Published:Updated:

சென்னை: கள்ளச்சாவி மூலம் ரூ.4.5 கோடி கொள்ளை! - தொழிலதிபர் வீட்டில் கைவரிசைகாட்டிய ஊழியர்

கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
News
கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் கள்ளச்சாவி போட்டு கொள்ளையடித்த வழக்கில் ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை ஆழ்வார் திருநகர், சித்து விநாயகர் கோயில் தெருவில் வசித்துவருபவர் ஆமெல்லா ஜோதினி. இவரின் கணவர் கோபால், தொழிலதிபர். கடந்த 17.11.2021-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டுக்குச் சென்றனர். பின்னர், 20.11.2021-ம் தேதி வீட்டுக்கு வந்தபோது கதவு திறக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த நான்கரை கோடி ரூபாய் பணம், 30 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போயிருந்தன. இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆமெல்லா ஜோதினி புகாரளித்தார். அதன்பேரில் சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில், வளசரவாக்கம் உதவி கமிஷனர் கவியன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்ட மணி
கைதுசெய்யப்பட்ட மணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொள்ளை நடந்த வீட்டின் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது கொள்ளைக் கும்பல் பயன்படுத்திய காரின் பதிவு நம்பரைக்கொண்டு அவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர். பின்னர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மணி (31), சதீஷ்குமார் (32), சுரேஷ் (32), ஆறுமுகம் (49) ஆகிய நான்கு பேரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 1.35 கோடி ரூபாய், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் இந்தக் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த கோவூர், ஸ்ரீகுமரன் நகரைச் சேர்ந்த சேகர் (57) என்பவரை போலீஸார் கைதுசெய்து அவரிடமிருந்து 1.7 கோடி ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இதுவரை ஐந்து பேரைக் கைதுசெய்திருக்கிறோம். இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சிசிடிவி மூலம்தான் இந்த வழக்கில் துப்பு துலங்கியது. கைதுசெய்யப்பட்ட மணி, டிரைவராக வேலை பார்த்துவருகிறார். சேகர், தொழிலதிபர் கோபாலிடம் நீண்டகாலமாக வேலை பார்த்துவந்திருக்கிறார். அதனால் கோபால், ஆழ்வார்திருநகர் வீட்டில் பணம் வைத்திருப்பது சேகருக்குத் தெரிந்திருகிறது. அவர் அளித்த தகவலின்படி இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.

இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ்
இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ்

மேலும், கோபால், அவரின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் கள்ளச்சாவியை கொள்ளைக் கும்பல் ரெடி செய்திருக்கிறது. அதைவைத்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சேகரின் உறவினர் ஒருவர் ஒரு கட்சியில் இயங்கிவருகிறார். அவருக்கும் இந்தக் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் சிக்கினால்தான் கொள்ளை குறித்த முழு விவரமும் தெரியவரும்" என்றனர்.