Published:Updated:

`கைல இருந்த குழந்தை தண்ணில போய்டுச்சு...!'- மகளின் உடலைப் பார்த்துக் கதறிய பெற்றோர்

குருபிரசாத்

கோவை வால்பாறை அருகே, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டரை வயது குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தை சுந்தரி
குழந்தை சுந்தரி

கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது. வால்பாறை பழங்குடி கிராமங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சர்க்கார்பதி பவர்ஹவுஸ் அருகே, பாறை சரிந்து கால்வாயில் விழுந்தது.

நாகர்ஊத்து கிராமம்
நாகர்ஊத்து கிராமம்

இதனால், கால்வாய் அருகே உள்ள நாகர்ஊத்து கிராமத்தில் வெள்ளநீர் புகுந்தது. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஆறு பேர் இந்த வெள்ளத்தில் காயமடைந்தனர். குஞ்சப்பன் என்பவரின் இரண்டரை வயது மகள் சுந்தரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். சுந்தரியைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துவந்தது.

கால்வாயில் சுந்தரியின் உடல்
கால்வாயில் சுந்தரியின் உடல்

இந்தநிலையில், நாகர்ஊத்து கிராமத்திலிருந்து, 5 கி.மீ தொலைவில் உள்ள பீட்டர் கால்வாயில் சுந்தரியின் உடல் மீட்கப்பட்டுள்ளது. கால்வாயில் கிடந்த சுந்தரியின் உடலைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர்.

``சுந்தரியுடன் சேர்த்து அவங்க பெற்றோருக்கு மொத்தம் ஏழு குழந்தைங்க. வெள்ளம் வந்தப்ப, அவங்க அம்மா ஒவ்வொரு குழந்தையா வெளிய கொண்டு வந்துட்டு இருந்தாங்க. அப்ப ஒரு பெரிய பாறை உருண்டு வந்ததுல, அவங்க கைல இருந்த குழந்தை தண்ணில போய்டுச்சு.

நாகர்ஊத்து
நாகர்ஊத்து

சுந்தரியின் அண்ணன் கிருஷ்ணாவும் கோவை அரசு மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறான். எங்களுக்குப் பாதுகாப்பான குடியிருப்புகளை, இதே வனப்பகுதில கட்டித்தரணும். குஞ்சப்பன் குடும்பத்துக்கு அரசாங்கம் நிதி உதவி பண்ணணும்” என்று கோரிக்கை வைக்கின்றனர் நாகர்ஊத்து மக்கள்.

இதனிடையே, காண்டூர் கால்வாயை முன்னறிவிப்பின்றி திறந்ததே, இந்த நிலைக்குக் காரணம் என்றும் புகார் சொல்லப்படுகிறது. உயிரிழந்த சுந்தரியின் குடும்பத்துக்கும் நாகர்ஊத்து மக்களுக்கும் உதவ வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.