Published:Updated:

போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தாரா கல்லூரி மாணவர்?! - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கீழத்தூவல் காவல் நிலையம்
News
கீழத்தூவல் காவல் நிலையம்

ராமநாதபுரத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் வீடு திரும்பியதும் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகிலிருக்கும் நீர்கோழியேந்தலைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மகன் மணிகண்டன். இவர், கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். நேற்று 5-ம் தேதி மாலை பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை, போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். அப்போது, அவர் பைக்கை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்
உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்

அதையடுத்து, போலீஸார் மணிகண்டனைப் பின்தொடர்ந்து சென்று மடக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர், மணிகண்டனின் பைக், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். காவல் நிலையத்துக்கு வந்த மணிகண்டனின் பெற்றோர் லட்சுமணன், ராமலெட்சுமி, தம்பி அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், அவர் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸும் விரைந்து வந்திருக்கிறது. ஆனால், ஆம்புலன்ஸ் மருத்துவர், பரிசோதனை செய்துவிட்டு மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியலில் உறவினர்கள்
சாலைமறியலில் உறவினர்கள்

அதனால், அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ``ஸ்டேஷ்னல இருந்து கூட்டிட்டு வரும்போது நடக்கக்கூட முடியாமதான் நடந்து வந்தான். வாயில நுரை தள்ளிக் கிடந்தான். போலீஸ்காரங்க அடிச்சதுனாலதான் எம் புள்ள இறந்துபோயிட்டான். சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்க மேல நடவடிக்கை எடுக்கணும்" என்கின்றனர் மணிகண்டனின் பெற்றோர். ஆனால் மணிகண்டன், ``பாம்பு கடித்து இறந்திருக்கலாம்” என போலீஸ் தரப்பில் முதலில் விளக்கம் சொல்லப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், ``மாணவர் மணிகண்டன் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகச் சொல்லபடும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவருக்கு அறிவுரை சொல்லியே போலீஸார் அனுப்பி வைத்திருக்கின்றனர்” எனவும், மாணவர் மணிகண்டனை அவர் பெற்றோர் அழைத்துச் சென்றதற்கான கடிதத்தையும் வெளியிட்டு மாவட்ட எஸ்.பி கார்த்திக் விளக்கமளித்தார்.

அதையடுத்து, நேற்றிரவு மணிகண்டனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்திருக்கிறார்.

உயிரிழந்த மணிகண்டனின் தாய் மற்றும் உறவினர்கள்
உயிரிழந்த மணிகண்டனின் தாய் மற்றும் உறவினர்கள்

போலீஸார் மணிகண்டனின் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். போலீஸார் தாக்கியதால் மணிகண்டன் உயிரிழந்தாகச் சொல்லப்பட்டுவந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம்தான் மணிகண்டனின் இறப்புக்கான காரணம் தெரியவரும். மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தால் முதுகுளத்தூரில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கின்றன.