Published:Updated:

சேலம்: கை மாறிய பணம்; அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! - அதிமுக நிர்வாகிமீது புகார்

மோசடி

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

சேலம்: கை மாறிய பணம்; அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி! - அதிமுக நிர்வாகிமீது புகார்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சேலத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், பல கோடி ரூபாய் சுருட்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Published:Updated:
மோசடி

சேலம் ஆத்தூர், கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். எம்.ஏ., பி.எட்., பட்டதாரியான இவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க ஒன்றிய விவசாயி அணிச் செயலாளர் சுரேஷ் என்பவர், மத்திய கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி, கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 4,70,000 ரூபாய் வாங்கியிருக்கிறாராம். ஒரு வருடமாகியும் சுரேஷ் வேலை தொடர்பாக எந்தவித முயற்சியும் எடுக்காததால், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் கண்ணன். அதற்கு சுரேஷ் வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், அடிதடியிலும் ஈடுப்பட்டுள்ளார் என ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கண்ணன்
கண்ணன்

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கண்ணனிடம் பேசினோம். ``எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்காங்க. என்னோட தோட்டம்தொரவயெல்லாம் வித்து, வட்டிக்கு வாங்கித்தான் வேலைக்குப் பணம் ரெடி பண்ணிக் கொடுத்தேன். இன்னைக்கு கொடுத்த பணத்தை வாங்க முடியாம கடனாளியா நிக்கிறேன். ரெண்டு டிகிரி படிச்சு முடிச்சிருக்கேன். அரசு வேலைக்குப் போகணும் என்கிற ஆசையில பல முறை தேர்வுகள் எழுதியிருக்கேன். ஆனா, அதுல என்னால பாஸ் பண்ண முடியலை. இதுக்கு இடையில கல்யாணமாகி குடும்பம், பிள்ளைங்கனு வந்ததால குடும்பத்தைக் காப்பாத்ணும்னு, எங்களுக்குச் சொந்தமா இருக்குற நிலத்துல விவசாயம் செஞ்சுக்கிட்டுருக்கேன்.

கடந்த 2020-ல அ.தி.மு.க ஆட்சி இருந்தப்போ எங்க ஊரு அ.தி.மு.க விவசாய அணிச் செயலாளர் சுரேஷ் என்னிடம் பேசினார். அப்போ அவர், ``ஏன்டா படிச்சுட்டு பச்ச புள்ளைங்களைவெச்சுக்கிட்டு கஷ்டப்படுற... ஒழுங்கா அரசு வேலைக்கு போலாம்ல... ஊருல உள்ளவங்களுக்கெல்லாம் வேலை வாங்கித் தந்துட்டு இருக்கேன், உனக்கு கொடுக்க மாட்டேனா' என்று வசியமாகப் பேசியவரின் வார்த்தையைக் கேட்டு அதில் விழுந்தேன். அவர் `பணம் கொஞ்சம் செலவாகும். ஒரு பத்து லட்சம் ரெடி பண்ணு’னு சொன்னாரு. `என்னிடம் அவ்வளவு பணம் இல்லைங்க. இப்போதைக்கு என்னால முடிஞ்சதை ரெடி பண்ணித் தாரேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்துடுறேன்னு சொன்னேன். அப்படிக் கொஞ்சம் கொஞ்சமா 4 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் மூணு தவணையாகக் கொடுத்திருந்தேன். இதற்கிடையில எனக்குத் தெரிஞ்ச நண்பர் ஒருவரும் அவருக்கும் வேலைக்கு ரெடி பண்ணித்தர சொன்னாரு. அதனால அவருக்கும் கூட்டுறவுல வேலை வாங்கித்தரச் சொல்லி 4 லட்ச ரூபாய் சுரேஷிடம் கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புகார் மனு
புகார் மனு

ஆனால் ஒரு வருடமாகியும், அவர் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் கொடுத்த பணத்தைத் திருப்பி தரக் கூறி சுரேஷிடம் கேட்டோம். அதற்கு அவர், `பணத்தலாம் தர முடியாது. நீ என்கிட்ட பணம் தரலை. உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றார். இதனால் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் சுரேஷ்மீது புகாரளித்தேன். அதற்கு, `யாரு மேலடா புகார் கொடுத்திருக்கே?' என்று என் வீட்டுக்குகுள் வந்து கொலைவெறித் தாக்குதல் செய்தார். என்னை வீடு புகுந்து தாக்கியதால் மீண்டும் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். ஆனால் இதுவரை அதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் அளித்திருந்தேன். அதன் மூலம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் என்பவர் விசாரணைக்கு நேரில் வருமாறு கூறியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நான் நேரில் சென்று நடந்தவற்றைக் கூறினேன். பின்னர் அந்த எஸ்.ஐ தனது செல்போனிலிருந்து சுரேஷுக்கு கால் செய்து விசாரணைக்கு வரச் சொன்னார். திங்கள்கிழமை விசாரணைக்கு எஸ்.பி ஆபீஸுக்கு நான் போயிருந்தேன். காலை 10 மணியில இருந்து சாயங்காலம் நான்கரை மணிவரைக்கும் காத்திருந்தேன். விசாரணைக்கு கடைசி வரைக்கும் சுரேஷ் வரலை. விசாரணை செய்த எஸ்.ஐ., `சரிப்பா நீ வீட்டுக்கு கிளம்பு. நான் அவனுக்கு சம்மன் அனுப்பிக்கிறேன்'னு சாக்கு சொல்லி என்னை அனுப்பினார்.

இந்த நிலையில் மீண்டும் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போ என்னோட புகாரை விசாரித்த எஸ்.எஸ்.ஐ ராஜதுரை நேரில் சுரேஷை வரவழைத்தார். விசாரணைக்கு வந்த சுரேஷ், ``பணம் வாங்குனது உண்மைதான். ஆனா, என்கிட்ட இப்ப பணம் இல்லை. அது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார்கிட்ட இருக்கு... எதுவாக இருந்தாலும் அவர்கிட்ட கேட்டுக்குங்க, எனக்குத் தெரியாது” என்று சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷனைக்கூட மதிக்காம கிளம்பிட்டார்.

பின்னர் ஒன்றியச் செயலாளர் ரஞ்சித் குமாரிடம் சென்று கேட்டேன். அதற்கு அவர், `தம்பி நான் பணம் வாங்குனதுல்லாம் உண்மைதான். ஆனா உன்னோட விஷயத்துக்காக நான் பணம் வாங்கலை. அவனும் உன்னோட பெயரச் சொல்லி கொடுக்கலை. அதனால இனி என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வர்ற வேலயை வெச்சுக்காத'னு சொல்லி அனுப்பினார்.

இந்நிலையில என்னோட பணம் மட்டும் இல்லாம... என்னோட நண்பர் பணமும் சுரேஷ்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கிறதனால அவரு உன்னை நம்பித்தானே கொடுத்தேன்னு என்னோட கழுத்தைப் பிடிக்கிறாரு. நான் என்ன பண்ணுறதுன்னே தெரியலைங்க. குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழி இல்லைங்க" என்று புலம்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ தமிழரசனிடம் பேசினோம். ``புகார் வந்ததின் பேரில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்க சம்மன் அனுப்பியிருக்கோம். ஆனா சுரேஷ் வரலை. கண்ணணும் லோக்கல் ஸ்டேஷன்ல பேச்சுவார்த்தைக்கு கூப்புடுறாங்க, பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு. அதனால நாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்" என்றார்.

மேலும் இது குறித்து விசாரணை செய்த ஆத்தூர் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ ராஜதுரையிடம் பேசினோம். ``பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனு அப்பவே சுரேஷ் எழுதிக்கொடுத்துட்டு போய்ட்டாரு" என்றார். அதையடுத்து அவரிடம், ``உங்க விசாரணையில சுரேஷ் பணம் வாங்குனது உண்மைதான்னு தெரிய வந்துதா" என்று கேட்டோம். அதற்கு அவர், ``பணம் ஒன்றியத்துகிட்ட கண்ணன் கொடுக்கிறப்போ சுரேஷ் கூட இருந்ததாச் சொல்றாரு. மத்தப்படி அவருக்கு ஒண்ணும் தெரியாதாம்" என்றார்.

சுரேஷ்
சுரேஷ்

இது குறித்து ஆத்தூர் டி.எஸ்.பி ராமச்சந்திரனிடம் பேசினோம். “நீங்க சொல்ற மாதிரி எந்தப் புகாரும் என்னுடைய பார்வைக்கு வரவில்லை. என் பார்வைக்கு வராத புகாரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை” என்றார்.

இது குறித்து சுரேஷை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை ஏற்காமல் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

மேலும் சம்பந்தப்பட்ட ஒன்றியச் செயலாளர் ரஞ்சித்குமாரிடம் பேசினோம். நமது அழைப்பை எடுத்து பேசியவரிடம் `கள்ளாநத்தம் சுரேஷை தெரியுமா?’ என்று கேட்டதற்கு, அவர், `டவர் கிடைக்கலை. வேறொரு நம்பர்ல இருந்து வர்றேன்’ என்று சொன்னவர் அதன் பிறகு வரவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism