Election bannerElection banner
Published:Updated:

சோனியா காந்தி, ராகுலை கேலிசெய்து விளம்பரம்! -உணவு கம்பெனி அலுவலகத்தைத் தாக்கிய காங்கிரஸ் கட்சியினர்

காங்கிரஸ் தொண்டர்கள்
காங்கிரஸ் தொண்டர்கள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைக் கிண்டல் செய்து வெளியான விளம்பரத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கம்பெனியின் அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர்.

'ஸ்டோரியா ஃபுட்ஸ்' என்ற நிறுவனம் சமீபத்தில் சாக்லேட் ஷேக் என்ற குளிர்பானத்துக்கு புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைக் கிண்டல் செய்து வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. காமெடி நடிகர் சங்கத் போஸ்லே இந்த விளம்பரத்தில் நடித்திருந்தார். அவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மற்றும் இன்டர்வியூக்களில் பேசியவற்றை விளம்பரத்தில் கிண்டலாகப் பேசியிருப்பார். அதோடு சில வாக்கியங்களைப் பொழுதுபோக்கு நோக்கில் மாற்றியமைத்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு நாள்களுக்கு முன்பே மும்பை அந்தேரியிலுள்ள ஸ்டோரியா ஃபுட்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தொண்டர்கள்
காங்கிரஸ் தொண்டர்கள்

நேற்று மீண்டும் மும்பையிலுள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு மும்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிதின் சாவந்த் தலைமையில் கட்சிக்கொடியுடன் வந்தனர். அலுவலகத்துக்குள் நுழைந்து, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக்கொண்டே அங்கிருந்த பொருள்கள் மற்றும் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இந்தத் தாக்குதலுக்கு தான் பொறுப்பு ஏற்பதாக சாவந்த் தெரிவித்தார்.

இது குறித்து பாஜக பிரமுகர் கிரீத் சோமையா கூறுகையில், ``விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் காங்கிரஸ் கட்சியினர் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக மிரட்டக் கூடாது. முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா விதிகளை மீறியதற்காக காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் காங்கிரஸ் தொண்டர்களை உடனே கைதுசெய்ய வேண்டும். தாக்கரே ஆட்சிக்கு வந்ததிலிருந்து அராஜகம் அதிகரித்துவிட்டது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சம்பவத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது முதல்வர் தாக்கரே மற்றும் உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் ஆகியோர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். பாஜக எம்.பி மனோஜ் கோடக் இது குறித்துக் கூறுகையில், ``விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் அதை திரும்பப் பெறும்படி கோரலாம். அதில்லாமல் அலுவலகத்தை அடித்து உடைப்பதை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார். இதற்கிடையே போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காங்கிரஸ் தொண்டர்கள் எட்டுப் பேரை கைதுசெய்தனர். இதை மும்பை போலீஸ் செய்தித் தொடர்பாளர் சைதன்யா உறுதிப்படுத்தினார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு