Published:Updated:

`இது வெறும் `பார்ட் ஒன்' தான்!' - 400 கோடிக்கு சொத்து சேர்த்தாரா சேலம் பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி?

அவர் மூன்றேகால் ஆண்டுகள் இங்கு பணிபுரிந்து வருகிறார். அவர் மோசமானவர் என்றால் ஏன் இதுநாள் வரை அவரைப் பற்றி எந்தத் தவறான தகவலும் பரப்பாமல் தற்போது பரப்புவதற்குச் சுயநலமே காரணம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மண்டல பதிவுத் துறை துணைத் தலைவராக இருப்பவர் ஆனந்த். இவர் முறைகேடாகச் சொத்து குவித்து வருவதாகச் சில புள்ளி விவரத்தோடு 4 பக்கக் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்தக் கடிதத்தில்,

`சேலம் பத்திரப்பதிவுத்துறை டி.ஐ.ஜி ஆனந்த் அவர்களின் முறைகேடான சொத்து குவிப்பு அறிக்கை பின்வருமாறு' என்ற தலைப்பில் தொடங்கும் அந்த நோட்டீஸில்

`வாராந்திர கந்து வட்டி கலெக்‌ஷன்:

ஐ.ஜி., உத்தரவு மீறி ஜூனியர்களுக்குப் பொறுப்பு போட்டு சம்பாதித்தது என ஒரு பெரும் பட்டியலே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம் மேற்கு போன்ற மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடிதத்தின் முதற்பக்கம்
கடிதத்தின் முதற்பக்கம்

தொடர்ந்து அதில், ``பொறுப்புப் பதவிகள் மூலம் மாதாந்திர கலெக்‌ஷன் 20 லட்சத்து 40 ஆயிரம். பொறுப்பு பதவிகள் மூலம் வருடாந்திர கலெக்‌ஷன் சுமார் 2 கோடியே 45 லட்சம். கடந்த 4 வருடத்தில் சுமார் 10 கோடி. இது தவிர சேலத்தில் சுமார் 60 அலுவலகங்களில் மாதாந்திர கலெக்‌ஷன் சுமார் 120 லட்சம். ஒரு வருட சேலம் மண்டலத்தில் கலெக்‌ஷன் 15 கோடிகள். கடந்த 4 வருடத்தில் மொத்தம் 60 கோடிகள்.

இது தவிர லேஅவுட் நிர்ணயம், லேஅவுட் முறையீடு என இவரது கலெக்‌ஷன் பல 100 கோடிகளைத் தாண்டும். மிகவும் குறைவாகப் பார்த்தாலும் கடந்த 4 வருடத்தில் இவரது சேலம் மண்டல கலெக்‌ஷன் குறைந்தது 200 கோடிகளைத் தாண்டும். சேலத்தில் 4 வருடத்திலேயே 200 கோடி என்றால் இவரது ஒட்டு மொத்தப் பணியில் சேர்ந்த நாள்முதல் கலெக்‌ஷன் 400 கோடிகளைத் தாண்டும். அரசியல்வாதிகளை விஞ்சும் அளவுக்கு ஊழல் புரியும் ஆனந்த் டி.ஐ.ஜி., இந்த ஊழல் பணத்தில் ஐ.ஏ.எஸ்., ஆக முயல்கிறார். இவர் ஐ.ஏ.எஸ் ஆனால் தமிழ்நாட்டையே விற்று விடுவார்.

சேலம் மண்டல டி.ஐ.ஜி ஆனந்த்தின் கலெக்‌ஷன் ஏரியாக்கள்: கிருஷ்ணகிர் உதவி டி.ஆர் அலுவலகம், சூளகிரி எஸ்.ஆர் பாய்கர், ஓசூர் எஸ்.ஆர் நேருஜி, தர்மபுரி எஸ்.ஆர் ராசிகண்ணு, நாமக்கல் எஸ்.ஆர் சுந்தர வடிவேல், திருச்செங்கோடு எஸ்.ஆர் தமிழ்ச்செல்வன், பரமத்திவேலூர் ஓ.ஏ ஷஃபி, தர்மபுரி எஸ்.ஆர் திருப்பதி, மகுடஞ்சாவடி எஸ்.ஆர் சசிந்தர். சேலம் டி.ஐ.ஜி ஆனந்த் ஜீப் வரும் வழியில் இவர்கள் முன்கூட்டியே கலெக்‌ஷன் செய்து பணத்தை ஒப்படைக்க, அவர் ரயிலில் ஏறி சென்னை விரைந்து விடுவார்'' என நீளும் இந்தக் கடிதத்தில்...

கடிதத்தின் இறுதிப்பக்கம்.
கடிதத்தின் இறுதிப்பக்கம்.

`லேஅவுட் நிர்ணயம், முறையீடு வெற்றிகரமாக முடித்தால் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி என லிஸ்ட் நீளும். வேறு வழியின்றி இவர் கையெழுத்துக்காக பலரின் தலையெழுத்து மாறியுள்ளது. இவரது லீலைகள் அடுத்த பாகத்தில்..." இப்படிக்கு ஆனந்த் டி.ஐ.ஜியால் பாதிக்கப்பட்ட சேலம் மாவட்ட பதிவுத்துறை உதவியாளர்கள்' என முடிகிறது அந்த நோட்டீஸ்

இதுபற்றி சேலம் மண்டல டி.ஐ.ஜி ஆனந்தைச் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றோம். ஆனால், அவர் இதுகுறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதையடுத்து பத்திரப்பதிவு ஊழியர்கள் சிலரிடம் கேட்டதற்கு, ``எந்த ஒரு முகாந்தரமும் இல்லாத போலியான பரப்புரை இது. தற்போது இடமாறுதல் வழங்கும் காலம் என்பதால் அவர் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி அவருக்குப் பதவி உயர்வு கிடைக்கக் கூடாது என்றும், இந்த இடத்திலிருந்து மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள்.

அவர் மூன்றேகால் ஆண்டுகள் இங்கு பணிபுரிந்து வருகிறார். அவர் மோசமானவர் என்றால் ஏன் இதுநாள் வரை அவரைப் பற்றி எதுவும் எந்தத் தவறான தகவலும் பரப்பாமல் தற்போது பரப்புவதற்குச் சுயநலமே காரணம். அவர் ஆன்மிகச் சிந்தனை உடைய மனிதர். அவர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இது போன்ற விஷமங்களைப் பரப்பி வருகிறார்கள்'' என்கின்றனர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு