Published:Updated:

திருப்பத்தூர்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு! - 18 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், முறைகேடு செய்த பி.டி.ஓ-க்கள் உட்பட 18 அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகேயுள்ள புருஷோத்தம குப்பம் கிராமத்தில், குடிசை வீட்டில் வசித்துவந்தவர் 60 வயது பெண் ஐயம்மாள். இவர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். பயனாளியாக அவர் தேர்வு செய்யப்பட்டபோதிலும், வீடு கட்டுவதற்கான நிதியைக் கொடுக்காமல் துறை அலுவலர்கள் கையாடல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி அதிகாலை பெய்த கனமழைக்கு குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில், ஐயம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்
பிரதமரின் வீடு கட்டும் திட்டம்

‘வீடு கட்டிக் கொடுத்திருந்தால், ஐயம்மாள் மரணமடைந்திருக்க மாட்டார். நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டபோது, முறைகேடுகள் அம்பலமாகின.

ஆலங்காயம் ஒன்றியத்தில் மட்டும் 2017-2018-ம் ஆண்டுகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்ட 23 பேருக்கு நிதி சென்று சேராதது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில், சுவர் இடிந்து மரணமடைந்த ஐயம்மாளும் ஒருவர். அவர்களுக்கான 35,31,517 ரூபாயை அதிகாரிகளே கையாடல் செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும், இறந்தவர்களின் பெயர்களையெல்லாம் பயனாளிகள் பட்டியலில் சேர்த்து பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திரட்டினர்.

கையாடல்
கையாடல்

இதையடுத்து, ஆலங்காயம் கிராம ஊராட்சிகளின் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாகப் பணியாற்றிய ரமேஷ்குமார், வசந்தி, வின்சென்ட் ரமேஷ் பாபு உட்பட 18 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலர்கள் அனைவரும் தற்சமயம் இட மாறுதலாகி பல்வேறு நிலைகளில் பணிபுரிந்துவருகிறார்கள். அவர்களில், 11 பேருக்கு 17 ஏ குற்ற குறிப்பாணை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, லஞ்ச ஒழிப்புத்துறை.

அடுத்த கட்டுரைக்கு