Published:Updated:

தொழிலதிபர் கொடுத்த தங்க ருத்ராட்ச மாலை... கையாடல் செய்த ஊழியர்கள்? - ராமநாதசுவாமி கோயில் சர்ச்சை!

ராமநாதசுவாமி கோயில்

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு உபயமாகத் தொழிலதிபர் வழங்கிய தங்க ருத்ராட்ச மாலையை, கோயில் ஊழியர்கள் கணக்கில் காட்டாமல் மூடிமறைத்ததாகத் தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் கொடுத்த தங்க ருத்ராட்ச மாலை... கையாடல் செய்த ஊழியர்கள்? - ராமநாதசுவாமி கோயில் சர்ச்சை!

புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு உபயமாகத் தொழிலதிபர் வழங்கிய தங்க ருத்ராட்ச மாலையை, கோயில் ஊழியர்கள் கணக்கில் காட்டாமல் மூடிமறைத்ததாகத் தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ராமநாதசுவாமி கோயில்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில், காசிக்கு நிகராக பிரசித்தி பெற்றது. முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் முக்கியமான தலமாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு தினமும் தமிழகத்திலிருந்தும், பல்வேறு வட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அவ்வாறு வருபவர்களில் சில செல்வந்தர்கள் கோயிலுக்குப் பணம், நகை உள்ளிட்டவற்றை உபயமாக வழங்கிவருகின்றனர். சமீபத்தில் அப்படி செல்வந்தர் ஒருவரால் கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட தங்க ருத்ராட்ச மாலையை, கோயில் ஊழியர்கள் மூடி மறைத்து வைத்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், கடந்த 1-ம் தேதி தொழிலதிபர் ஒருவர் கோயிலுக்கு வழங்கிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ருத்ராட்ச மாலையைக் கோயில் ஊழியர்கள், கோயிலின் இணை ஆணையருக்குத் தெரியாமல் முறைகேடாக மறைத்து வைத்திருப்பதாகச் சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் அனுப்பியிருக்கிறார்.

ராமநாதசுவாமி கோயில்
ராமநாதசுவாமி கோயில்

இது தொடர்பாக சிலரிடம் விசாரித்தோம். ``கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட மகா சிவராத்திரி விழாவில், விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவரான லாட்டரிச்சீட்டு விற்பனை அதிபர் மார்ட்டின் கலந்துகொண்டார்.

கிறிஸ்தவராக இருந்தாலும் சிவன்மீதுகொண்ட பக்தியால், அங்குள்ள சிவனுக்குப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி முடிந்த ருத்ராட்ச மாலையை உபயமாகக் கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். சிவராத்திரி அன்று கோயில் இணை ஆணையர் பழனிகுமார் பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது.‌ இதனால் அங்கிருந்த கோயில் துணை பேஸ்கார் ராமநாதன் என்பவரிடம் மார்ட்டின், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலி முடிந்த ருத்ராட்ச மாலையை உபயமாகக் கொடுக்க வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

இணை ஆணையர் பணியில் இல்லாததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோயில் பேஸ்காரர்கள் ராமநாதன், முனியசாமி, விஜயன் ஆகியோர், `நாங்களே வந்து அந்தத் தங்க ருத்ராட்ச மாலையைப் பெற்றுக்கொள்கிறோம்' என்று மார்ட்டினிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு அன்றிரவே மூன்று பேரும் சென்று தங்கச் சங்கிலி முடிந்த ருத்ராட்ச மாலையை வாங்கி, இணை ஆணையருக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக தகவல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிந்து, கோயில் பணியாளர்கள் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் சிக்கிக்கொள்வோம் என பயந்து கடந்த 15 நாள்களாக மறைத்துவைத்திருந்த தங்க ருத்ராட்ச மாலையை, கோயில் இணை ஆணையர் பழனிகுமாரிடம் மூன்று பேரும் ஒப்படைக்கச் சென்றுள்ளனர். அவர் அதை வாங்க மறுத்து அவர்களைக் கண்டித்ததாகச் சொல்கிறார்கள்" என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அறநிலையத்துறையில் புகார் அளித்திருக்கும் ராமநாதபுரம் விஸ்வஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் சரவணன் நம்மிடம் பேசினார்.

``ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தார் லாட்டரிச்சீட்டு அதிபர் மார்ட்டின். ராமநாதசுவாமி கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொடுக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டிருக்கிறார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் சரவணன்
விஷ்வ ஹிந்து பரிஷத் சரவணன்

ஒரு லட்ச ரூபாய்க்கு அதிகமான பணமோ, நகையோ இணை ஆணையர் அல்லது துணை ஆணையர்தான் வாங்க வேண்டும். அப்படி வாங்கும்போது எவ்வளவு நகை வாங்கியுள்ளோம் என்பதைச் சரிபார்த்து, உபயதாரருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தகவல் தெரிவிக்க வேண்டும், இதுதான் நடைமுறை.

ஆனால், எங்களுக்குக் கிடைத்த தகவல்படி கோயில் இணை ஆணையர் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல், பேஸ்காரர்கள் உபயதாரர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குச் சென்று நகைகளை வாங்கியதாகச் சொல்லப்படுகிறது.

15 நாள்களாகியும் உபயதாரர் கொடுத்த நகை கோயிலில் ஒப்படைக்கப்படவில்லை. மேலும், சிவராத்திரி அன்று கோயில் இணை ஆணையர் பணியில் இல்லை, அவர் பணியில் இல்லையென்றால் பொறுப்பு ஆணையராவது பணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரும் இல்லை. இந்த நிலையில், 36 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகையை இணை ஆணையர் பழனிகுமாரிடம், பேஸ்காரர்கள் ஒப்படைத்ததாகவும் அவர், `என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வராமல் எப்படி நகையை நீங்கள் வாங்கினீர்கள்?' என அதை வாங்க மறுத்ததாகவும் தகவல் கிடைத்தது.

மேலும், மார்ட்டின் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட நகைகளைக் கொடுத்திருக்கலாம் என்றும், அதை இவர்கள் கையாடல் செய்திருக்கலாம் என்றும் எங்களுக்குச் சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த விவகாரத்தில் உண்மைநிலையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக, சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன். விரைவில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோயில் இணை ஆணையர் பழனிகுமாரை தொடர்புகொண்டு கேட்டபோது, ``லாட்டரி அதிபர் மார்ட்டின் தங்கம் முடிந்த ருத்ராட்ச மாலையை உபயமாகக் கொடுத்தது உண்மைதான். அது பேஸ்காரர்களிடம்தான் இருக்கிறது. இதுவரை என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து, கோயில் பேஸ்கார் ராமநாதனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ``அப்படி எதுவும் நான் வாங்கவில்லை. நான் எங்கும் போகவில்லை" என்றார். அவரிடம், ``நீங்கள் வாங்கவில்லையென்றால் வேறு யார் வாங்கியது?" என்று கேட்டதற்கு, ``நகையைக் கொடுத்தார்கள்... அந்த நகை உடனடியாக கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. ருத்ராட்ச மாலையில் தங்கம் முடிந்துள்ளதால் கோயில் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கையிலிருந்து நகை மதிப்பீட்டாளர்கள் வந்து, தங்கம் முடிந்த ருத்ராட்ச மாலையை ஆய்வு செய்த பின்னர் கருவறையில் வைக்கப்படும். மீண்டும் சொல்கிறேன் நான் சென்று வாங்கவில்லை" எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்றிரவு மாலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்திடம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ஜி.கணேசன் என்பவர் இது தொடர்பாக புகார் மனு அளித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த வழக்கறிஞர் கணேசன்
மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த வழக்கறிஞர் கணேசன்

அதில், ``ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குத் தொழில் அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் பலகோடி மதிப்புள்ள தங்க ருத்ராட்ச மணி மாலையை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். அது இதுநாள் வரையிலும் இந்து அறநிலையத்துறை கணக்கில் வராமல் இருந்துவருகிறது. இந்த மாலையைக் கோயில் பேஸ்காரர்கள் ராமநாதன், முனியசாமி, விஜயன் ஆகியோர் வாங்கியுள்ளனர்.

இந்தக் கோயில் இணை ஆணையர் பழனிகுமார், தக்கர் குமரன் சேதுபதி ஆகியோருக்குத் தெரிந்தும் கணக்கில் காட்டாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இணை ஆணையர், தக்கர், பேஸ்காரர்கள் ஆகியோரிடம் விசாரணை செய்து நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பலகோடி மதிப்பிலான தங்க ருத்ராட்ச மாலையை மீட்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்து அமைப்புகள் இந்த விவகாரம் தொடர்பாகப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல, கோயில் விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism