Published:Updated:

` முந்தப்போவது காடேஸ்வரியா... ராஜலட்சுமியா?!' - பஸ் ரேஸால் அச்சத்தில் கோவை மக்கள்

கோவையில், தனியார் பேருந்துகளுக்குள் நடந்த போட்டியில் விபத்து ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து, ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினர்.

தனியார் பேருந்து
தனியார் பேருந்து

கோவையில், தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பேருந்துகளின் அதிகரிப்புக்கு ஏற்ப, வியாபாரப் போட்டியும் கூடிக்கொண்டேபோகிறது. இதனால், பொதுப் போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள், பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி சாலையில், இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு ஆபத்தான முறையில் ரேஸில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தனியார் பேருந்து
தனியார் பேருந்து

இதன் தொடர்ச்சியாக, ரேஸில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மனுக் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை.

இந்நிலையில், கோவை சுங்கத்தை அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கண்ணன், சிங்காநல்லூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

விபத்து
விபத்து

அப்போது, உக்கடத்திலிருந்து கண்ணம்பாளையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த 'காடேஸ்வரி' என்ற தனியார் பேருந்தும், 'ராஜலட்சுமி' என்ற தனியார் பேருந்தும் கூடுதல் டிக்கெட்டுகளை மனதில் வைத்துக்கொண்டு போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாகப் பேருந்தை ஓட்டியுள்ளனர்.

சிங்காநல்லூர் அருகே மாறி மாறி சாலையை அடைத்தபடி இரண்டு பேருந்துகளின் டிரைவர்களும் சென்றுள்ளனர். அப்போது காடேஸ்வரி பேருந்து, முன்னே சென்றுகொண்டிருந்த கண்ணனின் இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில், கண்ணன் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் கண்ணனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தனியார் பேருந்து
தனியார் பேருந்து

இதையடுத்து, அதிவேகமாகவும் அலட்சியமாகவும் தனியார் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநரை அப்பகுதி பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

இருப்பினும், ஆத்திரம் அடங்காத பொதுமக்கள், பேருந்து ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ரத்து
ரத்து

இதேபோல, மேட்டுப்பாளையம் அருகே அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநரின், லைசென்ஸ் ஒரு மாதத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.