Published:Updated:

உடைக்கப்பட்டதா எம்.எல்.ஏ-வின் கை?-மழுப்பும் போலீஸ்; கொந்தளிக்கும் எம்.எல்.ஏ; குழப்பத்தில் பினராயி

சிந்து ஆர்

கை உடைந்ததற்கான சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்டவற்றை எர்ணாகுளம் கலெக்டரிடம் ஒப்படைத்து நியாயம் கேட்டுள்ளார் எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ. எல்தோ ஆபிரகாம்
எம்.எல்.ஏ. எல்தோ ஆபிரகாம்

கேரள மாநிலத்தில் பேரணி நடத்திய சி.பி.ஐ எம்.எல்.ஏ மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதில் கை உடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறிய காயம்தான் எனச் சாதித்து வருகின்றனர் போலீஸ் அதிகாரிகள். இது சம்பந்தமாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார் முதல்வர்.

தனியார் மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுத்தார் எம்.எல்.ஏ. எல்தோ ஆபிரகாம். அதில் கை உடைந்திருப்பதாக அறிக்கை வந்தது. இதையடுத்து காவல்துறையினரைக் கடுமையாக விமர்சித்த எம்.எல்.ஏ, கை உடைந்ததற்கான சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்டவற்றை எர்ணாகுளம் கலெக்டரிடம் ஒப்படைத்து நியாயம் கேட்டுள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஞாறக்கல் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடந்த 23-ம் தேதி பேரணி நடத்தியது. எர்ணாகுளம் டி.ஐ.ஜி அலுவலகம் முன்பு நடந்த இந்தப் பேரணிக்கு, முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி போலீஸார் தடியடி நடத்தினர். இதில் அந்தக் கட்சியின் எர்ணாகுளம் மாவட்டச் செயலாளர் ராஜூவின் மண்டை உடைந்தது. மூவாற்றுப்புழா எம்.எல்.ஏ எல்தோ ஆபிரகாமின் கை உடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கட்சியின் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டது.

மூவாற்றுப்புழா எம்.எல்.ஏ எல்தோ ஆபிரகாம் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எம்.எல்.ஏ-வின் கை உடையவில்லை சிறு சிதைவுதான் ஏற்பட்டுள்ளது என அறிக்கை கொடுத்ததாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் மூவாற்றுப்புழாவில் ஒரு தனியார் மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுத்தார் எம்.எல்.ஏ எல்தோ ஆபிரகாம். அதில் கை உடைந்திருப்பதாக அறிக்கை வந்தது. இதையடுத்து காவல்துறையினரைக் கடுமையாக விமர்சித்த எம்.எல்.ஏ, கை உடைந்ததற்கான சி.டி.ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்டவற்றை எர்ணாகுளம் கலெக்டரிடம் ஒப்படைத்து நியாயம் கேட்டுள்ளார். காவல்துறை இதுபோன்று ஆவணங்களை மாற்றி எழுதுவதில் கை தேர்ந்தவர்கள் என்று எம்.எல்.ஏ எல்தோ ஆபிரகாம் விமர்ச்சித்துள்ளார்.

எம்.எல்.ஏ. எல்தோ ஆபிரகாம்
எம்.எல்.ஏ. எல்தோ ஆபிரகாம்

இதற்கிடையில், `சொந்தக் கட்சியினரைக் காப்பாற்ற முடியாதவர்' என சி.பி.ஐ மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்திரனை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போஸ்டர் ஒட்டிய மூன்றுபேரை கட்சியைவிட்டு நீக்கியுள்ளது கேரள சி.பி.ஐ தலைமை. மேலும், ஆளும் சி.பி.எம் கட்சியின் கூட்டணிக்கட்சியானா சி.பி.ஐ, எம்.எல்.ஏ கை உடைந்திருப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் மனு அளித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனையில் ஆழ்ந்திருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.