திருப்பூர் மாவட்டம், கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவரை, தன்னுடைய மாருதி 800 காரில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்திருக்கிறார். சிறிது நேரத்தில், பார்க்கிங் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தியிருந்த காரை காணவில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிர்ச்சியடைந்த ஜெகதீஷ், உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மருத்துவமனையின் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்தனர். அதில், கார் திருடு போனது உறுதியானது.
இதற்கிடையே கருமத்தம்பட்டி அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த மாருதி 800 கார் ஒன்றை நிறுத்தி விசாரித்தனர். கார் ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீஸார் சந்தேகமடைந்தனர். விசாரணையில், அந்த நபர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஆரோக்கிய சகாய தர்மராஜ் (56) என்பதும்,

கோவை அரசு மருத்துவமனையிலிருந்து காரை அவர் திருடிவந்ததும் தெரிந்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார், ஆரோக்கிய சகாய தர்மராஜைக் கைதுசெய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
ஆரோக்கிய சகாய தர்மராஜிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களைத் திருடிச் செல்வதை வாடிக்கையாகவைத்திருந்தது உறுதியானது. திருடும் வாகனங்களை ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (65) என்பவருடன் இணைந்து தனித்தனி பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால், பழனிச்சாமியும் கைதுசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து இரண்டு கார்கள், இரண்டு ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்குகள், இரண்டு ஹீரோ ஃபேஷன் ப்ரோ பைக்குகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர் போலீஸார். ஆரோக்கிய சகாய தர்மராஜ் மீது சென்னை, திருப்பூர், சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.