Published:Updated:

அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம்; அரசின் விளக்கம் - முழு விவரம் என்ன?!

அண்ணாமலை

``இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜக-வின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. அவர் ஜனநாயகக் காவலர்.” - நீதிபதி

அண்ணாமலை கிளப்பிய போலி பாஸ்போர்ட் விவகாரம்; அரசின் விளக்கம் - முழு விவரம் என்ன?!

``இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜக-வின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. அவர் ஜனநாயகக் காவலர்.” - நீதிபதி

Published:Updated:
அண்ணாமலை

``மதுரையில் போலியாக 200 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கின் விசாரணையை உளவுத்துறை ஏடி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் தாமதப்படுத்துகிறார். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என ஆளுநருக்குப் புகார் அனுப்பியும், நேரில் சந்தித்தும் தமிழ்நாடு அரசுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை

மூன்று வருடங்களுக்கு முன்பே காவல்துறை, அஞ்சல்துறை மற்றும் பாஸ்போர்ட் விநியோகிக்கும் அதிகாரிகள் எனப் பலரும் கூட்டாகச் சதிசெய்து, மதுரை அவனியாபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 200 பேருக்கு போலி பாஸ்போர்ட்டுகளை வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து, நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில், இது தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள காவல்துறையினரிடம் பேசியபோது,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு, கடத்தல் புள்ளிகளுக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுப்பதற்காகவே மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சில கும்பல்கள் செயல்பட்டுவந்தன. கடந்த 2019-ல் இலங்கையைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவில் எடுக்கப்பட்ட போலி பாஸ்போர்ட் மூலம் கொழும்புக்குச் செல்ல முயன்றபோது பிடிபட்டார். 2020-ல் சிவகங்கையைச் சேர்ந்த ஒருவர் போலி பாஸ்போர்ட் மூலம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்றபோது பிடிபட்டார். விசாரணையின்போது இதுபோல் ஏராளமான பாஸ்போர்ட்டுகள் மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த க்யூ பிராஞ்ச் அதிகாரிகள், மோசடிக்கு உடந்தையாக இருந்த பாஸ்போர்ட், அஞ்சல் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலரிடமும் விசாரணை நடத்தி வழக்கு பதிவுசெய்தனர். அதோடு அந்த விவகாரத்தை எல்லோரும் மறந்துபோனார்கள்.

பாஸ்போர்ட்
பாஸ்போர்ட்

ஆனால், 2021 ஜனவரியில் வழக்கறிஞர் முருக கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், போலி பாஸ்போர்ட் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், `அவனியாபுரம் லிமிட்டில் இலங்கை அகதிகள் 53 பேருக்கு போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பல துறைகளின் அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், க்யூ பிராஞ்ச் விசாரணை மெதுவாக இருப்பதால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, `இந்த வழக்கில் இதுவரை 174 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. 22 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்க, உயர் நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு மூன்று மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க க்யூ பிராஞ்சுக்கு உத்தரவிட்டது. ஆனால் கொரோனா, ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால், அந்த உத்தரவு வந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் வழக்கு விசாரணை முடிவுக்கு வரவில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, போலியாக பாஸ்போர்ட் தயாரிக்கப்படவில்லை. போலியாக முகவரி, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகளை உருவாக்கி, உண்மையான பாஸ்போர்ட்டுகளை போலியான நபர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். பாஸ்போர்ட் வழங்க விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரிகளும் ஆதாயத்துக்காக கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். அவனியாபுரம் இன்ஸ்பெக்டராக இருந்த இளவரசு, நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மீது புகார் சொல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டாலும் தப்பித்துவிட்டார்கள். இப்போது அண்ணாமலை மீண்டும் இந்த விவகாரத்தை கிளறுவதால், அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது” என்றார்கள்.

இந்த வழக்கு குறித்து மதுரை க்யூ பிரிவு டி.எஸ்.பி-யான பொன்னம்பலத்திடம் கேட்டபோது, ‘‘இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. வழக்கு தொடர்பாக இதற்கு மேல் எதையும் தெரிவிக்க முடியாது’’ என்றார் சுருக்கமாக.

டேவிட்சன் தேவாசீர்வாதம்
டேவிட்சன் தேவாசீர்வாதம்

அரசு சார்பாக வழக்காடிய நீதித்துறையினரிடம் பேசியபோது, ``க்யூ பிராஞ்ச் விசாரணையை முடித்துவிட்டது. வழக்கு தாமதிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. விரைவில் இவ்வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும்’’ என்றனர்.

இதையடுத்து, உளவுத்துறை ஏடி.ஜி.பி மீதான அண்ணாமலையின் புகார் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டதற்கு, ``அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சம்பவத்தை இப்போது நடந்ததுபோல் அண்ணாமலை பேசிவருகிறார். க்யூ பிராஞ்ச் விசாரித்த இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் உளவுத்துறைத் தலைவர்மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக அரைகுறையாக ஏதேதோ பேசிவருகிறார். அரசியல் பரபரப்புக்காக ஆதாரம் இல்லாமல் எதையாவது சொல்லிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இந்த விவகாரம் குறித்து கடந்த 23-ம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மதுரையில், இலங்கையைச் சேர்ந்த சிலர் இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயல்வதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் க்யூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறையினர் 27.9.2019-ல் வழக்கு பதிவுசெய்தனர். 2019, செப்டம்பர் 28, 29 தேதிகளில் மதுரையில் இயங்கிவந்த நான்கு டிராவல் ஏஜென்ட்டுகளின் அலுவலகம், வீடுகளில் சோதனை செய்து அன்றைய தினமே அவர்களைக் கைதுசெய்தனர். அப்போது 124 பாஸ்போர்ட்டுகள் கைப்பப்பற்றப்பட்டன. தொடர் விசாரணையில் 52 பேர் போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.

இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் மீது மதுரை க்யூ பிரிவிலும், சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கோவை க்யூ பிரிவில் 21 பேர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

மதுரை நகர க்யூ பிரிவில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் 475 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, 340 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் இந்திய பாஸ்போர்ட் பெற்ற நான்கு இலங்கைத் தமிழர்கள், 11 டிராவல் ஏஜென்ட்டுகள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்ற ஏழு நபர்கள், 13 டிராவல் ஏஜென்ட்டுகள், 14 பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், இரண்டு தபால்துறை அலுவலர்கள் என 41 பேர் குற்றம் புரிந்ததாக, உடந்தையாக இருந்ததாக கண்டறியப்பட்டு அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் இளவரசுக்கு 2022 மார்ச் 23-ல் ராமநாதபுரம் டி.ஐ.ஜி-யும், தலைமைக் காவலர் கந்தசாமிக்கு 2022 மே 20-ல் மதுரை மாநகர காவல்துறை துணை கமிஷனரும், காவலர்கள் கவியரசு, ஆனந்த் ஆகியோருக்கு 2022 மே 18-ல் சிவகங்கை எஸ்.பி-யும் குற்ற நடவடிக்கை எடுக்க முன் அனுமதி வழங்கியுள்ளனர். தபால்துறை ஊழியர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிவகங்கை தபால்துறை கண்காணிப்பாளர் 2022 ஜனவரி 31-ல் அனுமதி அளித்துள்ளார்.

மதுரை நுண்ணறிவுப் பிரிவு ஏ.சி-யாக இருந்த சிவக்குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2022, மே 17-ல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளதுடன், குற்றவாளிகள் 39 பேர் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் முன் அனுமதி வழங்கியுள்ளார்.

பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் 14 பேர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவேண்டி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முன்மொழிவு 31.12.2021 அன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சகத்திலிருந்து முன் அனுமதி இதுவரை பெறப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் விவகாரம்
போலி பாஸ்போர்ட் விவகாரம்

இந்த நிலையில், தனக்கு பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள் என்று சுரேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த மற்றொரு வழக்கை விசாரித்த நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,

``போலி பாஸ்போர்ட் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், க்யூ பிரிவு காவல்துறையினர் மூன்ரு மாதங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதன் பின்னர் ஆறு மாதங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பாஸ்போர்ட் மோசடியில் நோடல் அலுவலர் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே, சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர்.

அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேசிய பாஜக-வின் அண்ணாமலையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. அவர் இல்லையெனில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது. அவர் ஜனநாயகக் காவலர்" எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.