Published:Updated:

நீலகிரி: டிப்பர் லாரிக்கு ரூ.40,000; டாஸ்மாக்குக்கு ரூ.10,000! விஜிலென்ஸில் சிக்கிய இன்ஸ்பெக்டர்

ஆனந்தவேலு
ஆனந்தவேலு

``ஏதோ நூறு, இருநூறு ரூபாய் கேட்டா பரவாயில்லை. மாசத்துக்கே பேரம் பேசி மொத்தமா கேட்டா என்ன பண்றது?" என சரக்கு வாகன ஓட்டுநர்கள் புலம்புகிறார்கள்.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகிலுள்ள சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் ஆனந்தவேலு. தமிழ்நாடு - கேரளா எல்லை அருகில் இந்தக் காவல் நிலையம் அமைந்திருப்பதால், வெளி மாநிலங்களிலிருந்து சரக்கு வாகனங்கள் அதிக அளவில் இந்தச் சாலையைக் கடக்கினறன.

சேரம்பாடி காவல் நிலையம்
சேரம்பாடி காவல் நிலையம்

இங்கு வரக்கூடிய சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை, மாதம் தவறாமல் லஞ்சமாகக் கேட்டு தொந்தரவு செய்வதாக ஆய்வாளர் ஆனந்த வேலு மீது தொடர் புகார்கள் எழுந்தன. மேலும், இங்கிருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் 10,000 ரூபாயை மாதம் தவறாமல் லஞ்சமாகப் பெற்றுவருகிறார் என்ற புகாரும் இருக்கிறது.

இந்தநிலையில், கேரள மாநிலம், நிலம்பூர் பகுதியைச் சேர்ந்த, பின்ஸ் என்பவர் அவருடைய 10 டிப்பர் லாரிகளில், நாள்தோறும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டுவந்திருக்கிறார். டிப்பர் லாரியை அனுமதிக்க ஒரு லாரிக்கு மாதம்தோறும், ரூ.40,000 தனக்கு லஞ்சமாகத் தர வேண்டும் என ஆனந்தவேலு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனந்தவேலு
ஆனந்தவேலு

அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் பணத்தை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு கூறினர்.

பணத்தை அவர் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவைக் கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தனர். மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டு ஊட்டி சிறையில் அடைத்தனர்.

சேரம்பாடி காவல் நிலையம்
சேரம்பாடி காவல் நிலையம்

இவர் குறித்து சரக்கு வாகன ஓட்டுநர்கள் கூறுகையில்,``வண்டியில ரெக்கார்ட்ஸ் எல்லாமே சரியா இருந்தாலும் லஞ்சம் கொடுக்கணும். இல்லைன்னா பொய் கேஸ் போட்டு வண்டியைப் பறிமுதல் செஞ்சிடுவோம்னு மிரட்டுவார். ஏதே நூறு, இருநூறு ரூபா கேட்டா பரவாயில்லை. மாசத்துக்கே பேரம் பேசி மொத்தமா கேட்டா என்ன பண்றது?" எனப் புலம்புகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு