Published:Updated:

``எஸ்.ஐ சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, அடிச்சாரு!" - தீக்குளித்த இளைஞர்... வேலூர் சர்ச்சை

சரத்குமார்

மேல்பாடி காவல் நிலைய எஸ்.ஐ சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``எஸ்.ஐ சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, அடிச்சாரு!" - தீக்குளித்த இளைஞர்... வேலூர் சர்ச்சை

மேல்பாடி காவல் நிலைய எஸ்.ஐ சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சரத்குமார்

வேலூர் மாவட்டம், திருவலம் அருகேயுள்ள குகையநல்லூர் மாந்தோப்புப் புதிய காலனியைச் சேர்ந்தவர் ராமன். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். 27 வயதாகும் இரண்டாவது மகன் சரத்குமார், நெல் அறுவடை இயந்திரம்வைத்து தொழில் செய்கிறார். இந்த நிலையில், மேல்பாடி காவல் நிலையத்தில் பணிபுரியும் கார்த்திக் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி அடித்து துன்புறுத்துவதாகக் குற்றம்சாட்டி, அந்தக் காவல் நிலையத்தின் அருகிலேயே நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி, தீக்குளித்தார் சரத்குமார். உடல் வெந்த நிலையில், சாலையில் உயிருக்குப் போராடிய சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில், மருத்துவர்களின் கண்காணிப்பிலிருக்கிறார். அவர் தீக்காயங்களுடன் அலறித் துடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரின் நெஞ்சைப் பதறவைக்கின்றன.

சரத்குமார்
சரத்குமார்

அந்த வீடியோ காட்சிகளில் பேசும் சரத்குமார், ‘‘மேல்பாடி, திருவலம் காவல் நிலைய போலீஸார் என்னைத் தொடர்ந்து துன்புறுத்துறாங்க. நான் பட்டியலின இளைஞர் என்பதால் மேல்பாடி எஸ்.ஐ கார்த்திக் என்னை சாதிப் பெயரைச் சொல்லி அடிக்கிறார். சில நாள்களுக்கு முன்பு செருப்பால் அடிச்சாரு. எப்போது பார்த்தாலும், சாதிப் பெயரைச் சொல்லியே அடிக்கிறார். என் தம்பி கேஸுல என்னையும் சேர்த்துவிட்டுட்டாங்க. அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு சொன்னாலும் மிரட்டுறாங்க. அறுவடைப் பணம் வாங்குறதுக்காகப் போய்க்கிட்டிருந்த என்னை மடக்கி, எஸ்.ஐ கார்த்திக் ஹெல்மெட்டாலயே என் தலையில அடிச்சாரு. அப்புறம் கன்னத்துல அறைஞ்சாரு. எனக்கு வாழப் பிடிக்கலை. அதுனாலதான் கொளுத்திக்கிட்டேன்’’ என்கிறார் உறையும் குரலில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக, சரத்குமார் உறவினர்களிடம் பேசினோம். ‘‘சரத்குமாரின் தம்பி அஜீத்குமார்மீது 2019- ல் மைனர் பெண்ணைக் கடத்தியதாக வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க. அது வேற சாதிப் பொண்ணு. அந்த வழக்குல சரத்குமார் பெயரையும் சேர்த்துவிட்டுட்டாங்க. வழக்கு கோர்ட்டுல நடந்துக்கிட்டு இருந்தது. ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியும், சரத்குமார் போகலைனு போலீஸ்காரங்க சொல்றாங்க. அது, திருவலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வழக்கு. அந்த வழக்கையெல்லாம் சொல்லி, மேல்பாடி எஸ்.ஐ கார்த்திக் சாதிவெறியில நடந்துக்கிறாரு. எஸ்.ஐ கார்த்தி தொடர்ந்து அடிச்சதுனாலதான் சரத்குமார் தற்கொலை முடிவுக்குப் போயிட்டான்’’ என்றனர் .

காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘‘சரத்குமார் ஆரம்பத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டார். அதில் கிடைத்த வருமானத்தில்தான் நெல் அறுவடை இயந்திரம் வாங்கினார். தொடர்ந்து, மணல் கடத்தல் புகார் வந்தது. அதுமட்டுமின்றி, பெண் கடத்தல் வழக்கிலும் தொடர்பு இருப்பதால் அவரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். சரத்குமார் மூன்று வழக்கறிஞர்களுடன் வந்து போலீஸாருடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்துவந்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பதாலும் போலீஸாரை மிரட்டியிருக்கிறார். இப்போது தீக்குளித்துவிட்டு போலீஸுக்கு எதிராக சாதிப் பிரச்னையைத் தூண்டிவிடுகிறார்கள்’’ என்றனர்.

வெந்து துடித்த நிலையில்...
வெந்து துடித்த நிலையில்...

இதனிடையே, புகாருக்குள்ளான எஸ்.ஐ கார்த்திக்கைக் காப்பாற்றும் நோக்கத்தில், சரத்குமாருக்கு எதிராகப் புகார்களை காவல்துறையினர் திரட்டிவருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பெண் ஒருவர் சரத்குமார் உறவினரிடம் பேசும் ஆடியோக்களும் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆடியோவில், ‘‘என் ஊருக்குள்ள நிறைய போலீஸ்காரங்க வந்திருக்கிறாங்க. சரத்குமாருக்கு எதிராக எதையோ எழுதி, என்கிட்ட கையெழுத்துக் கேட்கிறாங்க’’ என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீக்குளித்த சரத்குமாரின் அண்ணன் அன்பரசனிடம் பேசினோம். ‘‘என் தம்பியின் உடல்நிலை மிக மோசமாக இருக்கிறது. சாதி வெறிப்பிடித்துத்தான் போலீஸ்காரங்க தாக்கியிருக்கிறாங்க. எஸ்.ஐ கார்த்திக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண் கடத்தல் வழக்கும் முடித்துவைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பெண் நீதிமன்றத்தில் ஆஜராகி, என் தம்பிகளுக்கும் வழக்குக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டார். பழைய மணல் கடத்தல் வழக்குகளைக் காரணம் காட்டி, திருவலம், மேல்பாடி போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து வாரத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து ‘சரத்குமார் எங்கே?’ என்று கேட்டு போலீஸ்காரர்கள் மிரட்டுறாங்க. ஏதாவது வழக்கில் குற்றவாளிகள் சிக்கலைன்னா, என் தம்பியை பிடிச்சுக்கிட்டுப் போக வந்துடுவாங்க. ‘சார்.. இப்போ எல்லாம் அவன் மணல் கடத்துறது கிடையாது. நெல் அறுவடை இயந்திரம் வெச்சுக்கிட்டு உழைச்சு சாப்பிடுறான். எங்களை ஏன் தொந்தரவு பண்றீங்க’னு கேட்டாலும், சாதிப் பெயரைச் சொல்லித்தான் மிரட்டுறாங்க. எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என்றார் கண்ணீரோடு!

சரத்குமார்
சரத்குமார்

இது தொடர்பாக விளக்கம் கேட்க வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணனின் செல் நம்பரைத் தொடர்புகொண்டோம். ரிங் அடித்ததே தவிர அவர் எடுக்கவில்லை.

இதையடுத்து, காட்பாடி டி.எஸ்.பி பழனியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘சரத்குமார் மீது திருவலம், சிப்காட், மேல்பாடி ஆகிய காவல் நிலையங்களில் மணல் கடத்தல் வழக்குகள் இருக்கின்றன. மைனர் பெண் கடத்தல் வழக்கிலும் அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துவந்ததால், போலீஸார் அழைத்து விசாரித்திருக்கிறார்கள். எஸ்.ஐ கார்த்திக் சாதிரீதியாகத் துன்புறுத்தியதாக எந்தப் புகாரும் வரவில்லை. அவர் அப்படியான நபரும் இல்லை. சரத்குமார் தீக்குளிக்காமல், மேலதிகாரிகளை அணுகி முறையாகச் சொல்லியிருக்கலாம். என்ன நடந்தது என்பது குறித்து சட்டரீதியாக விசாரித்துவருகிறோம். இது, சாதிப் பிரச்னை கிடையாது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism