Published:Updated:

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்கு பதிவு! - காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

கொடுங்கையூர் காவல் நிலையம்

சென்னை கொடுங்கையூரில் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீமா உட்பட 9 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்கு பதிவு! - காவல் நிலையத்தில் நடந்தது என்ன?

சென்னை கொடுங்கையூரில் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நசீமா உட்பட 9 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published:Updated:
கொடுங்கையூர் காவல் நிலையம்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 20.1.2022-ம் தேதி சென்னை புதுநகர், 8-வது தெருவைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் என்பவர் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கொண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். நான் ஸ்கூல் ஆஃப் எக்ஸ்சலென்ஸ் கல்லூரியில் படித்துவருகிறேன். நான் கடந்த 13.1.2002-ம் தேதி என் கஸ்டமருக்கு மருந்தை டோர் டெலிவரி செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். சுமார் இரவு 11:30 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எம்.ஆர் சந்திப்பு பகுதியில் இருந்த காவல்துறையினர் என்னை வழிமறித்து மாஸ்க் அணியாததற்கு 500 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம்
காவல் நிலையத்தில் அப்துல் ரஹீம்

நான் மாஸ்க் அணிந்திருக்கும்போது ஏன் அபராதம் கட்ட வேண்டும் எனக் கேட்டேன். மேலும் நான் பணிபுரியும் மருந்தகத்தின் அடையாள அட்டையையும் காண்பித்து விளக்கினேன். அப்போது உத்திர குமார் என்ற காவலர் என்னை அடித்து காவல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றார். அங்கு ஹேமநாதன் என்ற காவலர், `உன்மீது பெட்டி கேஸ் போட்டுள்ளேன். கைரேகை வை' என மிரட்டி கைரேகை வாங்கக்கொண்டார். பின்பு சைக்கிளைக் கேட்டதற்கும், என்மீது போடப்பட்ட வழக்குக்கு விளக்கம் கேட்டதற்கும் ஆத்திரமடைந்த காவலர் உத்திரகுமார் என்னைத் தகராத வார்த்தையால் பேசி தலையிலும், முகத்திலும், கழுத்திலும் தாக்கினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பின்னர் பைப்பை எடுத்து கண்மூடித்தனமாகத் தாக்கினார். அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் நசீமா என்பவர் என்னைப் பார்த்தும் என் படிப்பை குறித்தும் அநாகரிகமாகப் பேசினார். மேலும் உங்களையெல்லாம் சும்மாவிடக் கூடாது என்று கூறி கொலைவெறித்தனமாக தாக்கத் தொடங்கினார். பிறகு காவலர் ஹேமநாதன் என்னைத் தாக்கி ஆடைகளை கழற்றச் சொன்னார். சிறிது நேரத்தில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் நசீமாவும், காவலர் உத்திரகுமாரும் மாறி மாறி கொலைவெறியோடு தாக்கினர்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

`போலீஸ் ட்ரீட்மென்ட்ல போலிஸுன்னா யாருன்னு தெரியும் பாருடா'ன்னு சொல்லிவிட்டு சத்தியராஜ் என்ற காவலரும் உத்திரகுமாரும் தாக்கத் தொடங்கினர். சத்தியராஜ் என்பவர், என் கால் முட்டிகளின் மீது ஏறி நிற்க... உத்திரகுமார் அடிப்பாதத்தில் பைப்பால் கடுமையாகத் தாக்கினார். பின்பு அங்கிருந்த பெயர் தெரியாத, பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய கட்டம் போட்ட சர்ட் அணிந்திருந்த காவலர் என் கன்னத்தில் அடித்ததோடு தலையைப் பிடித்து பீரோவில் வேகமாகப் பல தடவை முட்டினார். அப்போது வந்த பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய ஏட்டு வந்து என் கழுத்தில் இரண்டு முறை கொடூரமாகத் தாக்கினார். காவலர்களின் இந்தக் கொடும் சித்ரவதையால் வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு மன அழுத்ததுக்கு நான் ஆளானேன்.

அப்துல்ரஹீமைத் தாக்கும் போலீஸ்
அப்துல்ரஹீமைத் தாக்கும் போலீஸ்

பின்பு நான் இட்லியைச் சாப்பிட முயன்றபோது பூமிநாதன் என்ற காவலர் பூட்ஸ் காலால் முகத்தில் ஓங்கி மிதித்தார். அதனால் என் இடது கண் அருகில் கிழிந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. ஆனாலும் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் மிதித்தார். நான் `I have not done anything sir' என்று ஆங்கிலத்தில் பேசினேன். அதற்குக் காவலர் பூமிநாதன், `இங்கிலீஸில்தான் பேசுவீயா... தமிழ் உனக்கு வராதா' என்று என் மதத்தைப் புண்படுத்தும் வகையில் பேசினார். அதன் பிறகு பாத்ரூமுக்கு இழுத்துச் சென்று ரத்தத்தை எனது சட்டையைக் கழற்றி துடைக்கச் சொன்னார். பிறகு சர்ட்டை அங்கு துவைக்கச் சொன்னார். நான் மறுத்ததற்கு, `நீ அலசுகிறாயா இல்லை வேற மாதிரி அலசவெக்கவா' என்று சொல்லி அவரது பேன்ட்டைக் கழற்றி சிறுநீர் கழிக்க முற்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்பு அருகில் இருந்த கழிவுநீரை என் மேல் ஊற்றினார். நான் அப்போது வலியில் மயங்கி விழும் நிலையில் இருந்தேன். பின்பு அந்தோணி என்ற காவலர் என்னை மச்சம் காட்டச் சொல்லி நிர்வாணப்படுத்தி, `இப்ப தெரியுதா யார் பெரியாள்னு' என்று சிரித்தார். அப்போது ராமலிங்கம் என்ற காவலர் எனது செல்போனில் இருந்த எனது சகோதரிகளின் புகைப்படத்தைத் தகாத முறையில் பார்த்துக்கொண்டிருந்தார். இப்படி சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் அடைத்துவைத்து, கொலைவெறியோடு, ஆபாசமாகத் திட்டி, எனது மதத்தை இழிவுப்படுத்தி மிகப்பெரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் நசிமா உட்பட அனைத்து குற்றமிழைத்த காவலர்கள் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

மேலும், இனி வரும் காலங்களில் காவலர்களால் எந்தவித பிரச்னையும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சம்பவம் நிகழ்ந்தபோது பதற்றத்துடன் இருந்த காரணத்தால் முழுமையாக என்னால் எழுதித் தர இயலவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323, 324 ஆகிய பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீஸார் இன்ஸ்பெக்டர் நசிமா உட்பட ஒன்பது காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். ஏற்கெனவே மாணவனைத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக காவலர்கள் பூமிநாதன், உத்திரக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அப்துல் ரஹீமுக்கு நீதி கேட்டு நேற்று புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism