Published:Updated:

YMCA கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?

கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு
News
கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

YMCA கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு; போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள் - என்ன நடந்தது?

சென்னை ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Published:Updated:
கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு
News
கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

பாலியல் குற்றச்சாட்டு:

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டுவருகிறது. இங்கு கிட்டத்தட்ட 600 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். இந்தக் கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆபிரகாம் என்பவர் இருந்துவருகிறார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு பயின்றுவரும் மாணவி ஒருவர், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

ஜார்ஜ் ஆபிரகாம்
ஜார்ஜ் ஆபிரகாம்

அந்தப் புகாரில், "விடுதியில் தங்கி முதுநிலை பட்டப்படிப்பு படித்துவருகிறேன். கல்லூரி முதல்வர், உதவி செய்வதுபோல என்னிடம் பேசி, என்னுடைய மொபைல் போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார். மேலும், எனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார் அந்த மாணவி. இந்தப் புகாரையடுத்து, சைதாப்பேட்டை பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர்கள் போராட்டம்:

மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் கல்லூரி முதல்வர் மாணவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாகக் கருதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீஸார், இந்தப் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தொடர் விசாரணை செய்தனர். இந்த நிலையில், போலீஸார் முதல்வர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மீண்டும் கல்லூரிக்கு வந்த முதல்வர், தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

இது குறித்து போராட்டம் நடத்திவரும் மாணவர்களிடம் நேரடியாகச் சென்று பேசினோம். நம்மிடம் பேசிய மாணவர்கள் சிலர், "ஆசியாவின் முதல் உடற்கல்வியியல் கல்லூரி இதுதான். ஆனால், அடிப்படை வசதிகள்கூட எதுவும் கிடையாது. வருடத்துக்குக் கட்டணம் மட்டும் 80,000-க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய கல்லூரியில் மாணவர்கள் ஓடுவதற்கு ஓர் உருப்படியான மைதானம் கிடையாது. இருக்கும் மைதானத்தையும் அடிக்கடி வாடகைக்கு விட்டுவிடுகிறார்கள். மாலை நேரங்களில் மூலையில் மட்டும்தான் விளக்குகள் இருக்கும். கேம்பஸ் முழுவதுமே நாய்கள் தொல்லை அதிகம்.

கொரோனா காலகட்டத்தில் அதிகமாக வசூல்செய்த கட்டணத்தைத் திரும்பத் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தனர். ஆனால், பலமாத காலமாகியும் இன்றுவரை அந்தத் தொகை எங்களை வந்தடையவில்லை. விடுதியிலுள்ள கழிவறைகளில் நீர் வருவது கிடையாது. நாங்கள் குடிப்பதற்கு குடிநீர் வசதி எங்கும் இல்லை. அப்படி வரும் நீரிலும் புழுக்கள் இருக்கின்றன. இது குறித்து எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், எந்தப் பயனும் இல்லை.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

தற்போதைய முதல்வர் கல்லூரி, பெண் பணியாளர்கள் தொடங்கிப் பல மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஏற்கெனவே ஒரு மாணவி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். இருந்தபோதிலும், அனைத்தையும் சரிக்கட்டி மீண்டும் கல்லூரிக்கு வந்து புகார் தெரிவிக்கும் மாணவர்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார். பல மாணவிகள் முதல்வரின் பாலியல் தொல்லைக்கு ஆளாகிவருவதை எங்களால் பார்க்க முடிகிறது. இந்த பிரச்னைகளுக்காகவே நாங்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்" என்றனர் விரிவாக.

எந்த வசதியும் இல்லை:

நம்மிடம் பேசிய முதுகலை மாணவி ஒருவர், "என்னுடன் படிக்கும் சகமாணவிகள் சிலருக்கு முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இந்தக் கல்லூரியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பல போராட்டங்களுக்குப் பிறகே தற்போது சாப்பாடு ஓரளவு சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது. நாங்கள் போடும் சீருடைக்கு 6,000 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால், இது 500 ரூபாய்க்குக்கூட தேறாது. இந்த டி-சர்ட்டை போட்டால் உள்ளே இருப்பது அனைத்தும் அப்படியே தெரியும். நோட் புக் தொடங்கி அனைத்திலும் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்" என்று நொந்துகொண்டார்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

மாணவிகள் சிலர், கல்லூரி முதல்வர் தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளிப்படையாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைக் காணமுடிந்தது. அதே சமயத்தில் மாணவர்கள் சொல்வதுபோல, விடுதி தாண்டி எங்குமே குடிநீர் வசதி இல்லை என்பதையும் காணமுடிந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாமின் செல்போனுக்குத் தொடர்புகொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. மேலும், அவருக்குக் குறுஞ்செய்தியும் அனுப்பியிருக்கிறோம். அவர் விளக்கமளித்தால் அதைப் பரிசீலனை செய்து வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

டெல்லியில், மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் கூட்டமைப்பின் தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில், சென்னையிலும் மாணவர்கள் கல்லூரி முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து போராட்டம் நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.