Published:Updated:

`போலீஸுக்கு ஏன் இவ்வளவு கோபம்?' - வைரலான கோவைச் சிறுவன்-எஸ்.ஐ மோதல்

கடைக்காரரைத் தாக்கும் போலீஸ்
கடைக்காரரைத் தாக்கும் போலீஸ்

கோவை ரத்தினபுரி பகுதியில் போலீஸ், சிறுவன் மோதலில் காவல்துறை கையாண்டவிதம் தொடர்பான விரிவான கட்டுரை.

கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில், ஒரு தம்பதியர் தள்ளுவண்டிக் கடை நடத்தி வருகின்றனர். கோவையில் உணவகங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும் என்று மாநகர போலீஸ் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கடந்த வாரம் அந்தத் தம்பதி மற்றும் பள்ளியில் படிக்கும் அவர்களின் 16 வயது மகன் ஆகியோர் இரவு டிபன் கடை நடத்தி வந்துள்ளனர்.

கோவைச் சிறுவன் போலீஸ்
கோவைச் சிறுவன் போலீஸ்
`போலீஸ் வேலை; ரூ.30 லட்சம்!’ -கதையை நம்பிப் பணத்தை இழந்த திருவண்ணாமலை இளைஞர்கள்

இரவு 9 மணியளவில் அங்கு ரோந்துப் பணிக்கு வந்த போலீஸார் கடையை மூடச் சொல்லியுள்ளனர். ஆனால் அந்தத் தம்பதியர், ‘நாங்கள் தாமதமாகத்தான் கடையைத் திறந்தோம்’ என்று சொல்லி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த போலீஸ் எஸ்.ஐ செல்லமணி, அவர்களை ஒருமையில் பேசி எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அவர்களது மகன் வீடியோ எடுக்கவே, அதைப் பிடுங்கிக்கொண்டு உடனடியாக கடையைக் காலி பண்ண வேண்டுமென செல்லமணி மீண்டும் எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது, அந்தத் தம்பதியரின் மகன் செல்லமணியின் இருசக்கர வாகன சாவியைப் பிடுங்கியுள்ளார். இதனால், கோபமடைந்த எஸ்.ஐ வண்டியிலிருந்து கீழே இறங்கி அந்த 16 வயதுச் சிறுவனைத் தாக்கியுள்ளார்.

கோவைச் சிறுவன் போலீஸ்
கோவைச் சிறுவன் போலீஸ்

பெற்றோர் அவர்களிடமிருந்து தங்களது மகனை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் சிறுவனை லத்தியால் தாக்கியுள்ளார். மேலும், ‘சிறுவனை சிறையில் அடைத்துவிடுவோம்’ என்றும் போலீஸார் மிரட்டியுள்ளனர்.

போலீஸார் தாக்கியதில் சிறுவனின் சட்டை கிழிந்துவிட்டது. என்ன செய்வதென்று தெரியாமல், சிறுவனின் தாய் சாலையில் அமர்ந்து அழுதார். இதையடுத்து, போலீஸார் சிறுவனை ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பலர் தடுத்தும் போலீஸார் கேட்கவில்லை. முக்கியமாக, இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த ஓர் இளைஞரின் செல்போனைப் பிடுங்கிக்கொண்டு, செல்லமணி அவரையும் அடித்துள்ளார்.

இளைஞரை அடித்த எஸ்.ஐ
இளைஞரை அடித்த எஸ்.ஐ

இதுகுறித்து விசாரித்ததில் அந்தச் சிறுவன் பெற்றோர் மீது அதிகப் பாசம் கொண்டவர் என்பது தெரியவந்தது. சிறுவனின் எதிர்காலம் கருதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் எச்சரித்து , அவரிடம் மன்னிப்புக் கடிதம் மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். சிறுவனின் தந்தை மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து விடுவித்தனர்.

போலீஸ், சிறுவன் சண்டை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் மாநில அமைப்பாளர் பேராசிரியர் ஆன்ட்ரூ சேசுராஜ், “சம்பந்தப்பட்ட எஸ்.ஐ அவ்வளவு கோபத்தைக் காண்பித்திருக்க வேண்டியதில்லை. போலீஸார் சாலைகளில் எவ்வளவோ குற்றங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இது சாதாரண விஷயம்தான். கடையை அடைக்காதது அவர்களின் தவறுதான்.

ஆன்ட்ரூ சேசுராஜ்
ஆன்ட்ரூ சேசுராஜ்

அதற்கு ஒரு அபராதத்தைப் போட்டுச் சென்றிருக்கலாம். இல்லையேல் அவர்களது பெற்றோரை மட்டும் காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்திருக்கலாம். தற்போது, கொரோனா காலகட்டத்தில் பெரிதாக எந்த வழக்கையும் விசாரிப்பதில்லை. ஒரு பாலியல் வழக்கிலேயே, குற்றவாளியான ஒரு சிறுவனைக் காப்பகத்துக்கு அனுப்பாமல் விடுவித்துவிட்டனர்.

அதனுடன் ஒப்பிடும்போது இந்த வழக்கு ஒன்றுமில்லை. அந்த எஸ்.ஐ தன்னுடைய பவரை நிரூபிக்க வேண்டுமென்ற ஈகோதான் அதில் நன்றாகத் தெரிந்தது. பெரும்பாலான போலீஸார் மனஅழுத்தத்தில் இருக்கின்றனர். அதுதான், தன்னைவிட வலிமை குறைவானவர்களிடம் வெளிப்பட்டிருக்கிறது. எனவே, போலீஸாருக்குப் பணிச்சுமைகளைக் குறைத்து பயிற்சி வழங்க வேண்டும். சிறுவர்களை சீருடை அணிந்த போலீஸ் விசாரிக்கக் கூடாது, ஜீப்பில் ஏற்றக் கூடாது, காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று சட்டம் தெளிவாகச் சொல்கிறது.

சிறுவனை ஜீப்பில் ஏற்றிய போலீஸ்
சிறுவனை ஜீப்பில் ஏற்றிய போலீஸ்

தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் மட்டும்தான் சிறுவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முடியும். இந்தச் சம்பவத்தால் சிறுவனின் குடும்பம்தான் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, தமிழக அரசும் சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், “எளிய மக்கள் மீது போலீஸார் அதிகாரத்தைக் காட்டுவது கடும் கண்டனத்துக்குரியது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் குடும்பத்தாரிடம் பேச முயற்சி செய்தோம். மேலும், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவர்கள் அங்கு கடை போடுவதில்லை என்றும், அவர்கள் தற்போது யாரிடமும் பேசும் மனநிலையிலும் இல்லை என்று தகவல்கள் கிடைத்தன.

`மன அழுத்தம் குறைய காமெடி ஷோ!’ -மருத்துவர்களை உற்சாகப்படுத்திய கலெக்டர்

இது தொடர்பாக போலீஸ் எஸ்.ஐ செல்லமணியிடம் விளக்கம் கேட்க முயற்சி செய்தோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவரிடம் பேச வேண்டுமென குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளோம். அதற்கும் எந்தப் பதிலும் இல்லை. அவர் விளக்கமளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு