Published:Updated:

கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறதா மருந்தகங்கள் மீதான நடவடிக்கை... ஊட்டி சர்ச்சை!

Ooty drug store
Ooty drug store

ஊட்டியில், மூன்று இடங்களில் கடை நடத்திவரும் ஒரு மருந்தக நிறுவனம், நிர்ணயம் செய்யப்பட்டதைவிட அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தநிலையில், ஒரே ஒரு மருந்தகத்தின்மீது மட்டும் கண்துடைப்புக்கு நடவடிக்கை எடுப்பதாக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை பொதுமக்கள் அதிக அளவு வாங்கிச்செல்கின்றனர். இதனால் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Ooty drug store
Ooty drug store

இதனை சாதகமாக்கிக்கொண்ட பல மருந்தகங்கள், இவற்றை பதுக்கியும், அதிக விலைக்கு விற்றும் வருவதாகப் பல இடங்களில் இருந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு சிலர் புகார் அளித்ததன் பேரில், சுகாதாரத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இணைந்து, ஊட்டியில் உள்ள சில மருந்துக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

Ooty drug store
Ooty drug store

அப்போது, சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தனியார் மருந்துக் கடையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மருந்தகம் தொடர்ந்து செயல்பட தடை விதித்துப் பூட்டி, அறிவிப்பை ஒட்டினர். இதுபோன்று மாவட்டத்தில் யாரேனும் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்கள் எச்சரித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய ஆர்வலர்கள், "மாவட்டத்தில் அம்மா மருந்தகங்கள் உட்பட அனைத்து மருந்துக் கடைகளிலுமே கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் அதிக விலைக்குதான் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. குறிப்பிட்ட இந்த மருந்தகத்திற்கு, ஊட்டி நகரில் மூன்று மருந்தகங்கள் உள்ளன. மூன்றிலுமே அதிக விலைக்கே இந்தப் பொருள்களை விற்பனை செய்துவருகின்றனர். ஆனால், ஒரு கடை மீது மட்டும் பெயரளவிற்கு நடவடிக்கை எடுத்துச் சென்றுள்ளனர். வெறும் கண் துடைப்பிற்கு மட்டுமே நடத்துகின்றனர்" என்று புலம்புகின்றனர்.

Ooty drug store
Ooty drug store

இந்தப் புகார் குறித்து மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ''அனைத்து மருந்துக் கடைகளிலும் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை மேற்கொள்கிறோம். புகாரின் பேரில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு