Published:Updated:

வேலூர்: காரில் துப்பாக்கி, கத்தி, வாள்... முதல்வர் கூட்டத்துக்குச் செல்லும் திட்டமா? - நடந்தது என்ன?

கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி
கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி

கந்தனேரியில் முதல்வர் பிரசாரம் மேற்கொண்டிருந்த நேரத்தில் பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தாறுமாறாக வந்த கார் பொதுமக்கள்மீது மோதியது. கோபமடைந்த மக்கள் காரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், பிரசாரத்தை முடித்துக்கொண்டு வேலூர் மாவட்டத்துக்கு மதியம் 2 மணிக்கு மேல் வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வேலூரில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்குச் சொந்தமான பென்ஸ் பார்க் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு மாலை 4 மணியளவில் அணைக்கட்டுச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கந்தனேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். கந்தனேரியைத் தொடர்ந்து கே.வி.குப்பம் தொகுதி சென்ராம்பள்ளிக்குச் செல்லவிருந்தார்.

பிடிபட்ட கார்
பிடிபட்ட கார்

கந்தனேரியில் முதல்வர் பிரசாரம் மேற்கொண்டிருந்த நேரத்தில் பேரணாம்பட்டு மத்தூர் பகுதியில் தாறுமாறாக வந்த ஒரு கார் பொதுமக்கள்மீது மோதியது. கோபமடைந்த மக்கள் காரை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். காரை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்தார். அவரிடம் கைத்துப்பாக்கி மற்றும் கத்தி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், வெவ்வேறு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டுகளும் காருக்குள் இருந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் கார் மற்றும் கைத்துப்பாக்கி, கத்தியைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். பிடிபட்ட நபரையும் மேல்பட்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், அவர் வேலூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்திருக்கிறது.

கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி
கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி

பிடிபட்ட நபர் யார்... அவரின் பின்னணி என்ன... முதல்வரின் பிரசாரக் கூட்டத்துக்குச் செல்லவிருந்தாரா அல்லது குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவரா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது.

இது குறித்து, வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமாரிடம் கேட்டபோது, ``முதல்வர் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்துக்கும் கைத்துப்பாக்கி பிடிபட்ட இடத்துக்கும் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்கிறது. பிடிபட்ட நபர் முதல்வர் பிரசாரக் கூட்டத்துக்கு வந்தவரில்லை என்று தெரியவந்திருக்கிறது. அதேநேரம், அவரிடம் துப்பாக்கி இருந்ததற்கான காரணங்களும், அதற்கு உரிய அனுமதி இருக்கிறதா என்றும் விசாரணை நடந்துவருகிறது’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு