அள்ளு!' - போலி அரசு வேலை உத்தரவால் சிக்கிய அண்ணா பல்கலை. துணைப் பதிவாளர்

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அரசு வேலைக்கான நியமன ஆர்டர்களை போலியாக தயாரித்து விநியோகித்து பல கோடிகளைச் சுருட்டியதாக அண்ணா பல்கலைக்கழக துணைப் பதிவாளர், அவரின் மகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் துணைப் பதிவாளராகப் பணியாற்றிவரும் பார்த்தசாரதி, அவரின் மகன் விஸ்வேஸ்வர் ஆகியோர் இணைந்து அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிகளைச் சுருட்டியதாக மத்திய குற்றப்பிரிவுக்கு புகார்கள் வந்தன. விஸ்வேஸ்வரைக் கைது செய்த போலீஸாரால் மேலிட அழுத்தம் காரணமாகத் துணை பதிவாளரைக் கைது செய்ய முடியவில்லை. அவர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.

துணைப் பதிவாளர் பார்த்தசாரதி, அவரின் மகன் விஸ்வேஸ்வர் உட்பட 9 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். அதில் புரோக்கர்கள் ஆறுமுகம், ராஜீ, ராஜபாண்டி, விஸ்வேஸ்வர் ஆகிய 4 பேரைக் கடந்த 25.10.2019-ல் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடி செய்ததற்கு ஆதாரமாக லேப்டாப், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த 25.10.2019-ல் கொடுத்த புகாரில் `சூளை புதூர் ராமசாமி மூலம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த விஸ்வாஸ் என்கிற விஸ்வேஸ்வரன் என்பவரும் அவரின் தந்தை பார்த்தசாரதியும் மின்வாரியம், பொதுப்பணித்துறை, ஆசிரியர் நியமனம் என பல துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி 85 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஈரோடு மாவட்டம், ஊத்துக்குளி கிராமம், திப்பம்பாளையம், கரட்டுப்பாளையம் வள்ளி இளங்கோ (41) என்பவர் கொடுத்த புகாரில் `ஒகேனக்கலில் என்னிடம் அறிமுகமான விஸ்வேஸ்வரன், அவரின் அப்பா பார்த்தசாரதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப் பதிவாளராக பணிபுரிவதாகவும் அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறியதன் பேரில் 15.8.2017 அன்று நான்கு நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓ வேலைக்காக ரூ.40 லட்சம் கொடுத்தேன்.

அதற்கு 18.8.2017 அன்று கால் லெட்டர் கொடுத்தார். மின்வாரியத்தில் உதவி இன்ஜினீயர், இளநிலை இன்ஜினீயர், இளநிலை உதவியாளர் பணிக்கு 20 நபர்களுக்கு 60 லட்சம் ரூபாயும் அதன்பின் பொதுப்பணித்துறையில் 5 நபருக்கு வேலைக்காக 20 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1,20,00,000 ரூபாயைப் பெற்றுக் கொண்டு போலியான ஆர்டர் கொடுத்து ஏமாற்றிவிட்டனர். எனவே விஸ்வேஸ்வரன், பார்த்தசாரதி ஆகியோருக்கு உதவியாக இருந்த ரவீந்தர ராஜா மற்றும் சூளைபுதூர் ராமசாமி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

மேலும், மதுரை திருமால்புரம் ஊமச்சிகுளம் சாஸ்திரிநகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கொடுத்த புகாரில் சிந்தாரிப்பேட்டையைச் சேர்ந்த விஸ்வேஸ்வரன், அவரின் தந்தை பார்த்தசாரதி (துணை பதிவாளர் எம்.ஐ.டி குரோம்பேட்டை) இருவரும் சேர்ந்து 1,26,49,000 ரூபாய் சுமார் 36 நபர்களுக்கு மின்வாரியத்தில் வேலைவாங்கி தருவதாகக் கூறி பணத்தை பெற்று போலியான வேலைவாய்ப்பு உத்தரவைக் கொடுத்து ஏமாற்றியதாக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக, போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பதிவாளராக வேலைபார்க்கும் பார்த்தசாரதி என்பவரின் மகன் விஸ்வேஸ்வரன் சிலரை ஏஜென்டுகளைப்போல வைத்துக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓ வேலைக்கு ரூ.15 லட்சமும் மின்வாரியத்தில் உதவி இன்ஜினீயர் வேலைக்கு ரூ.10 லட்சமும் இளநிலை உதவியாளர் வேலைக்கு ரூ.8 லட்சமும் ஆசிரியர் வேலைக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயம் செய்து பணம் வசூலித்துள்ளார். பணம் கொடுத்தால் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அரசு வேலை தேடும் இளைஞர்களிடம் பணத்தைப் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும், மின்வாரியத்தில் வேலைக்காகப் பணம் கட்டிய நபர்களுக்கு மின்வாரியத்தில் வேலை செய்யும் சில நபர்களின் துணைகொண்டு போலியான வேலைவாய்ப்பு உத்தரவுகளை வழங்கி ஏமாற்றியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட விஸ்வேஸ்வரன் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் போலியான இன்டர்வியூ அழைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவுகளை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ரவீந்திரராஜா, பார்த்தசாரதி, வள்ளி இளங்கோ, ராமசாமி, இளங்கோவன், ஆறுமுகம், ராஜபாண்டி, ராஜு, விஸ்வேஸ்வரன் ஆகிய 9 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 420, 465, 467, 468, 471, 120 பி ஆகியவற்றின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஸ்வேஸ்வரன்
விஸ்வேஸ்வரன்

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டோம். ``விஸ்வேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளை பல்வேறு தடைகளுக்கு மத்தியில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். விஸ்வேஸ்வரனின் அப்பா பார்த்தசாரதி மற்றும் இன்னும் சிலரை இந்த வழக்கில் தேடிவருகிறோம். இவர்கள் கொடுத்த போலி நியமன ஆர்டர்கள், பணபரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி விவரங்கள் எனப் பல ஆதாரங்களை சேகரித்துள்ளோம். விஸ்வேஸ்வருக்கு புரோக்கராகச் செயல்பட்டவர்களே குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு வாக்குமூலமும் அளித்துள்ளனர். விஸ்வேஸ்வரின் அப்பா பார்த்தசாரதியை மையப்படுத்தியே இந்த மோசடி நடந்துள்ளது" என்றனர்.

யார் இந்தப் பார்த்தசாரதி?

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வரவேற்பு பிரிவில் பணியாற்றியவர் பார்த்தசாரதி. அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஒருவர் மூலம் மாற்றுப்பணியில் பி.ஆர்.ஓ-வாக பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று உதவிப் பதிவாளரானார். தற்போது துணைப் பதிவாளராகப் பணியாற்றிவருகிறார்.

பார்த்தசாரதிக்கு அண்ணா பல்கலைகழகத்தில் நட்பு வட்டாரம் அதிகம். அண்ணா பல்கலைக்கழகத்தில் முக்கிய பதவியிலிருக்கும் ஒருவர் பார்த்தசாரதிக்கு உறுதுணையாக இருந்துவருகிறார். அந்த அதிகாரி துணைவேந்தராக முயற்சி செய்துவருகிறார். அவருக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் உயர்கல்வித்துறையில் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளார். அதனால் பார்த்தசாரதி மற்றும் அவரின் நட்பு வட்டாரங்கள், `அக்கா வந்துவிட்டார். இனிமேல் நமக்கு கவலையில்லை' என்று கூறிவருகின்றனர்.

எப்ஐஆர்
எப்ஐஆர்

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அடுத்தடுத்து கைது படலம் நடந்துவரும் நேரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த புகாரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகும் எம்.ஐ.டி-யில் உயர்பதவியிலிருக்கும் பார்த்தசாரதி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது ஆச்சர்யமான தகவல். அதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள இந்த வழக்கையும் சிபிசிஐடிக்கு மாற்றினால் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பார்த்தசாரதி, விஸ்வேஸ்வரன் ஆகியோரிடம் விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். அவர்கள் பதிலளிக்க முன்வரவில்லை. மோசடிப் புகார்கள் தொடர்பாக இருவரும் விளக்கம் அளிக்க முன்வந்தால், அதை உரிய பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் கருணாமூர்த்தி ஆகியோரைத் தொடர்புகொண்டபோது, இருவரும் மீட்டிங்கில் இருப்பதாக உதவியாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு