Published:Updated:

` எங்க பாக்கெட்டுல கையை விட்டு காசை எடுக்குறாங்க!'- டாஸ்மாக் கடையால் கலங்கும் பள்ளிக் குழந்தைகள்

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை ( Representational Image )

போதை தலைக்கேறியதும் இந்த வழியாகச் செல்லும், பள்ளிக் குழந்தைகளை மிரட்டுவதும், அடிப்பதுமாக இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், நெடுஞ்சாலை ஓரங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட சில இடங்களில் டாஸ்மாக் கடை நடத்தக் கூடாது என்று நீதிமன்றங்கள் பல முறை அறிவுறுத்தியும் எச்சரிக்கை செய்தும் சேலம் செவ்வாய்ப்பேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் பள்ளிக் குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்
Representational Image

அதை அப்புறப்படுத்த வேண்டுமென்று பொதுமக்களும், பள்ளிக் குழந்தைகளும் கலெக்டர் அலுவலகப் படியேறி இருக்கிறார்கள்.

இதுபற்றி அன்னதானப்பட்டியைச் சேர்ந்த டெவஸ், ``சேலம் செவ்வாய்ப்பேட்டை அருகே சந்தைப்பேட்டை பகுதியில் 7,226 எண் கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு வரும் குடிகாரர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் பகுதியில் ஜெயராக்கினி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, ஜெயராணி மகளிர் மேல் நிலைப்பள்ளி, வாசவி மேல் நிலைப்பள்ளி, சென் பேட்டரிக்ஸ் மகளிர் பள்ளி எனப் பள்ளிக்கூடங்கள் நிறைந்துள்ளது.

டேவஸ்
டேவஸ்
எம். விஜயகுமார்

அதுமட்டுமல்லாமல் சேலத்தின் வணிகத் தளமாகவும், பொதுமக்கள் நெருக்கமாக வாழக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. இங்கு வெளி மாநிலத்திலிருந்து வணிகர்கள் வணிகம் செய்ய வருகிறார்கள். இந்த இடத்தில்தான் அரசு மதுக்கடை நடத்தி வருகிறது. இந்தக் கடையில் குடிகாரர்கள் குடித்துவிட்டு நின்று கொண்டும், எதிரே உள்ள சுடுகாட்டில் திறந்தவெளி பாரைப் போல உட்கார்ந்து கொண்டும் குடிக்கிறார்கள். போதை தலைக்கேறியதும் இந்த வழியாகச் செல்லும் பள்ளிக் குழந்தைகளை மிரட்டுவதும் அடிப்பதுமாக இருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பயந்துகொண்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் கூட்டிப் போவதும், வருவதுமாக இருக்கிறார்கள். பெற்றோர்களிடமும் இந்தக் குடிகாரர்கள் சண்டைக்கு வருகிறார்கள். பெண்களைக் கேலி, கிண்டல் செய்கிறார்கள். வணிகர்கள் கொண்டுசெல்லும் பணத்தை வழிப்பறி செய்கிறார்கள். இதனால் இப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். தற்போது பொதுமக்களும், குழந்தைகளும் இந்தக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். என்று கலெக்டரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

குழந்திகள்
குழந்திகள்
எம். விஜயகுமார்

இதுபற்றி 5-ம் வகுப்பு சிறுவன், மெய்யழகன், ``நாங்க ஸ்கூல் விட்டு அம்மாகூட வரும்போது குடிச்சிட்டு பிரச்னை பண்ணறாங்க. போதையில் வேண்டுமென்றே எங்க மேல விழுறாங்க. எதுக்கு இடிக்கறீங்க'னு கேட்டால் எகிறீட்டு சண்டைக்கு வர்றாங்க. அதனால் எங்க அம்மா இனிமே நான் ஸ்கூலுக்கு வரமாட்டேன். நீயும் ஸ்கூலுக்குப் போகாத'னு சொல்லறாங்க. டீச்சருங்க ' நீ ஒரு மாசமா ஸ்கூலுக்கு வராமல் இருக்கிற, இப்ப பொதுத்தேர்வு வருது' அப்படின்னு சொல்லறாங்க.

குடிச்சிட்டு பாட்டிலை எங்க மீது உடைக்கவும், குத்தவும் வர்றாங்க. நாங்க தனியா வந்தால் சிகரெட் வாங்க 5 ரூபாய் கொடு, 10 ரூபாய் கொடுன்னு கேக்குறாங்க. நாங்க காசு இல்ல'னு சொன்னால் கூட பாக்கெட்டுல கையை விட்டு காசு எடுக்குறாங்க. அதனால் அந்த டாஸ்மாக் கடையை எடுக்கணும்'னு மழலை மொழியில் பேசினார்கள்.

பின் செல்ல