Published:Updated:

கள்ளக்குறிச்சி: காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்! - `பொய்வழக்கு; சித்ரவதை’ எனப் புகார்

பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்து, அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிச் சமூகத்தினர் ஐந்து பேரை காவல்துறை அதிகாரிகள் பொய் வழக்கு பதிந்து, அழைத்துச் சென்று சித்திரவதை செய்வதாக புவனேஸ்வரி என்பவர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் கடந்த 16-ம் தேதி புகார் அளித்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புவனேஸ்வரி தன் மனுவில், `நவம்பர் 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 11:45 மணியளவில் சீருடை அணியாத காவலர்கள் சிலர் திடீரென எங்கள் இருப்பிடத்துக்குள் புகுந்து, என் கணவர் பிரகாஷ் (25), உறவினர்கள் தர்மராஜ் (35), செல்வம் (55) ஆகியோரை அடித்து இழுத்துச் சென்றனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாமல் மறுநாள் (15.11.2021) காலை சின்னசேலம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தபோது, காவலர்கள், `அவர்கள் இங்கில்லை. கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது அங்கேயும் இல்லை. அதனால் காவல் கண்காணிப்பாளருக்கும், துணை காவல் கண்காணிப்பாளருக்கும் இணையதளம் வாயிலாகப் புகார் மனு அளித்தோம்.

``நள்ளிரவில் விசாரணைக்கு அடித்து இழுத்துச் சென்றார்கள்!'' - மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடி பெண் புகார்
புகாரளிக்க வந்த பெண்கள்
புகாரளிக்க வந்த பெண்கள்

இதற்கிடையில், காவல்துறையினர் மீண்டும் வந்து பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய இருவரையும், வேனில் அடித்து அழைத்துச் சென்றுவிட்டனர். பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதாலும் எங்களைக் காவலர்கள் தொடர்ந்து அச்சுறுத்திவருகின்றனர். எனவே, அழைத்துச் செல்லப்பட்ட ஐந்து பேரையும் விடுவிக்க வேண்டும். எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகளை அடித்து அடாவடியாக இழுத்துச் சென்ற 15 காவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட ஐந்து பேரில் செல்வம், பரமசிவம் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை (16.11.2021) இரவு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில், செல்வம் என்பவரிடம் பேசினோம். ``நான் கொங்கராபாளையத்தை சேர்ந்தவன். சின்னசேலத்தில என் மகளை கட்டிக் கொடுத்திருக்கேன். எனக்கு ஒரு பேரப்பிள்ளை இருக்கான். அவனுக்குப் போன ஞாயிற்றுக்கிழமை (14.11.2021) பிறந்தநாளு. அவனுக்கு டிரெஸ் வாங்கிட்டுப்போய் குடுத்துட்டு, பிறந்தநாள் கொண்டாடினோம். அன்னைக்கு நல்ல மழை. அதனால `மழை நல்லா பெய்யுது. இங்கேயே ராத்திரி தங்கிட்டு விடிய காத்தால போங்கப்பா' அப்படின்னு என் மகள் சொல்லுச்சு. அதனால, அன்னைக்கு ராத்திரி அங்கேயே படுத்துக்கிட்டோம். அப்போ நடுராத்திரி நேரம் இருக்கும், போலீஸ்காரங்க வந்து எழுப்பினாங்க. அந்த போலீஸ்ல சிலரை முன்னாடியே எனக்குத் தெரியும். `ஏன் சார் எழுப்புறீங்க...’ அப்படின்னு கேட்டேன். 'நீ எங்கடா இங்கே வந்த?' அப்படின்னு என்னையக் கேட்டாங்க. `இந்த ஊர்லதான் என் பொண்ணைக் கட்டிக் கொடுத்திருக்கேன். பேரன் பிறந்தநாளுக்கு வந்தேன்’னு சொன்னேன். 'சரி வா'னு கையோடு கூட்டிட்டு வந்துட்டாங்க.

பரமசிவம், செல்வம்
பரமசிவம், செல்வம்

என்கூடவே சேர்த்து பிரகாஷ், தர்மராஜ் ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு வந்தாங்க. எங்ளைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டு போகும்போதே கண்ணைக் கட்டிட்டாங்க. அங்க இருந்து ஒரு காட்டுக்குள்ள இருக்கிற இடத்துக்கு எங்களை அழைச்சுக்கிட்டு போனாங்க. அது கீழ்குப்பம் காடுனு நினைக்கிறேன். அப்போ மழை பெய்ஞ்சதால பக்கத்துல இருக்குற கல்யாண மண்டபத்துக்கு அழைச்சுக்கிட்டு போனாங்க. தர்மராஜுக்குச் சொந்தம் யார்னு கேட்டு, கொங்கராபாளையத்தில் இருந்த சக்திவேல், பரமசிவம் ரெண்டு பேரையும் செவ்வாய்க்கிழமை காலைல பிடிச்சாங்க. எங்க ஒவ்வொரத்தரையும் ஒவ்வொரு கார்ல அழைச்சுக்கிட்டு போனாங்க. ஒவ்வொருத்தரா மண்டபத்துக்கு உள்ள கூட்டிக்கிட்டு போயி கண்ணைக் கட்டிட்டு 'நகையைக் கொடு' அப்படின்னு கேட்டு அடிச்சாங்க. அந்த அடி எங்க புடிச்சிக்குதுன்னு தெரியாம இருக்கிறதுக்கு கண்ணைக் கட்டிட்டு அடிச்சாங்க. தர்மராஜும் பிரகாஷும் சேர்ந்து, சின்னசேலம் பெட்ரோல் பங்க் பக்கத்துல பன்றி இறைச்சிக் கடை நடத்திட்டு வர்றாங்க. ஆனா, `பெட்ரோல் பங்க்ல இருக்குற கேமராவுல உங்க படம் விழுந்திருக்கு. நீ திருடத்தானே போனே'னு கேட்டு அடிச்சாங்க. `இல்லைங்க... நாங்க வியாபாரத்துக்கு எப்பவுமே போவோம்' அப்படின்னு அவங்க சொன்னதையும் கேக்காம அடிச்சாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செவ்வாய்க்கிழமை நைட்டு 1:00 மணி இருக்கும், என்னையும் பரமசிவத்தையும் 'நீங்க போங்க' அப்படின்னு சொல்லி விட்டுட்டாங்க. அந்த பயத்தோடவே வந்து சின்னசேலத்தில இருந்து ஒரு ஆட்டோ புடிச்சு கள்ளக்குறிச்சிக்கு வந்தோம். அங்க இருந்து இன்னொரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டோம். நேத்து (17.11.2021) காலையில போலீஸ் வீட்டுக்கு வந்து... 'விசாரணைக்குக் கூப்பிட்டா ஒழுங்கா வரணும்!' அப்படின்னு சொல்லி, எழுதி வாங்கிக்கிட்டு போட்டோ புடிச்சுக்கிட்டுப் போனாங்க. பிரகாஷ், தர்மராஜ் மேல திருட்டு கேஸ் போட்டிருக்காங்க. நாங்க இந்த மாதிரி தப்பெல்லாம் பண்றது இல்லைங்க. கூலி வேலைக்குத்தான் போவோம். எங்களைப் புடிச்சுக் கொண்டு வந்து இந்த மாதிரியெல்லாம் கஷ்டப்படுத்துறாங்க. என் மேலகூட ஏற்கெனவே பொய் திருட்டு கேஸ் போட்டிருக்காங்க. அதனாலதான் அந்த போலீஸ்காரங்களைத் தெரியும்னு சொன்னேன். சக்திவேல் எங்க இருக்குறாரு, அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியலைங்க. சக்திவேலு ஒரு இடத்தில கூலிக்கு டிராக்டர் ஓட்டுனாப்ள. அந்த டிராக்டர் காரருடைய நம்பரை சக்திவேல் போன் மூலமா எடுத்து அவரையும் போலீஸ்காரங்க விசாரிக்கிற மாதிரி சொல்லிக்கிறாங்க. சக்திவேலை நீதிமன்றத்துல ஆஜர்படுத்தப்போறதா சொல்லுறாங்க. மேற்படி விவரம் எதுவும் தெரியலைங்க" என்றார்.

கண்ணகி முருகேசன் கொலை வழக்கு: `உங்க கதையை முடிச்சிடறோம்!’ - முருகேசனின் பெற்றோர் மீது தாக்குதல்
புகார் மனு
புகார் மனு

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி காவல்துறை தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ``கடந்த பிப்ரவரி மாதம், 14-ம் தேதி பெரியசிறுவத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டின் அருகே உள்ள ஜானகிராமன் என்பவரது வீட்டில், இரவு நேரத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தூங்கிக்கொண்டிருந்தவர்களிடம் ஐந்து பவுன் தாலி, மூன்று பவுன் தங்க செயினை பறித்துச் சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு தடயவியல் நிபுணர்கள் மூலம் எடுக்கப்பட்ட கைரேகை தடயத்தை பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, பிரகாஷ் என்பவரின் கைரேகை ஒத்துப்போனது. அதனால், அவர் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார்.

அதேபோல, அம்மையகரத்தைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர் வெளியூருக்குச் சென்றுவிட்டு 12.01.2021 அன்று காலை 6 மணிக்குத் திரும்பி வந்து பார்த்தபோது அவர் வீட்டில் 400 கிராம் எடைகொண்ட வெள்ளிப் பொருள்கள், 25,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டிருக்கிறது. கைரேகை நிபுணர்கள் மூலம் கைரேகைத் தடயம் சேகரிக்கப்பட்டு, பழைய குற்றவாளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு சோதனை செய்ததில் தர்மராஜ் என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனதால் அவரும் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார்.

தம்பி வாங்கிய கடன்; அண்ணனைக் கடத்தி மிரட்டிய ஆய்வாளர்! - 7 பேர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு

தர்மராஜ், பிரகாஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது, தங்களுடன் இன்னும் சிலரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். அதன்படி சக்திவேல் என்பவரை அழைத்து விசாரித்தபோது அந்த நபரும் கொள்ளைக் குற்றங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

அதன் அடிப்படையில், இவர்கள் கள்ளக்குறிச்சியில் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்திருக்கின்றனர். அவற்றில், சுமார் 25 சவரன் நகைகள் சின்னசேலம் நகைக்கடையிலும், 13 சவரன் நகைகள் கள்ளக்குறிச்சி நகைக்கடையிலும் மீட்கப்பட்டிருக்கின்றன.

காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்
காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்

தர்மராஜ் ,பிரகாஷ் இருவரும் 17-ம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். சக்திவேலும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படவிருக்கிறார். பரமசிவம், செல்வம் ஆகியோரை விசாரித்ததில், அவர்களுக்கும் இந்தக் குற்றச் சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லை எனத் தெரியவந்ததால், குடும்பத்தாரிடம் அவர்கள் பாதுகாப்பாக நேற்று முன்தினம் (16.11.2021) அனுப்பிவைக்கப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பழங்குடிகள் விவகாரத்தில், போலீஸார் திட்டமிட்டு பழங்குடியினர் மீது பொய் வழக்கு பதிந்து, அடித்துச் சித்ரவதை செய்திருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேபோல, 14-ம் தேதியே தர்மராஜ், பிரகாஷ் இருவரையும் அழைத்துச் சென்ற காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, 16-ம் தேதி மாலை 3 மணியளவில்தான் சின்னசேலம் கூகையூர் ரோடு ரயில்வே கேட் அருகே கைதுசெய்ததாகத் தெரிவித்திருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு